(தலித் முரசு நவம்பர் 2007)
- முகப்புmain page
- எம்மைப் பற்றி the author
- Contact ussay hello
- Subscribe to RSSkeep updated!
Wednesday, December 26, 2007
ஜாதி வெறி கொண்டாட்டங்கள்
(தலித் முரசு நவம்பர் 2007)
Saturday, December 22, 2007
விபத்துகள் தற்செயலானவை படுகொலைகள் திட்டமிட்டவை
- இளம்பரிதி
_
இனியும் எங்களால் தாக்குப் பிடிக்க முடியாது
இரத்தத்தில் வரையப்பட்டிருக்கும் இந்த வார்த்தைகளை
வாசிப்பது பேரரசருக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்குமானால்
இழுக்கற்றதாகக் கிடக்கட்டும் எங்கள் பிணங்கள்
- விக்டர் செகலென்
கருப்பு ஞாயிறுகளின் வரலாறு தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. கடந்த ஆண்டின் இறுதியில் ‘சுனாமி’ எனும் கடற்கோள் அழிவு துவக்கி வைத்த மரண ஓலம், இந்த ஆண்டின் இறுதியில் சூழ்ந்து நிற்கும் மழை வெள்ளத்தால் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் பெருமழை தமிழகத்தை வெள்ளக் காடாக மாற்றியதன் விளைவு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் வாழ்க்கை நிலத்தினின்று பெயர்ந்து நீரில் அமைந்தது. தற்காலிகமாகவே எனினும் வெள்ள நீரால் வீடுகள், வயல்வெளிகள், பயிர்கள், சாலைகள் என அனைத்தும் கடும் பாதிப்புக்குள்ளாகி இயல்பு வாழ்க்கை சீர்கெட்டது. மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை முன்னூரைத் தாண்டியது. பட்டுக் கோட்டைக்கு அருகிலும் இராமநாதபுரம் மாவட்டம் சனவேலிக்கு அருகிலும் இரண்டு பேருந்துகள் வெள்ள நீரால் இழுத்துச் செல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த கொடுமை நிகழ்ந்தது. இயற்கையின் பேராற்றலுக்கு முன்னே, மனித எதிர்வினை செயலற்றுப் போனது. இது புரிந்து கொள்ளவும் பொறுத்துக் கொள்ளவும் கூட சாத்தியமுள்ளது.
ஆனால் தமிழகத்தின் தலைநகரில் நாற்பது நாட்கள் இடைவெளியில் நடந்து முடிந்திருக்கும் கொடூர நிகழ்வுகள் இயற்கையின் பேராற்றலையே எள்ளி நகையாடச் செய்து விட்டன. கடந்த அக்டோபர் மாத இறுதியில் 26, 27 தேதிகளில் பெய்த பெரு மழையில் தலைநகர் சென்னை தத்தளித்தது. வடசென்னையின் தாழ்வான பல பகுதிகள் நீரில் மிதந்தன. குறிப்பாக வியாசர்பாடியை உள்ளடிக்கிய பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்ப ஒரு வாரகாலம் ஆனது. உழைக்கும் மக்களின் ஒண்டுக்குடித்தன வாழ்க்கை, அற்ப-சொற்ப உடைமைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இழந்த மக்கள் ஏங்கி நின்றனர். குமுறிய மக்கள் வீதிக்கு வந்தனர். சாலை மறியல், உண்ணாவிரதம் என நிவாரணம் வேண்டி ஆங்காங்கே போராட்டங்கள் நிகழ்ந்தன. அரசு எந்திரம் ஆலோசித்தது. அவசர கதியில் நிவாரண நடவடிக்கைகளில் இறங்கியது. அதிகார தலைக்கணம் எச்சில் காவுகளை நிவாரணம் என்ற பெயரில் வீதியில் வீசியெறிந்து தலைப்பட்டது. இதை இப்படியில்லாமல் வேறு எப்படியும் விமர்சனம் செய்ய இயலாது.
சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் அதிகாலை நான்கு மணியளவில் வெள்ள நிவாரணம் பெறக் கூடினர் அப்பகுதி மக்கள். கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்ற பரிதவிப்பு தொற்றிக் கொள்ள, நுழைவு வாயிலின் கதவை உடைத்துக் கொண்டு, வெள்ளமென நுழைந்த மக்கள் கூட்டம் நெரிசலுக்கு உள்ளாகி, சிட்டம்மாள்(71), சுப்பம்மாள்(54), குஞ்சரம்மாள்(70), ஜெய்லானி (22), கஸ்தூரி(60) என ஆறு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 ரேசன் கடைகளில் டோக்கன் பெற்ற 25 பகுதிகளைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே இடத்தில் ஒரே கவுண்டரில் நிவாரணம் வழங்க தீர்மானித்ததும் திட்டமிட்டதும் நிர்வாக எந்திரத்தின் பொறுப்பற்ற செயல். நீதி விசாரணைக் கமிஷன் அமைக்கக் கோரி தி.மு.க., மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர். நடந்து முடிந்த கொடுமைக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளாத அரசு, வதந்தியால் வந்த வினை என மக்களின் கோபத்தை திசை திருப்பி அலட்சியம் செய்தது.
அடுத்த பெருமழையில் மீண்டும் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. கடுமையாகப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்றான எம்.ஜி.ஆர். நகர் பகுதி மக்களுக்கு நிவாரணம் தரப்போவதாக அரசு அறிவித்தது. சென்னை எம்.ஜி.ஆர். மார்க்கெட் அருகில் அமைந்திருக்கும் மாநகராட்சி அறிஞர் அண்ணா முன்மாதிரி உயர்நிலைப் பள்ளியில் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் 8,566 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் பெற டோக்கனும், நிவாரண உதவியும் வழங்க முடிவெடுத்த 2,989 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பிறகு, மீதி உள்ள 5,577 குடும்பத்தினருக்குக் கடந்த டிசம்பர் 18 அன்று நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. மீண்டும் ஒரு கறுப்பு ஞாயிறு படுகொலைகளுக்கான நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். நகர் சந்தைக்கும் அண்ணா முன்மாதிரி உயர்நிலைப் பள்ளியின் நுழைவு வாயிலைக் கொண்ட சுற்றுச் சுவருக்கும் இடைப்பட்ட சுமார் 8அடி அகலமுள்ள குறுகிய பாதையில் அந்தக் கறுப்பு ஞாயிறின் அதிகாலை மூன்று மணிக்கு வெள்ள நிவாரணம் பெற, முன்வரிசையில் இடம் பிடிக்க, மக்கள் கூடத் தொடங்கினர். பயங்கரமான படிப்பினை ஒன்று நிகழ்ந்திருந்தும் கூட, அண்ணா, எம்.ஜி.ஆர். வழி வந்ததாகச் சொல்லிக் கொள்ளும் ஜெயலலிதாவின் திராவிட இயக்க அரசுக்கு மக்களின் நலன் குறித்த அக்கரை மேலோங்கவில்லை. பத்துகளில், நூறுகளில் கூடத் தொடங்கிய மக்களைக் கட்டுப்படுத்தி ஒழுங்கு செய்ய வேண்டிய காவல்துறை இரத்த சாட்சியங்களுக்கு நான்கு கடைநிலை காவலர்களை மட்டுமே வேடிக்கை பார்க்க நிறுத்தியிருந்தது. ஒழுங்கமைக்கப் பட்ட மக்கள்திரள், போராட்டங் களுக்கு வீதிக்கு வரும் வேளையில், உட்புகுந்து, மிருகவெறி கொண்டு தாக்கி சிதறடிக்கும் காவல்துறைக்கு ஒழுங்கு என்பதன் பொருள் வேறானதாகத் தான் இருக்க முடியும்.
இறுதியில் அது நடந்தே முடிந்தது. ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் கூட்டம் முண்டியடித்து, பள்ளிக் கூட நுழைவு வாயிலின் கதவுகள் திறக்கப்பட்டோ அல்லது உடைக்கப்பட்டோ உள் நுழைந்த மக்கள் கூட்டம் ஒருவர் மீது ஒருவர் தடுக்கி விழ, மூச்சுத் திணறி படுகொலையானவர்களின் எண்ணிக்கை விடியற்காலையில் 42 ஆக இருந்தது. வழக்கம் போல இறந்து போனவர்களுக்கு மன்னிக்கவும் கொல்லப்பட்டோர்களுக்குக் கருணைத் தொகையாக அம்மாவின் பொற்கரங்கள் ஒரு இலட்சம் ரூபாயும் அழுது அரற்றியவர்களுக்கு ஆறத் தழுவலும் செய்து சரி செய்ய முயற்சித்தன. எம்.ஜி.ஆர். நகரில் அன்று இரவு முழுவதும் வீதி தோறும் பிணங்களைச் சுற்றிக் குழுமிய உறவுகளின் அழுகுரலும், அசம்பாவிதம் எதுவும் நிகழா வண்ணம் அவ்வப்போது காக்கிகளின் அணிவகுப்பும் ஒருசேர கோபமூட்டின. ஆனால் பொதுச்சமூகம் பிரக்ஞையற்று அமைதி காத்தது.
2000 ரூபாய் ரொக்கப் பணம், 10 கிலோ அரிசி, 1லிட்டர் மன்ணெண்ணெய், வேட்டி, சேலை என ஒரு சாமான்ய குடும்பத்தின் அரைமாத வாழ்க்கைக்கு போதுமான இந்த நிவாரணத்திற்காக அலை மோதிய மக்கள் கூட்டத்தைக் கொஞ்சம் கருணையோடும் அதிகம் கேலிகளோடும் நையாண்டியாய் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறது, எவ்விதத்திலும் பாதிக்கப்படாத மேட்டுக்குடி வர்க்கம். ‘இலவசம்’ என்ற சொல்லின் சுயமரியாதையற்ற பொருளைக் கடந்து நாற்பது ஆண்டுகளாக, தமிழக மக்களின் பண்பாட்டு விழுமியங்களுக்குள் திணித்து, மந்தைக் கலாச்சாரத்தை உருவாக்கிய பெருமிதத்தோடும், திமிரோடும் கொக்கரிக்கிறது சுயமரியாதை இயக்க வழிவந்த திராவிட இயக்கப் பரிணாம வளர்ச்சி. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், அது வாங்கினால் இது இலவசம், 50 சதவீத தள்ளுபடி என்ற பொய்யான பிரச்சாரங்களோடு மூர்க்கத்தனமாக ஒரு வணிக சமூகம் இங்கு ‘உழைப்பால்’ முன்னேறிக் கொண்டிருக்கிறது. மந்தைக் கூட்டமென மக்களை நசுக்கிப் பிழிந்து, ஏய்த்து வளரும் வணிகக் கூடாரத்தின் உயர்ந்த பட்ச வடிவமே இந்த சுரண்டுகிற ஊழல் அரசு. திராவிட இயக்கப் பணிகளின் பயனாளிகளாக கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என அவரவர் காலத்திற்கான கடமைகள் செவ்வனே செய்யப்பட்டு வருவதை மக்கள் அறிந்து கொள்ளத்தான் அவகாசமில்லை.
தனியார் மயம், தாரளமயம், உலகமயமாக்கல் சூழலில் எலிக்கறி தின்ன வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் காத்திருக்கிறது. வேலையின்மை, வறுமை, அன்றாட வாழ்வின் போதாமை நெட்டித்தள்ள நிவாரணங்களுக்கும் இலவசங்களுக்கும் முண்டியடிக்கும் மக்கள் கூட்டத்தை மந்தையென உருவாக்கி வரும் ஒரு அதிகார வர்க்கம், கடந்த காலங்களில் நிகழ்ந்து போன அத்தனை துயரங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கிறது. பொறுப்பை உணராத அரசுகளுக்கு, அதிகார வர்க்கத்திற்கு, ஆணவத் தலைகளுக்குப் பொறுப்பை காவல்துறை போதிய பாதுகாப்புத் தரவில்லை என குற்றம் சாட்டுகிறது நடுத்தர வர்க்கம். ஒரு குடிமைச் சமூகத்தின் அடையாளம் போலீஸ் ராஜ்ஜியமல்ல.
உணர்த்த வேண்டிய கடமை மக்களைச் சார்ந்தது என சில மேதாவிகள் மக்களிடம் பிரச்சாரம் செய்யக்கூடும். இந்தப் பிரச்சார தறுதலைகளுக்குப் பின் செல்லும் அபாயமுள்ள மக்கள் கூட்டத்திற்கு தன் பொறுப்பை, தார்மீக கடமையை, சுயமரியாதை தலைதூக்கும் போர்க்குணத்தை உணர்த்த வேண்டிய அவசியமான கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம். நாமென்பது நம் ஒவ்வொருவரும் தான்.
நடந்து முடிந்த கொடுமைகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி தீர்மானம் இயற்றியது. வியாசர்பாடி சம்பவத்திற்கு சொல்லப்பட்ட உப்புப்பெறாத ‘வதந்தி’ என்ற அதே காரணத்தையே பிரச்சாரம் செய்கிற அ.தி.மு.க. அரசு, தி.மு.க. பகுதி செயலாளரைக் கைது செய்து பழி தீர்த்தது. மக்களின் திசை திருப்பியது. எதிர்க் கட்சிகளின் தூசு தட்டிப் போன விசாரணைக் கமிசன் கோரிக்கையை நிறைவேற்றியது. ஒப்புக்கு ஒருசில அதிகாரிகளை இடம் மாற்றியது. தற்காலிக வேலை நீக்கம் போன்ற குறைந்தபட்ச தண்டனைகள் கூட அரசு எந்திரத்தின் எந்த மட்டத்திற்கும் வழங்கப்படவில்லை. போலீஸ் உடை தரிக்காத முதல் தர போலீஸ் அதிகாரியாக மக்களை காவல்துறை லத்திகளின் கீழ் அடக்கி ஆளும் ஜெயலலிதாவுக்கு காவல்துறையை மக்களை ஒடுக்கும் கருவியாக மட்டுமே பயன்படுத்த முடியும். காவல்துறை போதிய பாதுகாப்புத் தரவில்லை என குற்றம் சாட்டுகிறது நடுத்தர வர்க்கம். ஒரு குடிமைச் சமூகத்தின் அடையாளம் போலீஸ் ராஜ்ஜியமல்ல. இதை மக்களிடம் எடுத்துச் செல்லும் கடமை ஜனநாயக உணர்வுள்ள அறிவுஜீவிகள் முன் நிற்கிறது. தண்டனைக்குப் பிறகாவது சாட்சி சொல்ல வரவேண்டிய நியாயம் உணர்வோம். ஏனெனில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் நீதி சொல்லும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்கள்.
புதியகாற்று - ஜனவரி 2006
Saturday, November 3, 2007
சுப.தமிழ்ச்செல்வனின் நினைவிற்கு...
அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைப் பலிகொண்டு, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்ற ஈழ விடுதலைப்போரின் ஈகை வரலாற்றில் இன்னும் எத்தனை மாமணிகளை தாரை வார்க்க நாம் சித்தமாய் இருக்கிறோம்। தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே – நம் குலை பதறுகிறது. திலீபன், கிட்டு, தாணு... இன்று சுப.தமிழ்ச்செல்வன்.
புலிகளின் மீது மாற்றுக்கருத்துக் கொண்டவர்களையும் ஈழப்போராட்டம் குறித்து பாராமுகம் கொள்பவர்களையும் கூட தமது வசீகரப் புன்னகையால் கவர்ந்து, ‘தமிழீழ தாயகம் ஈழ மக்களின் தாகம்’ என்பதை மொழி கடந்து சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சென்றவர் சுப।தமிழ்ச்செல்வன். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உலகத்தின் கவனம் பெற்ற ஒரு கெரில்லா இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் தோழர்.தமிழ்ச்செல்வன் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
எமது ஆற்றொணாத் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள எமக்கு வார்த்தைகள் இல்லை. இலங்கை இனவெறி அரசின் வான்வழித் தாக்குதலுக்குப் பலியான போராளிகளுக்கு ஏகலைவன் தோழமையின் வீரவணக்கங்கள்.
ஈழ (தமிழின்) செல்வனே
எம் கண்களின் முன்னே
உமிழ்கிறது...
உன் புன்னகையின் வசீகரம்
ஒற்றைக்கால் தாங்கி
நீ பயணித்த திசைகளில்
சமாதானத்தின் தூது செல்ல
உன் விரல் படர்ந்த
ஊன்று கோல் மட்டுமே இனி...
விடுதலையின் நீண்ட பாதையில்
துவண்டு வீழாமல்
தோழர்கள் நடைபயில
உடன்வரும் உன் நினைவுகள்
செவ்வணக்கம் தோழனே
- கா.இளம்பரிதி
Thursday, November 1, 2007
தலித்களின் மீதான நீதிமன்ற வன்முறை
இந்திய சாதிய சமூகம் அரசியல் - பொருளாதார வளர்நிலைகளுக்கேற்ப 'தீண்டாமை' எனும் ஒதுக்கலை வடிவமாற்றம் செய்து கொள்கிறதே ஒழிய, முற்றாக ஒழித்துவிட முன்வருவதில்லை। அல்லது இந்த இன ஒதுக்கல் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் விரிவடைந்து நீக்கமற நிறைந்துள்ளது என்றும் கூறலாம். கிராம வாழ்வு, நகர நெருக்கடி, கோவில் வழிபாடு, அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், உணவகங்கள், அரசு-மற்றும் தனியார் துறைகளின் பணியிடங்கள், சட்ட மன்றங்கள், பாராளுமன்றம் என 'தீண்டாமை' அளவுமாற்ற - குணமாற்ற விகிதங்களில் மட்டுமே வேறுபட்டு நிலவுகிறது. ஏதோ ஒரு வகையில் இக்கூறுகள் அம்பலப் படுத்தப்பட்டும் பல்வேறு அரசியல் இயக்கங்களால் கேள்விக்குட்படுத்தப்பட்டும் வருகின்றன. ஆனால் கேள்விக்கிடமின்றி 'தீண்டாமை' மௌடீகமாக நிலவும் நீதித்துறையைப் பற்றி எவரும் வாய் திறப்பதில்லை. நீதிமன்றங்களைப் பற்றிய இனம்புரியாத பயமும் மாயையுமே இதற்குக் காரணம். மாறாக தீண்டாமைக் குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் குறித்தோ இந்திய தண்டனைச் சட்டங்கள் குறித்தோ எவ்வித அச்சமும் இருப்பதில்லை.
இந்திய அரசியல் அமைப்பு சட்டவிதி 17, தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதாக அல்லது 'தீண்டாமை' பேணப்படும் அதன் அனைத்து வடிவங்களும் குற்றம் எனக் கூறுகிறது। இக்குற்றங்களைக் கடுமையான தண்டனை வரையறைக்குள் கொண்டு வருவதற்காகவே, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் - 1989 இயற்றப்பட்டது. இச்சட்டப்பிரிவு - 8 ல் குற்றவாளிகளுக்கு முன்பிணை (Anticipatory Bail) தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொல்லைப்புறமாக, குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு-482 ன் கீழ் உயர்நீதி மன்றத்தை அணுகி குற்றவாளிகள் விடுதலை பெறுவதற்கான வழிவகைகளைத் தேடிக்கொள்கின்றனர்.
மேலும் சாதி - தீண்டாமை வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (தடுப்பு நடவடிக்கைகள்) விதிகள் -1995 பிரிவு 12(4)ன் படி உடனடியாக நிவாரணம் தரப்பட வேண்டும்। இதற்கு மாவட்ட காவல்துறை அதிகாரி பரிந்துரைப்பதும், மாவட்ட ஆட்சியர் நிவாரணம் வழங்குவதும் பெரும்பான்மையான சம்பவங்களில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றங்களை அனுகினால் கூட, நீதிபதிகள் எவ்வித உத்திரவும் பிறப்பிப்பதில்லை. பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நிவாரணம் தர - நியாயம் தேட முன்வராத நீதிமன்றங்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் குற்றவாளிகளுக்கு உடனடியாகப் பிணையும், தேவைப்படின் வழக்கிலிருந்து விடுதலையும் தந்துவிடுகின்றன. கீழமை நீதிமன்றங்கள் முதல் உயர்நீதி மன்றங்கள் வரை தலித் மக்களுக்கு எதிரான இம் மனோபாவம் தீண்டாமையின் இன்னொரு வடிவம் அல்லாமல் வேறென்ன?.
அதேபோல, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட நில எடுப்பு சட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர்கள் உபரி நிலங்களை மீட்கும் போது நில உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகி, தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்புகளைப் பெற்றுவிடுகின்றனர்। மேலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகக்கூட பயன்படுத்தும் போக்கும் நிலவுகிறது. இதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்தால் உயர்நீதிமன்றம் தலையிட மறுக்கிறது. சேலம் சட்டக்கல்லூரி தலித் மாணவர்கள் மீது புனையப்பட்ட வழக்கு இதற்கு உதாரணமாக இருக்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் கீழமை நீதிமன்றங்களில் உள்ள தலித் சமூக நீதிபதிகளை திட்டமிட்டே பழி வாங்குவதும் ஒருபுறம் நடந்து வருகிறது. ஆக, ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சாதீய மனோபாவமே , ஆதிக்க சாதியிலிருந்து நீதித்துறைக்குள் நுழையும் பெரும்பாலான நீதிபதிகளின் தீண்டாமை மனோபாவமாக நிலவி வருகிறது. இத்தகைய நீதிபதிகளின் கைகளில் தான் 'தீண்டாமை' ஒழிக்கப்பட்டு விட்டதாகச் சொல்லப்படும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தாங்கிய 'புனித' சட்டப்புத்தகங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கருவிகளாகப் பயன்பாட்டில் இருக்கின்றன.
நீதிபதிகளின் சாதிய மனோபாவத்தை - உயர்சாதிச் சார்பை அம்பலப்படுத்தி 'எக்கனாமிக்ஸ் அண்டு பொலிடிக்கல் வீக்லி' வார இதழில் (அக்டோபர் 21, 2006) 'சாதிப் பிரச்சினைகளில் நீதிமன்றத் தீர்ப்புகள்' எனும் தலைப்பில் ராகேஷ் சுக்லா என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே காணலாம்। நீதிமன்றத் தீர்ப்புகளை யாரும் நீதிபதிகளின் உள்நோக்கத்தின் அடிப்படையில் விமர்சிக்கக் கூடாது, விமர்சித்தால் 'நீதிமன்ற அவமதிப்பு' க்குள்ளாக நேரிடும் என்கிற பாதுகாப்பின் கீழ் உள்ள நீதிமன்றங்களின் உயர்சாதிச் சார்பைக் குறித்து சிலவற்றை இங்கே விவாதிக்க வேண்டியது அவசியம் என கீழ்க்காணும் சில வழக்குகளையும் தீர்ப்புகளையும் சுட்டிகாட்டி விவரிக்கிறார் திரு. ராகேஷ் சுக்லா.
1, மே 2005ல் 'இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDBI)' ன் தலைவர் வி।பி।ஷெட்டி என்பவர் 'வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்(1989)' கீழ் கைது செய்யப்பட்டார். அவ்வங்கியின் பொது மேலாளரான பாஸ்கர் ராம்டெக் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இக் கைது நடந்தது. 'பொது மக்களின் பார்வைக்குட்பட்ட ஓரிடத்தில்' பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவரை அவமானப்படுத்தல் என்கிற நிபந்தனை இவ்வழக்கில் பொருந்தி வரவில்லை என மும்பை உயர்நீதி மன்றம் கூறியது. ஒரு தனியறையில் சம்பவம் நடந்ததாகக் கூறி முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது. ஏதோ ஷெட்டியின் வீட்டு வரவேற்பறையில் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது சம்பவம் நடந்தது என்பது போலவே தீர்ப்பை வாசிக்கும் ஒருவருக்குத் தோன்றக்கூடும். உண்மை என்னவெனில் உலக வர்த்தக மையத்தில் உள்ள IDBI வளாகத்தில் உள்ள தலைவரின் அறையிலேயே இச்சம்பவம் நடந்தது. பட்டியல் சாதி மற்றும் பட்டியல் இனத்தவருக்கான நிரப்பப்படாத காலியிடங்களை பின்னோக்கி நிரப்புவது தொடர்பாகப் பேசப்போன இடத்திலேயே சம்பவம் நடைபெற்றது. வன்கொடுமை சட்டத்திற்குப் பதிலாக 'சிவில் உரிமை பாதுகாப்புச் சட்டம் (PCRA) 1969' ல் வழக்கைப் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியது. காவல்துறையும் அவ்வாறே செய்தது. இரு சட்டங்களின் அடிப்படையிலும் வழங்கப்பட்ட தீர்ப்புகளைப் பற்றி அறிவது பயனுடையதாக இருக்கும்.
2। 1996ல் PCRA சட்டத்தின் கீழ் கிருஷ்ணன் நாயனார் என்பவர் மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டது. தலைச்சேரித் தொகுதிக்கு நடைபெற்ற கேரள சட்டமன்ற இடைத்தேர்தல் ஒன்றின் போது குட்டப்பன் என்பவர் பற்றி உதிர்த்த 'சாதிய'க் கருத்துக்களுக்காக அவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது. 'இடது சனநாயக முன்னணி' மாநாடு ஒன்றில் கிருஷ்ணன் நாயனார் பேசும்போது, 'அந்த அரிஜன் குட்டப்பன் மேசை மீது ஏறி ஆடுறான்' என இகழ்ந்து பேசினார். கிட்டத்தட்ட இதே வார்த்தைகளில் அவர் பேசியதை சாட்சிகள் நீதிமன்றத்தில் கூறினர். 'தீண்டாமை அடிப்படையில் இந்த அவமானம் மேற்கொள்ளப்பட்டது அல்லது அவமதிக்க முயற்சி செய்யப்பட்டது' என்கிற அடிப்படையில் புகார் செய்யப்பட்டுள்ளது எனக் கூறமுடியாது என்பதாக, PCRA சட்டத்தின் கீழ் இக்குற்றம் நடந்ததென சொல்ல இயலாது என கேரள உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இக்குற்றம் வருமா என்றால், மேற்படி சம்பவம் பொதுமக்களின் பார்வையில் நடைபெற்றது தான் என்றாலும், தீண்டாமை அடிப்படையில் அவமதிக்கப்படுதல் என்கிற குற்றம் இங்கே முழுமை அடையவில்லை. ஏனெனில் நாயனார் அவ்வாறு பேசும்போது குட்டப்பன் எதிரில் இல்லை என்றது நீதிமன்றம். மலசலம், குப்பை, செத்த உடலின் பகுதிகள் இவை போன்ற எதையேனும் பட்டியல் சாதியினரின் வீட்டிற்குள் அல்லது அருகில் வீசி எறிவது போன்ற நடவடிக்கைகளில் வேண்டுமானால், பாதிக்கப்பட்டவர் சம்பவத்தின் போது எதிரே இருக்க வேண்டும் என்பது தேவையில்லை எனவும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
3. புல்சிங் வழக்கில் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தீண்டாமை நோக்கில் அவமதிக்கும் உத்தேசத்துடன் (Presumption) சம்பவம் நிகழ்ந்ததா என்கிற பிரச்சினை எடுத்துக்கொள்ளப்பட்டது. லோதி தாக்கூர் என்னும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த நிலப்பிரபு புல்சிங், சமார் என்னும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த பல்லாவின் வீட்டை இடித்ததோடு, பல்லாவின் மனைவியையும் ஐந்து நாட்கள் கடத்திச் சென்றுவிட்டான். டிராக்டரை ஏற்றிக் கொன்றுவிடுவேன் எனச் சொல்லி பல்லாவை மிரட்டவும் செய்தான். இதுகுறித்து போலிசில் புகார் செய்ததற்காக பல்லாவை நோக்கி, 'ஏய் சமரா, என்னைப்பற்றி புகாரா செய்தாய்? என்னை அவமதித்ததற்காக உன்னிடம் ஐந்தாயிரம் ரூபாய் வாங்கியே தீருவேன்' என்றான்.
புல்சிங் மீது இன்னொரு வழக்கும் உண்டு। சமார் சாதியைச் சேர்ந்த பர்சாதி என்பவருடன் அவருக்கு ஒரு நிலத்தகராறு இருந்தது. இது தொடர்பான ஒரு நிகழ்வில் பர்சாதியை நோக்கி, 'ஏய்॥சமார்................! இங்கிருந்து ஓடு. இல்லாவிட்டால் உன்னைச் சுட்டுக் கொல்வேன்' என்றான். சாலை வழியே தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பர்சாதியின் மனைவியை நிறுத்தி, 'ஏய் சமரச்சி, இதென்ன உங்கப்பன் வீட்டு ரோடா, இந்த வழியே நீ போனால் உன்னை உதைப்பேன்' என்றும் கூறினான்.
PCRA சட்டத்தின் 7(d) பிரிவின் கீழ் இவ்விரு சம்பவங்களின் அடிப்படையிலும் இரு தனித்தனி வழக்குகள் புல்சிங் மீது பதிவுசெய்யப்பட்டன। இப்பிரிவின் கீழ் புல்சிங்கின் குற்றங்கள் அமைகின்றனவா என்பதை அறிய உயர்நீதிமன்றம் இரு அளவுகோல்களை உருவாக்கியது. (i) பாதிக்கப்பட்ட நபர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக இல்லாத போதிலும் கூட இந்த அவமானம் நேர்ந்திருக்குமா? ஆம் எனில் 7(d) பிரிவு இதற்குப் பொருந்தாது. மாறாக, பாதிக்கப்பட்ட நபர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் 'மட்டுமே' இந்த அவமானம் நேர்ந்திருக்கும் பட்சத்தில், அதாவது அவர் உயர்சாதியாக இருந்திருந்தால் இந்த அவமானம் நேர்ந்திராது என்றால் புல்சிங் செய்தது தீண்டாமை என கருதலாம் எனக் கூறிய நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே வேறு பிரச்சினைகள் இருக்குமானால், சாதி ரீதியாகத் திட்டினாலும் கூட அது 'தீண்டாமை'யைக் கடைபிடித்ததாகாது என்று வரையறுத்தது. 7(d) பிரிவில் இல்லாத 'மட்டுமே' என்கிற சொல்லை நீதிமன்றம் இங்கே தன் வசதிக்கேற்ப சேர்த்துக்கொண்டது. (ii) இரண்டாவது கேள்வி ; உயர்சாதிக் காரருக்கும் தாழ்ந்த சாதிக்காரருக்கும் இடையிலான பிரச்சினை தனிப்பட்ட காரணங்களினால் இருந்ததென்றால் செய்யப்பட்ட அவமானம் 'தீண்டாமை' அடிப்படையிலாகாது. சண்டை, தகராறு எதுவும் இல்லாத நிலையில் செய்யப்பட்ட அவமானமே தீண்டாமைக் குற்றத்தின் கீழ் வரும் என்றது நீதிமன்றம்.
PCRA சட்டத்தின் மூலவடிவம் 'தீண்டாமைக் குற்றங்கள் சட்டம் 1955' என்பது। 1976லேயே அதற்கு PCRA சட்டம் எனப் பெயரிடப்பட்டது. தீண்டாமை பேசுவது, கடைபிடிப்பது ஆகியவற்றைத் தண்டிப்பதற்கெனவே இச்சட்டம் உருவாக்கப்பட்டது. தீண்டாமையை ஒழிப்பது என்கிற அரசியல் சட்டக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டதே இது. ஒரு சட்டத்திற்கு இருவேறு விளக்கங்கள் சாத்தியமானால், சட்டம் என்ன குறிக்கோளுக்காக இயற்றப்பட்டதோ, அதை நோக்கியதாக உள்ள விளக்கத்திற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கு நேர்மாறாக, தனது அளவுகோல்களை நிர்ணயித்துக்கொண்டது நீதிமன்றம். சாதிய ரீதியான இழிவுகள் தொடர்புள்ள எந்தச் சண்டை, தகராறுகளுக்கும் சாதியக் காரணங்களே காரணமாக உள்ளன என்பதே எதார்த்தம். அவை என்னவோ சமமானவர்களுக்கிடையே நடைபெறும் தனிப்பட்ட சண்டை அல்ல. 'ஒரு சமரை 'சமர்' என அழைப்பது அவரை அவமதிப்பதாக இருக்கலாம். ஆனால் அது தீண்டாமை அடிப்படையிலான அவமதிப்பாக இருக்க வேண்டியதில்லை எனவும் நீதிமன்றம் கூறியது.
மேற்கண்ட இரு அளவுகோல்களின் அடிப்படையில் பல்லா, பர்சாதி என்கிற இரு சமர்களும் புல்சிங்குடன் தனிப்பட்ட விரோதம் கொண்டிருந்ததால் மேற்படி குற்றங்கள் இரண்டுமே 'சாதாரண அவமதிப்புகள்' (Insults Simplicity) தானே ஒழிய தீண்டாமை அடிப்படையிலானது அல்ல எனத் தீர்ப்பளித்தது நீதிமன்றம். பல்லா, பர்சாதி, பர்சாதியின் மனைவி ஆகியோர் பட்டியல் சாதியில் பிறந்தவர்கள் என்பது வழக்குடன் தொடர்பில்லாத ஒரு சம்பவம். பல்லா எந்த சாதியில் பிறந்திருந்த போதிலும் அந்த அவமானம் அன்று நிகழ்ந்திருக்கும். PCRA சட்டத்தின் 12ஆம் பிரிவின் படி, குற்றச் சம்பவம் தீண்டாமை அடிப்படையிலானது என்பதை நீதிமன்றம் முன் ஊகித்துக் கொள்ள வேண்டும் (Presume). ஆனால் உயர்நீதி மன்றமோ பிரிவு 12ன் படியான முன் ஊகிப்பு என்னவாக இருந்த போதிலும், இவ்விரு வழக்குகளையும் பொருத்தமட்டில் 7(d) பிரிவின் கீழ் எந்தக் குற்றமும் நடைபெறவில்லை என அதிரடியாகக் கூறியதோடு, புல்சிங்கை இரு வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்தது.
4। 1997ம் ஆண்டு மும்பை உயர்நீதி மன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு : அரிதாஸ் என்பவர் பட்டியல் சாதியினர் ஒருவரை அவமானப்படுத்தி மிரட்டியதாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். பாதிக்கப்பட்டவர் இது குறித்த புகாரைச் சற்று தாமதமாகவே கொடுத்திருந்தார். இந்த தாமதத்திற்கும் கூட அரிதாஸ் தான் காரணம் எனவும் சொல்லி இருந்தார். புகாரில் வெளிப்படும் வெறுப்பிற்கும், தாமதம் குறித்து சொல்லப்படும் காரணத்திற்கும் இருவருக்கும் (அதாவது குற்றம் சாட்டப்பட்ட அரிதாஸுக்கும் பாதிக்கப்பட்ட தலித்திற்கும்) இடையே இருந்த விரோதச் சூழலே காரணம் எனக் கூறிய நீதிமன்றம் அரிதாஸை வழக்கிலிருந்து விடுதலை செய்தது.
5। இரட்டைக் குவளை வழக்கம் தொடர்பாக கர்நாடக உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பொன்று : தேநீர்க் கடைகள், ஹோட்டல்கள், தர்மசாலாக்கள் முதலியவற்றில் தீண்டாமை காரணமாக இத்தகைய வழக்கம் கடைபிடிக்கப்படுவது PCRA சட்டத்தின் படி குற்றம். 12 மணி நேரம் தாமதமாக புகார் கொடுக்கப்பட்டது எனக் காரணம் கூறி நீதி மன்றம் ஒரு ஓட்டல் உரிமையாளரின் மீதான இரட்டைக் குவளை வழக்கொன்றைத் தள்ளுபடி செய்தது. குவளைகள் தனித்தனியே வைக்கப்பட்டிருந்தன எனப் புகாரில் தெளிவாக எழுதப்படவில்லை எனவும் பிராசிகியூஷன் தரப்பு சாட்சிகள் உறவினர்களாக இருந்தனர் என்பதும் வழக்கைத் தள்ளுபடி செய்வதற்கான மேலும் இரு காரணங்களாகக் கொள்ளப்பட்டது.
6। தீண்டாமை ஒழிக்கப்பட்டதன் விளைவாகப் பெறப்பட்ட உரிமைகளை ஒரு பட்டியல் சாதியினருக்கு மறுப்பது PCRA சட்டத்தின் 17ம் பிரிவின் கீழ் ஒரு குற்றம். அதேபோல, யாரேனும் ஒருவரையோ அல்லது ஒரு சிலரையோ சைகைகளாலோ, வார்த்தைகளாலோ தீண்டாமையைக் கடைபிடிக்குமாறு தூண்டுவதும், பட்டியல் சாதியினர் ஒருவரை அவமானப்படுத்துவதும், அவமானப்படுத்த முனைவதும் கூட PCRA சட்டத்தின் கீழ் குற்றங்களே.
துனிசந்த் என்னும் ஒரு நபர் தலித்துகள் உட்பட அந்த கிராமத்தில் உள்ள அனைவரையும் தன் மகனின் திருமண விருந்திற்கு அழைத்திருந்தார்। நங்கு, சனா என்கிற இரு பட்டியல் சாதியினர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அங்கு, வந்திருந்த உயர்சாதியினர் ஏழுபேர் தாங்கள் அங்கே சாப்பிட மாட்டோம் என்றனர். நங்கு, சனா இருவரும் அங்கிருந்து வெளியேற நேர்ந்தது. துனிசந்தும், நேரடி சாட்சிகளும் அளித்த சாட்சியங்கள் பொதுத்தன்மையில் இருந்தது எனவும் அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறியது என எந்த குறிப்பிட்ட சொற்களும் கூறப்படவில்லை எனவும் கூறிய உச்சநீதிமன்றம் PCRA சட்டத்தின் 7(d) பிரிவின் கீழான குற்றமல்ல இது, எனக்கூறி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது.
இங்கே சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் சில வழக்குகளின் வழியே உயர்நீதி மன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரையான நீதித்துறையின் நுட்பமான தீண்டாமை மனோபாவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்। இம் மனோபாவத்தை 'உள்நோக்கம்' என நாம் எளிதாக வரையறுத்துவிட முடியும். ஆனால் நீதிமன்ற அவமதிப்பாகக் குற்றம் சாட்டி இந்த உள்நோக்கத்தை மென்மேலும் மூடி மறைக்க நீதிமன்றங்கள் முயல்வதை விடுத்து, தங்களின் சாதிய உள்நோக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதே நல்லது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கங்களும் சனநாயக அறிவுஜீவிகளும் இதற்கான நெருக்கடியை உருவாக்கலாம்.
Courtesy : Rakesh Sukla, EPW , A.Marx
Tuesday, October 30, 2007
Sunday, October 28, 2007
முதுகுளத்தூர் கலவரம்
முதுகுளத்தூர் கலவரம் என்ற புத்தகம் தினகரன் பத்திரிக்கை ஆசிரியர் திரு। தினகரன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது। இந்த புத்தகதை மறுபத்திப்பு செய்துள்ளார் தோழர் க.இளம்பரிதி
காலச்சுவடு இதழில் 'முதுகுளத்தூர் கலவரம்' பற்றிய மதிப்புரை கீழே
மதிப்புரை
முதுகுளத்தூர் கலவரம்வரலாற்றின் குருதி எழுதிய வரைபடம்
-பழ.அதியமான்
முதுகுளத்தூர் கலவரம்ஆசிரியர்: தினகரன்தொகுப்பும் மதிப்பும்: கா। இளம்பரிதிவெளியீடு: யாழ்மை134, மூன்றாம் தளம், தம்புசெட்டித் தெருபாரிமுனை, சென்னை 600 001இரண்டாம் பதிப்பு: டிசம்பர் 2006பக் 120, விலை ரூ. 70.
1957 பொதுத் தேர்தல் - அதற்கடுத்த இடைத் தேர்தல் - அவற்றை ஒட்டி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் கொந்தளிப்பு எழுந்தது। அதை அடக்க 1957 செப்டம்பர் 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை அமைப்பின் சார்பில் கலந்துகொண்டவர் இம்மானுவேல் சேகரன். மறவர்கள் சார்பில் உ. முத்துராமலிங்கத் தேவர். கூட்டத்தில் இம்மானுவேல் அவர்களின் தலைமை குறித்து விவாதம் எழுந்ததாகத் தெரிகிறது. கூட்டறிக்கைக்குத் தேவர் ஒப்புக்கொள்ளாத நிலையில் ஒரே வாசகம் உள்ள தனித்தனி அறிக்கைகளை வெளியிடும் சமாதானத் திட்டத்தோடு கூட்டம் ஒருவகையாக முடிந்தது. மறுநாள் இம்மானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார். அக்கொலையின் தொடர்ச்சியாக இரு சமூகத்தினரிடையே மோதல் மூண்டு அது ஏறக்குறைய ஒரு மாத காலம் நீண்டது. பல மனித உயிர்கள் பறிபோயின. நாசமான சொத்துகள் இரு தரப்பிலும் இருந்தன. வரலாற்றின் குருதி எழுதிய வரைபடமாக முதுகுளத்தூர் தமிழக வரலாற்றில் பதிவானது.
தமிழகத்தை உலுக்கிய மிக முக்கியமான சாதியக் கிளர்ச்சிகளுள் ஒன்றான இந்தக் கலவரத்தின் மூலகாரணம் என்ன? முடிவு எது? இவை குறித்துப் பத்திரிகையாசிரியர், எழுத்தாளர், காங்கிரஸ்காரர் தினகரன் சம்பவக் காலத்திலேயே எழுதி வெளிவந்த நூலின் புதிய அண்மைப் பதிப்பு 'முதுகுளத்தூர் கலவரம்' என்ற இந்நூல்।
'உதடசைந்தால் உயிர் போய்விடுமே என்று உலகமே பயந்தபோது உண்மையைச் சொன்னால் ஒன்றுமே வராது' என்று தவறாக நினைத்து, உண்மையைச் சொல்லி உயிரை மாய்த்துக்கொண்ட தினகரனின் இந்நூல் பின்வரும் விஷயங்களை விரிவாகப் பேசுகிறது। 12ஆம் நூற்றாண்டிலிருந்து மறவர்களின் சரித்திரம், 1932-1939; 1947-1957 ஆகிய காலகட்டங்களில் இராமநாதபுரம் பகுதியின் அரசியலில் சாதியத்தின் பங்கு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிப் பேச்சுவார்த்தை, இம்மானுவேலின் படுகொலை, அதனால் ஏற்பட்ட கலவரம், அரசியல் தலைவர்களின் கருத்துகள், விளைவுகள் என்ற நிரலில் நூல் ஆக்கப்பட்டுள்ளது. பின்னிணைப்பாக அமைந்துள்ளவை நூலைக் காட்டிலும் முக்கியமானவை. மனித உரிமைகள் சர்வதேச மன்னிப்பு ஸ்தாபன காங்கிரஸ் ஒன்றின் அறிக்கை (1984), தேவர் தொடர்பான வழக்கின் நீதிமன்றத் தீர்ப்புகள் சிலவற்றின் தமிழ் வடிவம் (1940கள்), முது குளத்தூர் சேம நலச் சங்கத்தாரின் மனு (1957), இக்கலவரம் பற்றிய தமிழ்நாடு அரசின் உள்துறை அமைச்சரின் சட்டசபை அறிக்கை (1957) முதலியவை அந்தப் பின்னிணைப்புகள்.
அப்போதைய தமிழக முதல்வரும் இராமநாதபுரம் மாவட்டம் விருதுநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான காமராஜ், முதுகுளத்தூர் கலவரம் இருபது வருடங்களாக இருந்துவரும் நாள்பட்ட சமூகப் பிரச்சினையின் விளைவு என்றார்। "இந்தச் சதித்திட்டம் மதுரையிலும் விருது நகரிலும் உள்ள சிலரால் ரகசியமாய் வகுக்கப்பட்டது. ஹரிஜனங்களில் ஒரு பகுதியினருக்குப் பணம் கொடுத்து இந்தக் கலகத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். இது ஆளும் காங்கிரசின் சதி" என்றார் முத்துராமலிங்கத் தேவர் (பக். 40).
(இந்நிலப்பகுதியில் மிகப்பல ஊர்களில் விரிந்து கிடந்த விவசாய நிலத்திற்குச் சொந்தக்காரராய் இருந்த தேவர் அந்நிலங்களின் பயிர் ஏற்றத்திற்குப் பல்வேறு நிலைகளில் தொடர்பு உள்ளவர்களைப் பகைத்துக்கொள்ள வாய்ப்பு மிகக் குறைவு। அந்த விவசாயக் கூலிகளைத் தம் கீழ் வைத்துக்கொள்ள வேண்டி அவர் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். எனவே தேவர், எந்த இனத்தைக் கலவரத்திற்குக் காரணமாகச் சுட்டுகிறார் என்பதை மேற்கண்ட குறிப்பிலிருந்து நாம் உணர முடியும்.)
காமராஜ் அமைச்சரவையில் உள்துறையைக் கவனித்துவந்த எம்। பக்தவத்சலம், அரசியல், வகுப்புவாதம், நிர்ப்பந்தம் ஆகிய மூன்றையும் சேர்த்துப் பிடித்த ராட்சஸப்பிண்டம் இக்கலவரம் என்றார். நிலப்பிரபுத்துவ முறை இன்னும் நீடிப்பதாய் நினைத்துக்கொண்ட ஒரு சமூகத்தின் மேலாண்மையின் விளைவு என்று பொருள்பட நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் கருத்துரைத்தார்.
சாதிகள் இருக்கும்வரை இந்தச் சண்டைகள் தீராது எனக் கலவரத்தின் ஆணிவேரைப் பிடித்தார் பெரியார்। இப்படிச் சமூகத்தின் பலரும் இக்கலவரம் பற்றி பல்வேறு விதமாகக் கருத்து வெளியிட்ட நேரத்தில், 'கலகத்திற்கு வித்திட்ட வகுப்பிலும் நிலத்திலும் உதித்தவன் நான் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயந்தான்' என்று இக்கலவரக் காரணம் பற்றிய (முன் எண்ணத்தோடு) ஒப்புதல் வாக்குமூலத்தோடு, இந்நூலாசிரியர் எழுத முனைந்திருக்கிறார். "காங்கிரஸ் கட்சியின் கீர்த்தியைக் கெடுக்க, சென்னை சர்க்காரின் திறமையைப் பழிக்க, தமிழ் மக்களின் மானத்தைப் பறிக்க வந்த இந்தச் சம்பவங்கள்" (பக். 23) என்று காங்கிரஸ் கட்சி, ஆட்சி ஆகியவற்றுக்கு நேர்ந்துவிட்ட இழுக்கை, தமிழ் மக்களின் மானத்தின் பேரால் துடைப்பதாகச் சொல்லித் தன் நூலைத் தொடங்குகிறார். தொடர்ந்து பல இடங்களிலும் கட்சியின் செயல்களை நியாயப்படுத்தும் தொனியிலேயே நூல் நகர்கிறது. நூலின் பக்கங்கள் 36, 38, 45, 51, 70 எனப் பல இடங்களில் இதற்கான சான்றுகளைப் பார்க்க முடியும். கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுடன் அவருக்கு நெருக்கமான கட்சிசார்ந்த உறவு இருந்திருக்கிறது. 'இந்தக் கொலைக்கொள்ளி மனிதனைக் காங்கிரஸ் கட்சியில் கொண்டுவந்து சேர்த்தது யார்? என்று ஒரு சமயம் இராஜாஜி என்னிடம் கேட்டார்' என்று தேவரைக் குறிப்பிட்டு தினகரன் எழுதியுள்ளார் (பக். 39). ஒரு கட்சியில் ஒரு குறிப்பிட்ட குழுவின் உள் இடைவெளிகளைப் பெரிதுபடுத்தி, சம்பந்தப்பட்டவரின் செல்வாக்கைக் குறைக்கும் நுண் அரசியலின் விளைவு இந்தக் கேள்வி என்பது தினகரனுக்குத் தெரியாமலா இருக்கும்? இருந்தும் இதை எழுதுகிறார்.
கலவரப் பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டபோது, களத்தில் பேசிய பேச்சுகளை நூலாசிரியர் வியந்து போற்றும் வரிகள், அவரது காங்கிரஸ் பார்வையை அப்பட்டமாகக் காட்டுகின்றன। கம்யுனிஸ்ட் கட்சி கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கிண்டல் செய்வதும் கட்சிச் சார்பை நன்கு வெளிப்படுத்துகிறது. எனவே, தினகரனின் இந்தப் பிரதியைக் காங்கிரஸ் கட்சியை, ஆட்சியைக் காப்பாற்ற எழுதப்பட்டதாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. தினகரனின் முன்வரலாறும் அதை உறுதி செய்கிறது. குறிப்பிட்ட சாதியின் அடையாளமாக ஒரு கட்சியில் இயங்கிய, 'பெரிதும் கட்சி சார்ந்த' எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று தினகரனைக் கருதலாம்.
கட்சிக்கு எதிராக அரசியல் செய்வதால் தேவர்மீது கோபம் கொண்டிருந்த காங்கிரஸ் தினகரன் மூலம் இந்தப் பிரதியை எழுதியிருக்கலாம்। முது குளத்தூர் பயங்கரம் என்ற நூலை எழுதிய டி. எஸ். சொக்கலிங்கம் பிள்ளையின் பொருத்தப்பாட்டையும்விட மறவரான தினகரன் இது பற்றி எழுதுவது உயர்ந்தது என்று காங்கிரஸ் தலைவர் காமராஜ் நாடார் நினைத்திருக்கலாம்.
இந்நூலின் பின்னிணைப்பாகியுள்ள சிறு பிரசுரம் ஒன்று, இந்திராகாந்தியின் படத்தை அட்டையில் பிரசுரித்துக்கொள்ளும் அளவுக்குக் கட்சி சார்ந்த பிரசுரமாக உள்ளது। இச்சம்பவம் குறித்த உள்துறை அமைச்சரின் அரசு அறிக்கையும் கட்சியின் பார்வையிலேயே உருவாகியிருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. இத்தகைய தன்மை கொண்ட இரண்டு எழுத்துருக்களை நூலில் இணைத்ததன் மூலம் கட்சி சார்ந்த தொனி நூலில் மிகுதியாகிவிட்டது. மற்ற பின்னிணைப்புகளான நீதிமன்றத் தீர்ப்புகள் இந்தப் பேராயப் பேரொளியின் முன் மங்கிவிட்டன.
சாதிய ஒடுக்குமுறையின் எதிர்ப்புப் போராட்டமாக இந்தக் கலவரத்தைப் பார்க்கும் இந்நூலின் பதிப்பாளர்கள், ஆவணப்படுத்தப்படாத வரலாற்று மீட்பாகவே இதைக் கருதுகிறார்கள்। ஆசிரியர் தினகரன் எப்படிச் சுயசாதி மறுத்துச் செயல்பட்டாரோ அப்படிப் பிற்படுத்தப்பட்டவர்கள் உயிர்த் தியாகம் செய்யுமளவிற்குச் சுயசாதி வெறியை எதிர்த்து வினையாற்றுவதுதான் தலித்தியத்திற்குச் செய்யும் முக்கியப் பங்களிப்பு எனும் கருத்தை முன்வைத்து நூலைப் பதிப்பித்திருக்கிறார்கள். பதிப்பாளர்களின் பார்வையில் தினகரனின் இந்த நூல் தலித்தியத்திற்கு ஆதரவான நூலாக மாறி உள்ளது. எந்தச் சமூகத்திலும் எழுதப்படாத வரலாறுகளே எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறாக உள்ளன. ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை இப்படிப்பட்ட மூலங்களிலிருந்தே நாம் உறிஞ்சி எடுக்க வேண்டியுள்ளது. ஆவணப்படுத்தாமல் அழிந்துகொண்டிருக்கும் இந்த வகை வரலாறுகள் உருப்பெற்று மேலெழும்போது, அதுவரையில் நிலவிய மைய நீரோட்ட வரலாறு முற்றிலும் தன்னை இழந்து காலக் கண்ணாடி முன் அம்மணமாய் நிற்கும்.
தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட மக்களின் வரலாறு வைக்கம், சேரன்மாதேவிப் போராட்டங்களாக வரலாற்றில் மறைந்துகிடக்கின்றன। ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சியின் விதைகள் சித்தனூர், கண்டதேவி, வடுகனி, இரவுசேரி, முதுகுளத்தூர், கொடியங்குளம், தாமிரபரணிக் கரை எனப் பல இடங்களில் புதைந்து கிடக்கின்றன. அவை வெளிக் கிளம்பி, பெரிய மரமாகி, காற்றை நிரப்பும்போது வரலாறு முற்றிலும் மாறி நிற்கும்.
அரை நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட நூலை இன்றைய காலத்தோடு இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த முன்னுரைகள் இரண்டும் பிற்படுத்தப்பட்டவர்களைத் தலித்தியத்திற்கு எதிராக நிறுத்துகின்றன। இதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், விதிவிலக்காக, முதுகுளத்தூர் கலவரம் உள்பட இன்றுவரை அநேகப் பிரச்சினைகளில் தலித்தியத்திற்கு ஆதரவு சக்தியாகப் பெரியாரும், இந்தத் தினகரன் போன்ற சுயசாதி அபிமானமற்ற பிற்படுத்தப்பட்டவர்கள் பலரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் இவர்கள் மிகச் சிலர்.
பிற்படுத்தப்பட்டவர்களில் தலித்திய ஆதரவு சக்தியாகச் செயல்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது இந்த நூலின் நோக்கங்களில் ஒன்று என்றால் இந்நூல்வழி கிடைக்கும் அதன் வெற்றி உடனடியானதல்ல।
ஏற்கனவே, கடந்த 50 வருடங்களாகச் சமூகத்தில் செல்வாக்கு செலுத்திவந்த, நாட்டின் தபால்தலை வரை சென்றுவிட்ட சிலரது பண்புருக்களை இந்நூல் கடுமையாக அசைத்திருக்கிறது। ஒரு சாராரின் உயர்வுக்குக் காரணமானாலும் அது யார் பலியில் நிகழ்ந்திருக்கிறது என்பதை இந்நூல் சொல்லாமல் புரியவைத்துவிட்டது. தென் மாவட்டங்களில் பேச்சு வழக்கில் புழங்கிவரும் சொல்லாடல்களுக்கு அச்சு வடிவம் தந்துள்ள பிரதி இது. களப் போராட்டத்துக்கான அறிவுப் பின்புலத்தை வலுவடையச் செய்யும் திசையில் இந்நூல் பெரும்பணி ஆற்றும்.
ஒரு குறிப்பிட்ட கலவரம் பற்றிய இந்த ஆவணம் மறவர் - பள்ளர் மோதலில் மறவர்களுக்குத் தலைமை தாங்கியவரின் செயற்பாடுகளை விளக்குகிறதே தவிர, அவரது முந்தைய குற்றப் பரம்பரைச் சட்ட நீக்கம் உள்ளிட்ட செயற்பாடுகளை ஒதுக்கிப் புறந்தள்ளவில்லை। ஆனால் அவற்றில் கலந்துள்ள சாதிய உணர்வுகளை உணர்த்திச் செல்கிறது. நீதிமன்றத் தீர்ப்புகள் வாசக மனத்துக்குள் கட்டமைக்கும் பிம்பம் மிகக் கடுமையாக இருக்கும். பதிப்பாளர்கள் திறமையானவர்கள்.
ஆசிரியர் தினகரனின் தேவர் எதிர்ப்பு நிலை குறித்துத் தெளிவாக்கப்பட வேண்டிய சில புள்ளிகள் உள்ளன। அவர் தன் இதழை, தேவருடன் நெருங்கிய நட்பு கொண்ட ஒருவரின் (அ) இருவரின் துணையோடுதான் நடத்தியிருக்கிறார். எனவே அவ்விதழில் வெளியான தேவர் பற்றிய விமர்சனங்களைப் பகை முரணாகக் கொள்ளுவது பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. தனது வளர்ப்பு மகனையும் மீறித் முத்துராமலிங்கத் தேவருக்கு ஆவணம் தேடிய குழந்தைசாமி, தனது வளர்ப்புப் பத்திரிகையையும் மீறி தேவருக்கு ஆதரவு காட்டிய (குழந்தைசாமி மகன்) ஆறுமுகம் ஆகியோரின் செயல்கள் சுலபமாகப் புறக்கணிக்கக்கூடியவை அல்ல. வழிவழியாய் வரும் ஆறுமுகங்களின் நியாயம் என்ன என்பதை அறியாமல் அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. கூடவே இருந்த பொன்னம்பலம் என்பவரின் வரலாறும் இதுவரை நமக்குத் தெரியவில்லை. இவை தினகரனின் சாதி கடந்த மனசாட்சியை மதிப்பிட உதவலாம்.
முதுகுளத்தூர் கலவரத்தைப் பள்ளர்களுக்கு எதிரான தேவரின் செயற்பாடாகப் பார்ப்பதும் நாடார்களின் சூழ்ச்சியாகக் கணித்துப் பயனடைந்தது நாடார்கள் எனச் சொல்வதும் காமராஜ் அவர்களின் அதிகார அரசியலின் ஒரு நிலையாக விவரிப்பதும் முதுகுளத்தூர் கலவரம் பற்றிய பல்வேறு கருத்து நிலைகள் ஆகும்। அரசியல், சமூக ஈடுபாடு மிக்க ஒரு வேளாண் பேராசிரியர் (என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது) சொன்னது போலப் பள்ளர்கள் இன்று தேவேந்திரர் என்றும் மள்ளர் என்றும் ஆதிக்க சாதியினர் என்றும் கருதிக்கொள்ளும் அளவிற்குப் போர்க் குணம் மிக்க சக்தியாக வளர்ந்திருப்பதற்கு இந்தக் கலவரம் உதவியது என்பதுதான் கண்கூடான உண்மை.
தென் மாவட்ட சாதிக் கொத்தில் மறவர், நாடார், பள்ளர், பறையர், சக்கிலியர் என்னும் வகைப்பாட்டில் முதல் நால்வர் பல்வேறு உரிமைப் போராட்டங்களின் ஊடாகக் கல்வி, பொருளாதார, அரசியல் ஏணியில் ஏறத் தொடங்கிவிட்டனர்। இப்போது ஏணியின் பல படிக்கட்டுகளில் அவர்கள் மாறிமாறி இருக்கலாம். ஆனால், ஏணியின் அடிவாரத்தைக்கூட அடையாமல் அந்தக் கொத்தின் கடைசிப் பகுதி இருக்கிறது.
வண்ண மை சேர்க்கப்பட்ட முத்திரைகளுடன் நண்பர்கள் காத்திருக்கும் சூழலில் இம்மாதிரியான நூல்களுக்கு அதன் உள்ளடக்கம், நிரல் முறை, ஆவணங்களின் நம்பகத்தன்மை, தகுதி, சூழல், முன்வைக்கும் வாதங்கள் சார்ந்த முழு விமர்சனங்களை அவ்வளவு எளிதில் எழுதிவிட முடியாது. இத்தகைய அரசியல் நூலின் விமர்சனங்களைப் பிரதிக்கு வெளியே உள்ள அம்சங்களே பெரிதும் தீர்மானிக்கின்றன. அதுவும் ஒருவகையில் சரிதான். அர்த்தம் பிரதியிலா இருக்கிறது?.
Saturday, October 27, 2007
தேவர் ஜெயந்தி
முத்துராமலிங்க (தேவர்) நூற்றாண்டு விழா அரசு நடத்தலாமா?
எதிர்வரும் அக்டோபர் 30ஆம் நாள் பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் நூற்றாண்டு விழாவை அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட ஏற்படுகள் செய்து வருகின்றனர்। பிரமாண்டம் என்பதைப் புரிந்து கொள்ள சில விவரங்கள் நமக்கு உதவும். அதாவது வழக்கமாக ஒரே நாள் மட்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்த இந்த நிகழ்வு இவ்வாண்டு 28,29,30 ஆகிய மூன்று நாட்கள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட இருக்கிறது. அரசு செலவில் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது நினைவு இல்லம் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு 1 1/2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அவரது நினைவிட விரிவாக்கத்திற்கு பசும்பொன் கிராமத்தில் நீண்ட காலமாக, தேவர் சமூகத்தோடு இணக்கமாக வாழ்ந்து வந்த 72 தாழ்த்தப்பட்ட சமூகக் குடும்பங்கள் அவ்வூரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாற்றிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தாலும், தலித் மக்களின் வாழ்க்கை ஆதாரம் 'நிரந்தரமற்றது' என்பதை இது உறுதிப்படுத்துகிறது। மேலும், (தேவர்) இறந்து போன பசுமலையில் அவரது நினைவு மண்டபம் கட்ட அரசு முடிவு செய்து அதற்கும் நிதி ஒதுக்கியுள்ளது. இந்நினைவு மண்டபம் கட்ட தேவைப்படும் இடத்திற்காக பசுமலையில் நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு மேல்நிலைப்பள்ளியின் இடத்தை அரசு கேட்டுள்ளது. இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அப்பள்ளியின் நிர்வாகம் தொடுத்த வழக்கில் உயர்நீதி மன்ற நீதிபதி சந்ரு அரசிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேற்சொன்ன இரண்டு பிரச்சினைகளும் சொல்வது என்ன? ஒரு தனிப்பட்ட நபரின் புகழ்பாட இப்படி இடங்களை அரசே ஆக்கிரமிப்பதின் மூலம் பாதிக்கப்படுவது ஒரு எதிர்கால தலைமுறையின் வாழ்வு என்பது தான்। தேவையெனில் பள்ளிக்கூடத்தை இடம் மாற்ற ஆலோசனை சொல்கிறது உயர்நீதி மன்றமும் அரசும். ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம், ஒரு பள்ளிக்கூடம் உருவாக்கத் தேவையான இடம் - நிலம் அமைவிடம், கட்டுமான உருவாக்கம், அப்பள்ளிக்கூடத்தை மையப்படுத்தி அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் என பாதிப்பிற்கு உள்ளாகும் பல்வேறு அம்சங்களைக் கணக்கில் எடுக்கத் தவறியுள்ளது உயர்நீதி மன்றம். எல்லாவற்றையும் பணம் மட்டுமே சரி செய்துவிட முடியாது. பொதுமக்களின் அடிப்படை உரிமைகள், வாழ்க்கை ஆதாரம் என்ற அக்கறை ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அரசுக்கு அக்கறை வேண்டாமா?
பசும்பொன் முத்துராமலிங்கத்தைப் போல இவ்வாண்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவராயிருந்த ஜீவா, சுதந்திரப் போராட்ட மாவீரன் பகத்சிங் ஆகியோரின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டது। ஆனால் இவ்விழாக்கள் ஒரே ஒருநாள் மட்டுமே அரசால் அனுசரிக்கப்பட்டது. அதிலும் சென்னை கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பகத்சிங் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்வதாக இருந்தும், அவ்விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. நாளிதழ்களின் செய்திகளின்படி, அவ்விழாவிற்குப் போதிய கூட்டம் வராததால்தான் ரத்து செய்யப்பட்டதாக அறிகிறோம். மிக வலிமையான அரசியல் கட்சியாகவும், அக்கட்சியின் தலைவராகவும் இருக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கலந்துகொள்வதாக இருந்தும், அவ்விழாவிற்கு 100 பேருக்கும் குறைவானவர்களே வந்திருந்ததால் அவ்விழா ரத்து செய்யப்பட்டது.
ஜீவா, பகத்சிங் ஆகியோருக்கு இருக்கும் 'பொது அடையாளம்' அடிப்படையில் முத்துராமலிங்கத்திற்கு இல்லை। அவர் தேசிய தலைவர் என்றும், அனைத்து சமூகங்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தவர் என்றும், சுதந்திரப்போராட்ட தியாகி என்றும் பல்வேறு அடையாளங்களை அவருக்கு ஆதரவானவர்கள் உருவாக்கி வருகின்றனர்.ஆனால் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர் என்பதைத் தவிர மற்றைய அடையாளங்கள் இட்டுக்கட்டப்பட்டவை. சுதந்திரப் போராட்டத்தில் தனது முழு சொத்தையும் இழந்து, நீண்ட காலம் சிறையில் வாடி தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழந்து இந்திய விடுதலைக்காக சாதி, மத பேதமின்றி எள்ளளவும் சுயநலமின்றி வாழ்ந்து மறைந்தவர் வ.உ.சிதம்பரனார் அவர்கள். அவருக்கு வழங்கப்படாத 'தேசிய தலைவர்' அடையாளம் ஒரே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுபினர் என இரு பதவிகளுக்கும் போட்டியிட்ட, சொந்த சாதி மக்களை தன் சுயநல அரசியலுக்குப் பயன்படுத்தி சாதிவெறியூட்டி வளர்த்த, தமிழகத்தில் 'சாதிக்கலவரம்' என்ற தொடர் மோதல்கள் நிகழக் காரணமான ஒருவருக்கு அதாவது முத்துராமலிங்கத்திற்கு வழங்கப்படுகிறது. இதைத் தேவர் சாதியினர் உருவாக்கி மகிழலாம். அரசு அதை அங்கீகரிக்கக்கூடாது.
1957ல் இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுதேர்தலின் போது முத்துராமலிங்கத்தை எதிர்த்து, தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியினரை எதிர்ப்பதாகக் கருதிக்கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்களின் மீது கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டவர் முத்துராமலிங்கம்। இவ் வன்முறையின் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிய இம்மானுவேல் சேகரன் 11-09-1957 அன்று படுகொலை செய்யப்பட்டார் (அவரது 50ஆம் ஆண்டு நினைவுநாள் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் பங்கேற்றதாகக் கடந்தமாதம் அனுசரிக்கப்பட்டது. எவ்வித அசம்பாவிதங்களுமின்றி ஒரே ஒருநாள் நடந்து முடிந்தது) அவ்வழக்கில் முத்துராமலிங்கம் குற்றவாளியாகக் கருதப்பட்டு, வழக்கின் முடிவில் விடுதலை செய்யப்பட்டார். 1957 'முதுகுளத்தூர் கலவரம்' குறித்து அப்போதைய மாநில உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் , முத்துராமலிங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறாக, தனித்த சாதி அடையாளத்துடன் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒருவர் தேசியத் தலைவராகவோ,அனைத்து மக்களுக்கான பொது அரசியல்வாதியாகவோ கருதப்படக் கூடாது என்பதே நமது விமர்சனம்.
தேவர் ஜெயந்தி விழாவை அரசு நடத்த எதிர்ப்பு தெரிவித்து 'ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி' என்ற அமைப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது। இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, இது சம்பந்தமாக விளக்கம் தர தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கு விசாரணை மீண்டும் அக்டோபர் 30ந்தேதி அதாவது தேவர் நூற்றாண்டு தினம் அன்று எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. இவ்விசாரணைக்கான அடிப்படை ஆதாரமாக, 1957ல் தமிழக சட்டமன்றத்தில் திரு,பக்தவச்சலம் தாக்கல் செய்த அறிக்கை பயன்படுத்தப்பட்டுள்ளது. பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதும், வழக்குகள் புனையப்படுவதும் வழமையான செயல்கள் தானே என்று முத்துராமலிங்கத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நாம் புறந்தள்ளிவிட முடியாது.
ஏனெனில் இக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சமூக நல்லிணக்கத்திற்குப் பாதகமாக,அவரும் அவரைச் சாந்தவர்களும் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மீது புனையப்பட்டவை. பல்வேறு சாதியினரும் அன்றைய காலகட்டத்தில் அவரது அரசியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர், அரசியல் சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பாக, ஒரு அரசின் இறையாண்மைக்கு சவால்விடும் விதமாக,பல்வேறு கூட்டங்களில் அவரது சொற்பொழிவுகள் அமைந்திருக்கின்றன. அவரது பேச்சுக்கள் தொகுக்கப்பட்டு, புத்தகங்களாக வந்துள்ளன. அவற்றை வாசிப்பவர்களுக்கு உண்மை தெரியும். சமீபத்தில் வெளியான 'முதுகுளத்தூர் கலவரம்' - ஆசிரியர் தினகரன் என்ற நூல் அவர் மீதான குற்றச்சாட்டுகளின் இரத்த சாட்சியமாக இருப்பதை பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பார்ப்பன எதிர்ப்பு, திராவிட இயக்க அரசியல், பிற்படுத்தப்பட்டவர்கள் நலன் என்ற அடிப்படையில் மட்டுமே தமிழகத்தில் கடந்த நாற்பது ஆண்டுகாலமாக அரசியல் நட்ந்து வருகிறது। 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே தமது சுயமரியாதைக்கும், அரசியல் உரிமைக்காகவும் போராடி வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றைக்கும் தனிச்சேரிக் குடிகளாகவும், மனித மலத்தை மனிதனே சுமக்கும் கொடுமைகளை 'தொழில்' என்ற பெயரில் சுமப்பவர்களாகவும், சாதி இந்துக்கள் என அறியப்படுகிற பிற்படுத்தப்பட்ட அனைத்து சாதியினராலும் ஒடுக்கப்படுகிறவர்களாகவும் ஒவ்வொரு நாளும் தீராத துன்பத்தில் உழன்று வருகின்றனர். தென்மாவட்டங்களில் முத்துராமலிங்கத் தேவருக்குப்பின் இத்தகைய ஒடுக்குமுறைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டு அமைப்பாக்கப்பட்ட வன்முறைகளாக நாள்தோறும் ஏதேனும் ஒரு ஊரில் நிகழ்ந்தவண்ணமே உள்ளன.
இத்தகைய வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த, கடுமையாக ஒடுக்க, சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூட இதுவரையான எந்த அரசுகளும் முன்வருவதில்லை। நடுநிலையானவர்கள், சனநாயகவாதிகள், முற்போக்காளர்கள் என சொல்லிக் கொண்டவர்கள் கூட நேர்மையாக இவ்விசயத்தில் நடந்து கொள்வதில்லை. அனைத்தும் போலிகள் என தோலுரிந்து போன நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களே நேரடியாகக் களத்தில் இறங்கி, தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும், அரசியல் ரீதியாக அமைப்பாகவும் முன்வர வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது. இச் சூழலில் 'சூத்திரன் பட்டம்' நீங்க போராடும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் 'பஞ்சமன்' என ஆயிரம் ஆண்டுகளாக ஒதுக்கப்பட்டிருக்கும் பெரும் சமூகக் குழுமத்தின் வலிகளுக்கும்-காயங்களுக்கும் காரணமானவர்களாக இருந்து வருவதைத்தான் 'தேவர் ஜெயந்தி' போன்ற சாதிவெறிக் கொண்டாட்டங்கள் உணர்த்துகின்றன.
உலக தமிழ் மக்கள் அரங்கம் என்ற ஆர்குட்குழுமத்தின் விவாதத்திற்காக முன்வைக்கப்பட்ட கட்டுரை (http://www.orkut.com/Community.aspx?cmm=37515815)
முத்துராமலிங்கத் தேவர் விழா:
முத்துராமலிங்கத் தேவர் விழா: அரசு நடத்துவதை எதிர்த்து வழக்கு
சென்னை,அக்। 24: முத்து ராமலிங்க தேவரின் நூற் றாண்டு விழாவை அரசு விழா வாகக் கொண்டாடக் கூடாது என்று கோரி உயர் நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டுள் ளது। சென்னையைச் சேர்ந்த ஏ।சிம்சன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதா வது: முத்துராமலிங்க தேவரின் நூற்றாண்டு விழா அரசு விழா வாகக் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது।
தென் மாவட்டங்களில் இதனால் பல்வேறு தரப்பினரிடையே பதற்றம் ஏற்படும்। இந்த விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு அக்டோபர் 26 முதல் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேவையற்றது. 3 நாட்கள் அரசு விழாவாகக் கொண்டாடப்ப டும் என்று அறிவிக்கப்பட்டுள் ளது. இந்த அறிவிப்பு, ஒரு குறிப் பிட்ட சாதியை மறைமுகமாக அரசு ஆதரிப்பதாக உள்ளது.
தாழ்த்தப்பட்ட மக்களை அவம திப்பது போலவும் உள்ளது। ஒரு சாதியை மட்டும் அரசு ஆத ரிக்கக் கூடாது. எனவே அக் டோபர் 28 முதல் 30-ம் தேதி அரசு விழா நடத்துவது சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும். சாதித் தலைவர்களின் பிறந்த நாள் விழாவுக்கு அரசு விடு முறை அறிவிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் இந்த வழக்கை புதன் கிழமை விசாரித்தனர். மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் விஜயேந்திரன் ஆஜரானார்.
இந்த விழாவின்போது சட் டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட லாம் என்று கருதித்தான் கமுதி தாலுகாவில் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் ராஜா கலி புல்லா கூறினார்.இவ்வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளக் கோரி திராவிட விழிப்புணர்ச்சி கழ கத்தின் நிறுவன தலைவர் பி.டி.குமார் மனு தாக்கல் செய் தார். அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை. சிம் சன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை அடுத்தவாரம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.
நன்றி: தினமணி
Thursday, September 6, 2007
“தம்பி” - யார் நீ
“தோழர், தம்பி திரைப்படத்தை உடனே பாருங்கள். மாவோ வரிகளில் தொடங்கி, சேகுவேரா வரிகளோடு திரைப்படம் முடிகிறது” என என் அரசியல் நடவடிக்கைகளில் எனக்கு நெருக்கமான ஒரு தோழன் தொலைபேசி செய்தான். திரைப்படத்தின் தாக்கத்தால் தார்மீகக் கோபம் கொப்பளித்துப் பெருகுவதாகக் கூறிய, சமூக அக்கறையில் ஆவேசங் கொண்ட அவனது வரிகளால் ஆர்வத்தால் உந்தப்பட்டேன். ‘ரௌத்ரம் பழகு’, ‘நையப்புடை’, ‘புரட்சி செய்’ என்ற வரிகளோடு திரைப்படத்தின் சுவரொட்டிகள் காணும் இடம் தோறும் என்னைக் கலவரப்படுத்திக் கொண்டேயிருந்தன. நேரமும் மனநிலையும் வாய்த்த ஓர் இரவுக் காட்சியில் என் சகோதரன் ஒருவனோடு அத்திரைப்படத்தை மிகச் சமீபத்தில் பார்த்தேன்.
‘பாஞ்சாலங்குறிச்சி’ திரைப்படமும், அத்திரைப்படம் வெளிவந்த சில மாதங்களுக்குப் பிறகு, மானாமதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நிகழ்த்திய ஓர் கலை இரவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இயக்குனர் சீமானின் அற்புதமான மேடைப் பேச்சும், மிகச் சமீப காலங்களில் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் பங்கு, ஈழ ஆதரவு நிலைப்பாடு, பெரியார் சிந்தனைகளை உரக்கப் பேசும் திண்மை ஆகிய சமூக அக்கறை பொதிந்த இயக்குனரின் நடவடிக்கைகளும் என்னை பாதித்து, கவனம் பெறச் செய்து அவரின் (சீமானின்) பால் ஒருவித ஈர்ப்பை எனக்குள் ஏற்படுத்தியிருந்ததன் விளைவாக, ‘தம்பி’ திரைப்படத்தின் மீதான ஆவல் என்னுள் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. ஐந்து கோவிலான் (இணை இயக்குனர்), கிட்டா (இணை இயக்குனர்), செழியன் (ஒளிப்பதிவு உதவி இயக்குனர்) என சில நண்பர்களும் இத்திரைப்படத்தில் பணி செய்திருப்பதால் திரைப்படத்தைக் காணுவதற்கான ஆவல் என்னுள் ததும்பி வழிந்தது.
ஒரு திரைப்படம் என்ற வகையில் ‘தம்பி’யின் கதையும் காட்சி அமைப்புகளும் புதியன அல்ல. காட்சிக் கோணங்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு, பெரும்பாலானவர்களின் நடிப்பாற்றல் எனப் பலவும் தமிழ் சினிமாவின் தொழில் நுட்ப வளர்ச்சியோடு ஒப்பிடும்போது சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. சீமானின் ‘பாஞ்சாலங்குறிச்சி’யில் வெளிப்பட்ட நேர்த்தியும் உயிரோட்டமும் இத்திரைப்படத்தில் தொலைந்து போயிருந்தன. இத்தகைய பலவீனங்களை ஒதுக்கி வைத்து, திரைப்படத்தின் அரசியல் அல்லது கருத்துருவாக்கம் குறித்து தான் நான் பேச விழைகிறேன்.
ரௌடிகள் அல்லது ரௌடியிசம் தான் கதாநாயகன் ‘தம்பி’யின் எதிர்நிலைப் (Opposite Side) பாத்திரப் படைப்பு. போலீசின் துணையோடு ரௌடிகளை அல்லது ரௌடியிசத்தை ஒழிப்பதுதான் தம்பியின் முழுநேர வேலை. ஒழிப்பது என்பது கூட அழிப்பது அல்ல. தட்டிக் கேட்பது, தவறுகளைத் திருத்துவது, திருத்தி வாழ வைப்பது என்பவைதான் தம்பியின் நோக்கங்கள். அதுவும் கராத்தே பயிற்சியில் தேர்ந்த தம்பி, ஒவ்வொரு ரௌடிக்கும் தருவது ஒரே ஒரு அடியும், ஒரு சில வார்த்தை அறிவுரையும் தான். கழிசடை அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறை கருவியுமான போலீசும் திட்டமிட்டு உருவாக்குபவர்கள் தான் ரௌடிகள். புரட்சிகர அரசியலை அறிந்திருப்பதாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சீமானுக்கு ரௌடியிசத்தின் இந்த மூலவேர் நன்கு தெரிந்திருக்கும். ஆனாலும் கழிசடை அரசியல்வாதிகளைத் திரைக்கதையில் தப்ப விட்டுவிட்டு, ரௌடிகளை ஒழிக்க அல்லது திருத்த போலீசையே துணைக்கு அனுப்புகிறார். ‘தம்பி’யோடு, தம்பியும் மகாத்மா காந்தி முதல் தென்னாட்டு காந்தி வரை தனது அறிவுரைகளை உரையாடல்களில் அள்ளித் தெளிக்கிறார். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் கூடாது என்கிறார். இரத்தத்தை இரத்தத்தால் கழுவ முடியாது என்கிறார். வன்முறைக்குப் பதிலீடாக அகிம்சையைப் போதிக்கிறார் - மிதமான வன்முறையோடு.
நமக்குத் தேவை அமைதியும் சமாதான சகவாழ்வும்தான் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் நமக்கு அல்லது மக்களுக்கு எதிரிகள் யார்? அவர்கள் எந்த வழிகளில் இச்சமூகத்தில் வினையாற்றுகிறார்கள்? அவர்களின் பலம், சமூக- அரசியல் பின்னணி எத்தகையது? என்பவற்றைத் தீர்மானிப்பதில்தான் நமது எதிர்வினையும், செயற்படுகளமும், போராட்ட முறைகளும் உருக்கொள்ள முடியும். ‘தம்பி’ போன்ற தமிழ் சினிமாவின் கதாநாயகனுக்கு வேண்டுமானால் அசுரபலம் கொண்ட அவனது கைகள் மட்டுமே ஆயுதமாகப் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அரசியல் அறிவில் பலவீனமாக, நிராயுதபாணியான, சக மனிதனின் மீது அக்கறை இல்லாத பொதுப் புத்தியில் வாழும் நம் சமூக தனிமனிதனுக்கு நம்பிக்கை ஊட்ட தேவையான தத்துவம், உணர்வோட்டம், அரசியல் ஆயுதம் எவையும் தம்பியால் பரிந்துரைக்கப் படுவதில்லை. ‘நான் உயிரோடு இருக்கும் வரை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என முழு பாரத்தையும் தன் மீது சுமத்திக் கொள்கிறான். ரௌடிகள் திருந்தி வாழ, தான் வெட்டுப்பட்டு வீரத் தழும்புகளோடு பொதுப்புத்தி மாறாத மக்கள் நடுவில் உதாரண புருஷனாக உருவெடுக்கிறான். தம்பி உயிரோடிருக்கிறான் என்ற நம்பிக்கையில் நாமும் நமது அன்றாட வேலைகளில் மூழ்கிக் களிக்க திரையரங்கத்திலிருந்து வெளியேறுகிறோம்.
இதெல்லாம் இருக்கட்டும். இத்திரைப்படத்தின் முக்கியமான இன்னொரு கோணத்தை அல்லது மையமான கருத்துருவாக்கத்தை அணுகிப் பார்க்க விழைவதே நமது தலையாய நோக்கம். கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, குறிப்பாக ‘தேவர் மகன்’ திரைப்படம் வெளிவந்ததற்குப் பிறகு, தமிழ் சினிமாவின் பெரும்பாலான வன்முறைப் படங்கள தேவர் சமூகத்தின் பெருமையையும் தேவர் சாதியினரின் மூர்க்கத்தையும் தேவர் சமூகத்தின் மீதான பிற சமூகங்களின் அச்சத்தையும் திரைக்கதையின் மையமான அல்லது அச்சமான உணர்வோட்டமாகச் சித்தரிப்பதில்தான் திட்டமிட்டுச் செயலாற்றுகின்றன. சில திரைப்படங்கள் வெளிப்படையாகவும், சில திரைப்படங்கள் மறைமுகமாகவும் இத்தகைய அரசியலில் கவனம் செலுத்துகின்றன. வணிக நோக்கம் தவிர வேறில்லை எனவும் இதை அரசியல் கண்கொண்டு விமர்சிக்கக் கூடாது எனவும் கூற முனைபவர்களுக்கு என் எழுதுகோல் முனையே ஆயுதம்.
தமிழ்நாட்டின் சாதி சமூகப் பின்புலத்தை அறிந்தவர்கள் இதனைப் புரிந்து கொள்ள முடியும். இராமநாதபுரம் மாவட்டம் ‘பரமக்குடி’ கதாநாயகன் ‘தம்பி’யின் சொந்த ஊர் என திரைப்படத்தின் உரையாடலில் ஓரிடத்தில் வருகிறது. ‘தம்பி வேலு தொண்டைமான்’என்ற பெயரும் கதாநாயகன் வீட்டுச் சுவரில் தொங்கவிடப்பட்டு, இரண்டு அருகாமை (close-up) காட்சிகளில் காட்டப்படும் பசும்பொன் முத்தராமலிங்கத் தேவரின் உருவ ஓவியமும் கதாநாயகனின் சாதியைச் சொல்லிவிடுகின்றன. ரௌடிகளாகப் பாத்திரப்படும் சண்முக-சரவண பாண்டியன் சகோதரர்களும், உணவில் மாமிச வில்பத்தை அல்ல வெறியை, அக்ரகாரத்து வக்கீலிடம் வெளிப்படுத்தும் ரௌடிக் கும்பலின் கையாள் பாத்திரமும், ரௌடிக் கும்பலின் தலைவன் அண்ணாச்சியின் கடுக்கண் அணிந்த விடைத்த காதும், முறுக்கிய மீசையும், மேற்சட்டையணியாத வெற்றுடம்பும் கொண்ட அப்பா பாத்திரமும் தேவர் சாதி கதாபாத்திரங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். தாக்குதலுக்கு எதிர் தாக்குதலும், வன்முறைக்கு எதிர் வன்முறையும் ஒரு தேவரிடமிருந்து இன்னொரு தேவர்தான் எதிர் கொள்ள முடியும் என்பதை இக்கதாபாத்திரங்கள், நடுரோட்டில் கலவரம் நடந்தால் அலறி ஓடும் பொதுப் புத்திக்கு ஒவ்வொரு முறையும் நினைவூட்டுகின்றன. தேவர் மகனில் தொடங்கி விருமாண்டி, சண்டக்கோழி, தம்பி வரை இக்கூத்து தொடர்கிறது.
இந்த ரௌடிக் கும்பலால் படுகொலை செய்யப்படும் நிராயுதபாணிகளின் வரிசையில் DYFI தோழர் ஒருவரின் குடும்பமும் காட்சிப்படுகிறது. அவர் வீட்டு சுவரில் புகைப்படங்களாகத் தொங்கும் அம்பேத்கரும், பகத்சிங்கும் அவரொரு தலித் தோழராக இருப்பதற்கான சாத்தியங்களைத் தருகின்றன. தலித் தோழரை படுகொலை செய்த சாதி இந்து ரவுடித்தன அறிவுரையால் திருந்துவதோடு தலித் தோழர் குடும்பத்திற்கு முழு உதவியையும் ‘தம்பி’செய்கிறார். எங்களால் (தேவரால்) மட்டுமே தலித்திற்கு உடல் வன்முறையில் இருந்தும் பொருளியல் வன்முறையில் இருந்தும் பாதுகாப்பு தரமுடியும் என இப்பாத்திரப் படைப்பு நமக்கு விட்டுச் செல்கிறது. ஊரையே இரத்தச் சகதியில் முழ்கடிக்கும் ரௌடிக் கும்பலைத் திருத்துவதோடு மட்டுமில்லாமல், தாதா ரௌடியின் குடும்பத்தையும் அவர்களே திட்டமிடும் கலவரத்திற்கு நடுவில் தம்பி வேலு தொண்டைமான் தன் உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றுகிறான். ரௌடிக் கும்பலின் தலைவன் மெய்சிலிர்த்து தம்பியை ‘தன் குலசாமி’யென ஆராதிக்கிறான். அவனுக்கு தம்பி ‘குலசாமி’ தான். ‘ஞானத் தந்தை’ பாரதிராஜாவால் உணர்வூட்டப்பட்ட சீமானுக்கு அவன் பேரன்பு கொண்ட ‘தம்பி’ தான்.
முலை அறுக்கப்பட்ட மூளியாய், இராமநாதபுரம் பெரிய கண்மாயில் தேவர் சாதி வெறியர்களால் நிர்வாணமாக வீசப்பட்ட ஒரு பள்ளச் சகோதரியின், வன்னியர் சாதி வெறியர்களால் வீடு கொளுத்தப்பட்டு, விழுப்புரத்தில் சாம்பலாய்க் கரிந்து போன ஒரு பறத் தாயின், கவுண்டர் சாதி வெறியர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கும், சுரண்டலுக்கும் நித்தமும் உள்ளாக்கப்படும் ஒரு அருந்ததியச் சகோதரியின், போலீசு மிருகங்களால் வாழ்வு சீரழிக்கப்பட்ட வச்சாத்தி பழங்குடியினப் பெண்களின் தலைமுறை வாரிசாய் சீமான் அறியாத ‘பெருங்கோபம்” கொண்ட தம்பிகளில் ஒருவன் நான்.
சாதி வெறியர்களை, வன்கொடுமையாளர்களை, பெண் உடல்களின் மீது தங்கள் அதிகார-வக்கிர வெறியைப் பிரயோகிப்பவர்களை உபதேசம் செய்து திருத்தவும் அதற்கு ‘என்னை நானே எரித்துக் கொள்வேன்’என ‘தம்பி’யைப் போல தன்னைப் பணயம் வைக்கவும் அன்புக்குரிய அண்ணன் சீமானே, அடுத்த திரைப்பட ஆக்கங்களில் அறிவுறுத்த வேண்டாம். ஏனெனில் ‘நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென, எங்கள் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்’. எங்கள் எதிரிகள் யாரென்பதை நாங்களே தீர்மானிக்கிறோம்.
அமைதி என்பது யுத்தத்திற்குப் பிந்தையது. யுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை அல்லது இப்போது தான் தொடங்கியிருக்கிறது.
பின்குறிப்பு :
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு அருகில் இளையாங்குடியில் பிறந்த இயக்குனர் சீமானுக்கு:
‘தெருவில் குரங்கு குட்டிக் கரணம் போட்டாலும் வேடிக்கை பாக்குறீங்க, கொலை நடத்தாலும் வேடிக்கை பாக்குறீங்க’என பொதுப்புத்தியைச் சாடும் உங்கள் சமூகக் கோபம் ‘தம்பி’க்கு மரியாதையைத் தந்திருக்கிறது.
பசும்பொன் தேவரை அறிந்த உங்களுக்கு, பரமக்குடியில் நடுவீதியில் படுகொலை செய்யப்பட்ட போராளி இம்மானுவேல் சேகரனையும் தெரிந்திருக்கும். வேலு தொண்டைமானின் இடத்தில் இம்மானுவேல் சேகரனின் தலைமுறையிலிருந்து ஒருவனைக் கதாநாயகனாக்கியிருந்தால், ‘தம்பி’யின் திரைக்கதை தடம்மாறிப் போயிருக்கும்.
(புதியகாற்று - ஏப்ரல் 2006)
Tuesday, May 22, 2007
அதிகாரம் 1: ஆதியாகமம்
- இளம்பரிதி
ஏவாளுக்கும்
அவள் பொருட்டு ஆதமுக்கும்
சாத்தானை அறிமுகப்படுத்தினார்
சர்ப்பத்தின் உருவில்
தேவன் -
?ன் வடிவக் குறியீடே
சர்ப்பத்தின் உருவென
மறை நூற்களில் ஆதாரமில்லை
சாத்தான்கள் ஓதுவதில்லை
வேதங்களை ஒருபோதும்;
யாவற்றையும் வினவுயென
கி.மு. கிரேக்கத்தில்
முன் னெழுந்த சந்தேகத்திற்கும்
யாதொன்றையும் சந்தேகியென
கி.பி.லத்தீன் அமெரிக்காவில்
கிளர்ந்த கூற்றுக்கும்
நடுவில்
மத்திய கிழக்கு மலைமுகட்டில்
பதுங்கி வளர்ந்தது சர்ப்பம் -
சர்ப்பம்? சாத்தான்
எதிர் -
கடவுள் அதிகாரம் அமைதி
* * * *
தேவனால் ஆசிர்வதிக்கப்பட்ட
இஸ்ராயிலிலிருந்து
நெருப் பாயுதங்கள் பொழிவதை
பரம பிதாவின் குமாரர்கள்
இடை நிறுத்தப் போவதில்லை
பாலத்தீனிய மணற் படுகைகளில்
முக்காலமும் சர்ப்பம் ஊர்ந்த
அடையாளச் சுவடுகள்
அழியு மட்டும் -
தேவகுமாரன்
சிலுவையில் அறையுண்டு
உயிர்த் தெழுந்த
மூன்றாம் நாளிலிருந்து
பல்கிப் பெருகின சர்ப்பங்கள்
பாலை நிலவெளி
நெடி துயர்மலை மடிப்பு
முந்நீர் ஆழிப் பேரலை
யாவிலும் உறைந்த படிமங்கள்
சர்ப்பங்களின் சலன இருப்பாய்;
யாவருக்கும் முன் செல்லும்
கடவுளின் சமூகம்
மௌனமாய் உணரும்
சர்ப்பங்களின் உயிர்த்திருப்பை
SURVIVAL.
அணுப் பிளவு ஆய்வகங்கள்
ஆயுதத் தொழிற் கூடங்கள்
பரபரப்பில் இயங்க
சர்ப்பங்களைப் பூண்டற் றழிக்கும்
சதியா லோசனைகளில்
ஆதமின் வம்சவழிகள்
வெளுத்த முகங்களுடன் -
பஞ்சபூதங்கள் உடனிருக்க
சர்ப்பங்களின் ஆலிங்கனம்
அழிவில்லாப் பெருநிகழ்வென
ஐ வகை நிலங்களிலும்
வானப் பெரு வெளியிலும்
யவ்வனப் புனரியிலும்
கணந்தோறும் நிகழ நிகழ
. . .
சர்ப்பங்கள் நிரந்தரமானவை
நாகசாகி பலுசிஸ்தான் காபூல்
திக்ரித் காசாமலைக் குன்றுகள்
நைரோபி ருவாண்டா கெய்ரோ
பெய்ரூட் குவாதமாலா ஹனாய்
புரூண்டி ஹராரே ஜொகன்னஸ்பர்க்
சால்சால்வடார் ஜகார்த்தா மணிலா
இன்னும் இன்னுமென
சர்ப்பங்கள் தலைநிமிரும்
நிலங்கள் . . .
பரிசுத்த ஆவியின் ஆலயங்களில்
தேவகுமாரனின்
குருதியூற்றி தாகம் தணிகிறார்கள்
மதகுருமார்கள்;
சர்ப்பத்தின் நாவில் வடித்தெடுத்து
சாக்ரட்டீசுக்குப் பருகத் தந்த
ஏதன்சின்
அழகிய நஞ்சுக் கோப்பையிலேயே -
சர்ப்பத்தின் பற்களில் வார்க்கப்பட்ட
பூர்வகுடிகளைக் கொன்றழிக்கும்
இரசாயன ரவைகள் இட்ட
இயந்திரத் துப்பாக்கிகளுடனும்
குருதி நிரப்பும் குடுவைகளோடும்
பனிமலை பாலை கடல் எல்லை
நீதிமன்ற வாயில் நகரவீதி
அடர்காடுகள் அகதிமுகாம்கள்
எங்கெங்கினும்
நிகழும் தேடுதல் வேட்டை -
ஆயினும்
சர்ப்பங்கள் அழிவில்லாதவை
கடவுள்
உயிர்த்திருக்கு மட்டும் மரணமில்லை
சாத்தானுக்கும்.
புதியகாற்று - டிசம்பர் 2006
Thursday, April 5, 2007
ஏகலைவா
பார்ப்பன-சத்திரிய-வைசிய-சூத்திர வருண அநீதிப் படிநிலையில் தீண்டத்தகாதோர் என விலக்கிவைக்கப்பட்ட பஞ்சமர் எனக் குறிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ஒருங்கிணைக்கும் வலைத்தள சமூகப்புலம் இது।
இந்தியத் துணைக்கண்டத்தின் ஆதிக்குடிகளாக இனவரைவியல் நியதிப்படி இம்மண்ணின் முற்றுரிமை பெற்ற பூர்வகுடி மக்களாம் ஒடுக்கப்பட்ட மற்றும் மலையின மக்களின் வாழ்வு, கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் தகவமைவு உள்ளிட்ட வரலாற்று வெளியை மீள் உருவாக்கம் செய்ய வேண்டிய அவசியமானதொரு கால கட்டத்தில் நாம் வாழ நேர்ந்திருக்கிறோம்.
தொழில்முறை வேலைப்பிரிவினையாகப் பகுக்கப்பட்டிருந்த சமூக குழுக்களின் மீது படையெடுத்து வந்த ஆரிய மற்றும் இதர வந்தேறிகள் தம் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் பொருட்டு ஏவிய வன்முறைகளாலும் பின்னிய சூழ்ச்சிகளாலும் ஆதிக் குடிமக்கள் தமக்குள் ஒன்றிணைய வாய்ப்பில்லாத நிரந்தர ஏற்றத்தாழ்வுகளை சுமந்து சாதிய சமூகங்களாக / குழுக்களாக இறுகிப்போயினர். வரலாற்றுக் காலம் தொட்டு நிகழ்ந்து வரும் அந்நிய படையெடுப்புகள் முதல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் காலனியாதிக்க நவீன யுகம் வரை சாதி என்னும் படிமம் எவ்வித மாறுதலுக்கும் உள்ளாகாத வகையில் தொடர்ந்து சூழ்ச்சிகளால் பேணப்பட்டுவருகிறது. காலந்தோறும் நிகழும் மாற்றங்களுக்கேற்ப சாதி என்னும் படிமம் பார்ப்பன இந்துமத உளக்கிடக்கையின் ஆழ்மன சாரமாகவும் புறவய சமூக வெளியின் தார்மீக நியாயமாகவும் பலம் பெற்று வருகிறதேயொழிய, அதன் அடித்தளததை அசைக்க விழையும் அனைத்து மாற்று சிந்தனைகளையும் இதர ஆன்மீக செயலாக்கங்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் தன்னகத்தே உள்வாங்கி அதற்கேயுரித்தான புதைகுழி போன்றதான நெகிழ்வுத் தன்மையோடு தன் அகோரப் பசியின் வாய் பிளந்து இம்மண்ணின் பெரும் சவக்குழியாய் இன்னும் காவு கேட்கிறது நம்மை.
சாதியைப் பாதுகாக்கும் மின்சார வேலியென மனித மனங்களை ஊடறுத்து பின்னப்பட்டிருக்கிறது ‘தீண்டாமை’ எனும் இழை. ஒடுக்கப்பட்ட பூர்வகுடி மக்களுக்கும் வந்தேறி ஆக்கிரமித்த சாதி இந்துக்களுக்கும் இடையில் நிகழ்ந்து வரும் தொடர் போராட்டங்களை மறைத்து, இம் மண்ணின் வரலாறென உருவகப்படுத்தப்படும் அனைத்துப் பொய்மைகளையும் தகர்க்கும் பொருட்டு, மாற்று அரசியல் கண்ணோட்டத்துடன் கலை-இலக்கிய-சிந்தனை தளத்தில் செயல்பட வேண்டிய முக்கியத்துவம் கருதி, ‘ஏகலைவா’ ஒடுக்கப்பட்டவர்களின் குரல் தன் பணியை துவங்குகிறது.
இந்தியத் துணைக்கண்ட சமூகத்தின் பாரம்பரிய பெருமிதங்களை புகழ்ந்துரைக்கப்படும் புராண இதிகாச பொய்மைகளிலிருந்து தொடங்கி இம் மண்ணின் பூர்வகுடி மக்களின் வரலாற்றை மீள் உருவாக்கம் செய்வதே ஆகப் பொருத்தமெனக் கருதியே பார்ப்பன துரோணனால் சதி செய்து பாரம்பரிய திறமையும் மரபுரிமையும் பறிக்கப்பட்டு வந்தேறிகளின் அதிகாரம் நிறுவப்பட்ட கருத்துருவாக்கத்தின் மீட்புக் குறியீடாகவே நம் ஆதிக்குடிமகன் ‘ஏகலைவனின்’ பெயர் தாங்கி வலம்வரத் துவங்குகிறது இவ்வலைத்தளம்.
பாரம்பரிய வில்வித்தையில் தேர்ந்த ஏகலைவனின் வீரத்தையும், திறமையையும் புகழையும் எதிர்கொள்ள அஞ்சி, சதி செய்து அவனது கட்டைவிரலை வெட்டி எறிந்த பார்ப்பன சத்ரிய ஓநாய் கூட்டம் என மறுவாசிப்பு செய்கிறது நம் சிந்தனை.
பூர்வகுடி மக்கள் சதி-சூது அறியாதவர்கள், பொய்மை-புரட்டு தெரியாதவர்கள், வன்மம்-வஞ்சகம் புரியாதவர்கள். ஆகவே எதிரிகள் வீழ்த்தினர். நம் மக்கள் உழைப்பும் உண்மையும் மட்டுமே அறிந்தவர்கள், நிராயுதபாணிகள். தமக்கான வாழ்வை, அரசியலை, வரலாற்றை மீட்டெடுக்கும் திசை வழிகளில் திணறி வருபவர்கள். அவர்களுக்காக எழுதுவோம், உரையாடுவோம், ஒருங்கிணைவோம். வீழ்த்தப்பட்ட சதிகள் அறிந்து, எதிரிகளின் வன்மம் புரிந்து நமக்கான கருத்தியலை ஆயுதமாக்குவோம். பாரம்பரிய உரிமைகளை மீட்டெடுப்போம், இழந்த அதிகாரத்தை முன்னெடுப்போம்.
வகைகள்
- ஈழம் (6)
- கட்டுரை (11)
- கவிதை (2)
- சட்டக் கல்லூரி (1)
- சீமான் (1)
- தேவர் ஜெயந்தி (1)
- முதுகுளத்தூர் கலவரம் (2)
- முத்துராமலிங்கம் (5)
- வீரவணக்கம் (2)