Thursday, November 1, 2007

தலித்களின் மீதான நீதிமன்ற வன்முறை

"முன்னாள் சட்ட அமைச்சரும் ஒரு தலித்துமாகிய பி।சிவசங்கர் ஒருமுறை கூறினார், ஒரே நாளில் இரு நீதிபதிகள் பதவி ஏற்றால் அவர்களில் மேல்சாதிக்காரரை முதலில் பதவிப்பிரமாணம் எடுக்க வைப்பது என்பதை சில மாநிலங்களில் கொள்கையாகவே வைத்துள்ளனர். அப்போதுதான் பதவி உயர்வு வரும்போது அவருடன் பதவி ஏற்ற குறைந்த சாதிக்காரரைக் காட்டிலும் அவருக்கு முன்னுரிமை கிடைக்கும்". - இன்றைய நீதிமுறைக்கும் சாதி அமைப்பிற்கும் உள்ள உறவை விளங்கிக்கொள்ள புகழ்பெற்ற வழக்குரைஞர் ஃபாலி எஸ் . நாரிமன் கூறிய கூற்று.


இந்திய சாதிய சமூகம் அரசியல் - பொருளாதார வளர்நிலைகளுக்கேற்ப 'தீண்டாமை' எனும் ஒதுக்கலை வடிவமாற்றம் செய்து கொள்கிறதே ஒழிய, முற்றாக ஒழித்துவிட முன்வருவதில்லை। அல்லது இந்த இன ஒதுக்கல் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் விரிவடைந்து நீக்கமற நிறைந்துள்ளது என்றும் கூறலாம். கிராம வாழ்வு, நகர நெருக்கடி, கோவில் வழிபாடு, அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், உணவகங்கள், அரசு-மற்றும் தனியார் துறைகளின் பணியிடங்கள், சட்ட மன்றங்கள், பாராளுமன்றம் என 'தீண்டாமை' அளவுமாற்ற - குணமாற்ற விகிதங்களில் மட்டுமே வேறுபட்டு நிலவுகிறது. ஏதோ ஒரு வகையில் இக்கூறுகள் அம்பலப் படுத்தப்பட்டும் பல்வேறு அரசியல் இயக்கங்களால் கேள்விக்குட்படுத்தப்பட்டும் வருகின்றன. ஆனால் கேள்விக்கிடமின்றி 'தீண்டாமை' மௌடீகமாக நிலவும் நீதித்துறையைப் பற்றி எவரும் வாய் திறப்பதில்லை. நீதிமன்றங்களைப் பற்றிய இனம்புரியாத பயமும் மாயையுமே இதற்குக் காரணம். மாறாக தீண்டாமைக் குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் குறித்தோ இந்திய தண்டனைச் சட்டங்கள் குறித்தோ எவ்வித அச்சமும் இருப்பதில்லை.

இந்திய அரசியல் அமைப்பு சட்டவிதி 17, தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டதாக அல்லது 'தீண்டாமை' பேணப்படும் அதன் அனைத்து வடிவங்களும் குற்றம் எனக் கூறுகிறது। இக்குற்றங்களைக் கடுமையான தண்டனை வரையறைக்குள் கொண்டு வருவதற்காகவே, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் - 1989 இயற்றப்பட்டது. இச்சட்டப்பிரிவு - 8 ல் குற்றவாளிகளுக்கு முன்பிணை (Anticipatory Bail) தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொல்லைப்புறமாக, குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு-482 ன் கீழ் உயர்நீதி மன்றத்தை அணுகி குற்றவாளிகள் விடுதலை பெறுவதற்கான வழிவகைகளைத் தேடிக்கொள்கின்றனர்.

மேலும் சாதி - தீண்டாமை வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் (தடுப்பு நடவடிக்கைகள்) விதிகள் -1995 பிரிவு 12(4)ன் படி உடனடியாக நிவாரணம் தரப்பட வேண்டும்। இதற்கு மாவட்ட காவல்துறை அதிகாரி பரிந்துரைப்பதும், மாவட்ட ஆட்சியர் நிவாரணம் வழங்குவதும் பெரும்பான்மையான சம்பவங்களில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றங்களை அனுகினால் கூட, நீதிபதிகள் எவ்வித உத்திரவும் பிறப்பிப்பதில்லை. பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நிவாரணம் தர - நியாயம் தேட முன்வராத நீதிமன்றங்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் குற்றவாளிகளுக்கு உடனடியாகப் பிணையும், தேவைப்படின் வழக்கிலிருந்து விடுதலையும் தந்துவிடுகின்றன. கீழமை நீதிமன்றங்கள் முதல் உயர்நீதி மன்றங்கள் வரை தலித் மக்களுக்கு எதிரான இம் மனோபாவம் தீண்டாமையின் இன்னொரு வடிவம் அல்லாமல் வேறென்ன?.

அதேபோல, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட நில எடுப்பு சட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர்கள் உபரி நிலங்களை மீட்கும் போது நில உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகி, தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்புகளைப் பெற்றுவிடுகின்றனர்। மேலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகக்கூட பயன்படுத்தும் போக்கும் நிலவுகிறது. இதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்தால் உயர்நீதிமன்றம் தலையிட மறுக்கிறது. சேலம் சட்டக்கல்லூரி தலித் மாணவர்கள் மீது புனையப்பட்ட வழக்கு இதற்கு உதாரணமாக இருக்கிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் கீழமை நீதிமன்றங்களில் உள்ள தலித் சமூக நீதிபதிகளை திட்டமிட்டே பழி வாங்குவதும் ஒருபுறம் நடந்து வருகிறது. ஆக, ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான சாதீய மனோபாவமே , ஆதிக்க சாதியிலிருந்து நீதித்துறைக்குள் நுழையும் பெரும்பாலான நீதிபதிகளின் தீண்டாமை மனோபாவமாக நிலவி வருகிறது. இத்தகைய நீதிபதிகளின் கைகளில் தான் 'தீண்டாமை' ஒழிக்கப்பட்டு விட்டதாகச் சொல்லப்படும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தாங்கிய 'புனித' சட்டப்புத்தகங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கருவிகளாகப் பயன்பாட்டில் இருக்கின்றன.

நீதிபதிகளின் சாதிய மனோபாவத்தை - உயர்சாதிச் சார்பை அம்பலப்படுத்தி 'எக்கனாமிக்ஸ் அண்டு பொலிடிக்கல் வீக்லி' வார இதழில் (அக்டோபர் 21, 2006) 'சாதிப் பிரச்சினைகளில் நீதிமன்றத் தீர்ப்புகள்' எனும் தலைப்பில் ராகேஷ் சுக்லா என்பவர் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகளை இங்கே காணலாம்। நீதிமன்றத் தீர்ப்புகளை யாரும் நீதிபதிகளின் உள்நோக்கத்தின் அடிப்படையில் விமர்சிக்கக் கூடாது, விமர்சித்தால் 'நீதிமன்ற அவமதிப்பு' க்குள்ளாக நேரிடும் என்கிற பாதுகாப்பின் கீழ் உள்ள நீதிமன்றங்களின் உயர்சாதிச் சார்பைக் குறித்து சிலவற்றை இங்கே விவாதிக்க வேண்டியது அவசியம் என கீழ்க்காணும் சில வழக்குகளையும் தீர்ப்புகளையும் சுட்டிகாட்டி விவரிக்கிறார் திரு. ராகேஷ் சுக்லா.


1, மே 2005ல் 'இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDBI)' ன் தலைவர் வி।பி।ஷெட்டி என்பவர் 'வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்(1989)' கீழ் கைது செய்யப்பட்டார். அவ்வங்கியின் பொது மேலாளரான பாஸ்கர் ராம்டெக் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இக் கைது நடந்தது. 'பொது மக்களின் பார்வைக்குட்பட்ட ஓரிடத்தில்' பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவரை அவமானப்படுத்தல் என்கிற நிபந்தனை இவ்வழக்கில் பொருந்தி வரவில்லை என மும்பை உயர்நீதி மன்றம் கூறியது. ஒரு தனியறையில் சம்பவம் நடந்ததாகக் கூறி முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது. ஏதோ ஷெட்டியின் வீட்டு வரவேற்பறையில் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது சம்பவம் நடந்தது என்பது போலவே தீர்ப்பை வாசிக்கும் ஒருவருக்குத் தோன்றக்கூடும். உண்மை என்னவெனில் உலக வர்த்தக மையத்தில் உள்ள IDBI வளாகத்தில் உள்ள தலைவரின் அறையிலேயே இச்சம்பவம் நடந்தது. பட்டியல் சாதி மற்றும் பட்டியல் இனத்தவருக்கான நிரப்பப்படாத காலியிடங்களை பின்னோக்கி நிரப்புவது தொடர்பாகப் பேசப்போன இடத்திலேயே சம்பவம் நடைபெற்றது. வன்கொடுமை சட்டத்திற்குப் பதிலாக 'சிவில் உரிமை பாதுகாப்புச் சட்டம் (PCRA) 1969' ல் வழக்கைப் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் காவல்துறைக்கு அறிவுறுத்தியது. காவல்துறையும் அவ்வாறே செய்தது. இரு சட்டங்களின் அடிப்படையிலும் வழங்கப்பட்ட தீர்ப்புகளைப் பற்றி அறிவது பயனுடையதாக இருக்கும்.

2। 1996ல் PCRA சட்டத்தின் கீழ் கிருஷ்ணன் நாயனார் என்பவர் மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டது. தலைச்சேரித் தொகுதிக்கு நடைபெற்ற கேரள சட்டமன்ற இடைத்தேர்தல் ஒன்றின் போது குட்டப்பன் என்பவர் பற்றி உதிர்த்த 'சாதிய'க் கருத்துக்களுக்காக அவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது. 'இடது சனநாயக முன்னணி' மாநாடு ஒன்றில் கிருஷ்ணன் நாயனார் பேசும்போது, 'அந்த அரிஜன் குட்டப்பன் மேசை மீது ஏறி ஆடுறான்' என இகழ்ந்து பேசினார். கிட்டத்தட்ட இதே வார்த்தைகளில் அவர் பேசியதை சாட்சிகள் நீதிமன்றத்தில் கூறினர். 'தீண்டாமை அடிப்படையில் இந்த அவமானம் மேற்கொள்ளப்பட்டது அல்லது அவமதிக்க முயற்சி செய்யப்பட்டது' என்கிற அடிப்படையில் புகார் செய்யப்பட்டுள்ளது எனக் கூறமுடியாது என்பதாக, PCRA சட்டத்தின் கீழ் இக்குற்றம் நடந்ததென சொல்ல இயலாது என கேரள உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இக்குற்றம் வருமா என்றால், மேற்படி சம்பவம் பொதுமக்களின் பார்வையில் நடைபெற்றது தான் என்றாலும், தீண்டாமை அடிப்படையில் அவமதிக்கப்படுதல் என்கிற குற்றம் இங்கே முழுமை அடையவில்லை. ஏனெனில் நாயனார் அவ்வாறு பேசும்போது குட்டப்பன் எதிரில் இல்லை என்றது நீதிமன்றம். மலசலம், குப்பை, செத்த உடலின் பகுதிகள் இவை போன்ற எதையேனும் பட்டியல் சாதியினரின் வீட்டிற்குள் அல்லது அருகில் வீசி எறிவது போன்ற நடவடிக்கைகளில் வேண்டுமானால், பாதிக்கப்பட்டவர் சம்பவத்தின் போது எதிரே இருக்க வேண்டும் என்பது தேவையில்லை எனவும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

3. புல்சிங் வழக்கில் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தீண்டாமை நோக்கில் அவமதிக்கும் உத்தேசத்துடன் (Presumption) சம்பவம் நிகழ்ந்ததா என்கிற பிரச்சினை எடுத்துக்கொள்ளப்பட்டது. லோதி தாக்கூர் என்னும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த நிலப்பிரபு புல்சிங், சமார் என்னும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த பல்லாவின் வீட்டை இடித்ததோடு, பல்லாவின் மனைவியையும் ஐந்து நாட்கள் கடத்திச் சென்றுவிட்டான். டிராக்டரை ஏற்றிக் கொன்றுவிடுவேன் எனச் சொல்லி பல்லாவை மிரட்டவும் செய்தான். இதுகுறித்து போலிசில் புகார் செய்ததற்காக பல்லாவை நோக்கி, 'ஏய் சமரா, என்னைப்பற்றி புகாரா செய்தாய்? என்னை அவமதித்ததற்காக உன்னிடம் ஐந்தாயிரம் ரூபாய் வாங்கியே தீருவேன்' என்றான்.
புல்சிங் மீது இன்னொரு வழக்கும் உண்டு। சமார் சாதியைச் சேர்ந்த பர்சாதி என்பவருடன் அவருக்கு ஒரு நிலத்தகராறு இருந்தது. இது தொடர்பான ஒரு நிகழ்வில் பர்சாதியை நோக்கி, 'ஏய்॥சமார்................! இங்கிருந்து ஓடு. இல்லாவிட்டால் உன்னைச் சுட்டுக் கொல்வேன்' என்றான். சாலை வழியே தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பர்சாதியின் மனைவியை நிறுத்தி, 'ஏய் சமரச்சி, இதென்ன உங்கப்பன் வீட்டு ரோடா, இந்த வழியே நீ போனால் உன்னை உதைப்பேன்' என்றும் கூறினான்.

PCRA சட்டத்தின் 7(d) பிரிவின் கீழ் இவ்விரு சம்பவங்களின் அடிப்படையிலும் இரு தனித்தனி வழக்குகள் புல்சிங் மீது பதிவுசெய்யப்பட்டன। இப்பிரிவின் கீழ் புல்சிங்கின் குற்றங்கள் அமைகின்றனவா என்பதை அறிய உயர்நீதிமன்றம் இரு அளவுகோல்களை உருவாக்கியது. (i) பாதிக்கப்பட்ட நபர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக இல்லாத போதிலும் கூட இந்த அவமானம் நேர்ந்திருக்குமா? ஆம் எனில் 7(d) பிரிவு இதற்குப் பொருந்தாது. மாறாக, பாதிக்கப்பட்ட நபர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் 'மட்டுமே' இந்த அவமானம் நேர்ந்திருக்கும் பட்சத்தில், அதாவது அவர் உயர்சாதியாக இருந்திருந்தால் இந்த அவமானம் நேர்ந்திராது என்றால் புல்சிங் செய்தது தீண்டாமை என கருதலாம் எனக் கூறிய நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே வேறு பிரச்சினைகள் இருக்குமானால், சாதி ரீதியாகத் திட்டினாலும் கூட அது 'தீண்டாமை'யைக் கடைபிடித்ததாகாது என்று வரையறுத்தது. 7(d) பிரிவில் இல்லாத 'மட்டுமே' என்கிற சொல்லை நீதிமன்றம் இங்கே தன் வசதிக்கேற்ப சேர்த்துக்கொண்டது. (ii) இரண்டாவது கேள்வி ; உயர்சாதிக் காரருக்கும் தாழ்ந்த சாதிக்காரருக்கும் இடையிலான பிரச்சினை தனிப்பட்ட காரணங்களினால் இருந்ததென்றால் செய்யப்பட்ட அவமானம் 'தீண்டாமை' அடிப்படையிலாகாது. சண்டை, தகராறு எதுவும் இல்லாத நிலையில் செய்யப்பட்ட அவமானமே தீண்டாமைக் குற்றத்தின் கீழ் வரும் என்றது நீதிமன்றம்.

PCRA சட்டத்தின் மூலவடிவம் 'தீண்டாமைக் குற்றங்கள் சட்டம் 1955' என்பது। 1976லேயே அதற்கு PCRA சட்டம் எனப் பெயரிடப்பட்டது. தீண்டாமை பேசுவது, கடைபிடிப்பது ஆகியவற்றைத் தண்டிப்பதற்கெனவே இச்சட்டம் உருவாக்கப்பட்டது. தீண்டாமையை ஒழிப்பது என்கிற அரசியல் சட்டக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டதே இது. ஒரு சட்டத்திற்கு இருவேறு விளக்கங்கள் சாத்தியமானால், சட்டம் என்ன குறிக்கோளுக்காக இயற்றப்பட்டதோ, அதை நோக்கியதாக உள்ள விளக்கத்திற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். இதற்கு நேர்மாறாக, தனது அளவுகோல்களை நிர்ணயித்துக்கொண்டது நீதிமன்றம். சாதிய ரீதியான இழிவுகள் தொடர்புள்ள எந்தச் சண்டை, தகராறுகளுக்கும் சாதியக் காரணங்களே காரணமாக உள்ளன என்பதே எதார்த்தம். அவை என்னவோ சமமானவர்களுக்கிடையே நடைபெறும் தனிப்பட்ட சண்டை அல்ல. 'ஒரு சமரை 'சமர்' என அழைப்பது அவரை அவமதிப்பதாக இருக்கலாம். ஆனால் அது தீண்டாமை அடிப்படையிலான அவமதிப்பாக இருக்க வேண்டியதில்லை எனவும் நீதிமன்றம் கூறியது.

மேற்கண்ட இரு அளவுகோல்களின் அடிப்படையில் பல்லா, பர்சாதி என்கிற இரு சமர்களும் புல்சிங்குடன் தனிப்பட்ட விரோதம் கொண்டிருந்ததால் மேற்படி குற்றங்கள் இரண்டுமே 'சாதாரண அவமதிப்புகள்' (Insults Simplicity) தானே ஒழிய தீண்டாமை அடிப்படையிலானது அல்ல எனத் தீர்ப்பளித்தது நீதிமன்றம். பல்லா, பர்சாதி, பர்சாதியின் மனைவி ஆகியோர் பட்டியல் சாதியில் பிறந்தவர்கள் என்பது வழக்குடன் தொடர்பில்லாத ஒரு சம்பவம். பல்லா எந்த சாதியில் பிறந்திருந்த போதிலும் அந்த அவமானம் அன்று நிகழ்ந்திருக்கும். PCRA சட்டத்தின் 12ஆம் பிரிவின் படி, குற்றச் சம்பவம் தீண்டாமை அடிப்படையிலானது என்பதை நீதிமன்றம் முன் ஊகித்துக் கொள்ள வேண்டும் (Presume). ஆனால் உயர்நீதி மன்றமோ பிரிவு 12ன் படியான முன் ஊகிப்பு என்னவாக இருந்த போதிலும், இவ்விரு வழக்குகளையும் பொருத்தமட்டில் 7(d) பிரிவின் கீழ் எந்தக் குற்றமும் நடைபெறவில்லை என அதிரடியாகக் கூறியதோடு, புல்சிங்கை இரு வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்தது.

4। 1997ம் ஆண்டு மும்பை உயர்நீதி மன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு : அரிதாஸ் என்பவர் பட்டியல் சாதியினர் ஒருவரை அவமானப்படுத்தி மிரட்டியதாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். பாதிக்கப்பட்டவர் இது குறித்த புகாரைச் சற்று தாமதமாகவே கொடுத்திருந்தார். இந்த தாமதத்திற்கும் கூட அரிதாஸ் தான் காரணம் எனவும் சொல்லி இருந்தார். புகாரில் வெளிப்படும் வெறுப்பிற்கும், தாமதம் குறித்து சொல்லப்படும் காரணத்திற்கும் இருவருக்கும் (அதாவது குற்றம் சாட்டப்பட்ட அரிதாஸுக்கும் பாதிக்கப்பட்ட தலித்திற்கும்) இடையே இருந்த விரோதச் சூழலே காரணம் எனக் கூறிய நீதிமன்றம் அரிதாஸை வழக்கிலிருந்து விடுதலை செய்தது.

5। இரட்டைக் குவளை வழக்கம் தொடர்பாக கர்நாடக உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பொன்று : தேநீர்க் கடைகள், ஹோட்டல்கள், தர்மசாலாக்கள் முதலியவற்றில் தீண்டாமை காரணமாக இத்தகைய வழக்கம் கடைபிடிக்கப்படுவது PCRA சட்டத்தின் படி குற்றம். 12 மணி நேரம் தாமதமாக புகார் கொடுக்கப்பட்டது எனக் காரணம் கூறி நீதி மன்றம் ஒரு ஓட்டல் உரிமையாளரின் மீதான இரட்டைக் குவளை வழக்கொன்றைத் தள்ளுபடி செய்தது. குவளைகள் தனித்தனியே வைக்கப்பட்டிருந்தன எனப் புகாரில் தெளிவாக எழுதப்படவில்லை எனவும் பிராசிகியூஷன் தரப்பு சாட்சிகள் உறவினர்களாக இருந்தனர் என்பதும் வழக்கைத் தள்ளுபடி செய்வதற்கான மேலும் இரு காரணங்களாகக் கொள்ளப்பட்டது.

6। தீண்டாமை ஒழிக்கப்பட்டதன் விளைவாகப் பெறப்பட்ட உரிமைகளை ஒரு பட்டியல் சாதியினருக்கு மறுப்பது PCRA சட்டத்தின் 17ம் பிரிவின் கீழ் ஒரு குற்றம். அதேபோல, யாரேனும் ஒருவரையோ அல்லது ஒரு சிலரையோ சைகைகளாலோ, வார்த்தைகளாலோ தீண்டாமையைக் கடைபிடிக்குமாறு தூண்டுவதும், பட்டியல் சாதியினர் ஒருவரை அவமானப்படுத்துவதும், அவமானப்படுத்த முனைவதும் கூட PCRA சட்டத்தின் கீழ் குற்றங்களே.

துனிசந்த் என்னும் ஒரு நபர் தலித்துகள் உட்பட அந்த கிராமத்தில் உள்ள அனைவரையும் தன் மகனின் திருமண விருந்திற்கு அழைத்திருந்தார்। நங்கு, சனா என்கிற இரு பட்டியல் சாதியினர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அங்கு, வந்திருந்த உயர்சாதியினர் ஏழுபேர் தாங்கள் அங்கே சாப்பிட மாட்டோம் என்றனர். நங்கு, சனா இருவரும் அங்கிருந்து வெளியேற நேர்ந்தது. துனிசந்தும், நேரடி சாட்சிகளும் அளித்த சாட்சியங்கள் பொதுத்தன்மையில் இருந்தது எனவும் அந்த நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறியது என எந்த குறிப்பிட்ட சொற்களும் கூறப்படவில்லை எனவும் கூறிய உச்சநீதிமன்றம் PCRA சட்டத்தின் 7(d) பிரிவின் கீழான குற்றமல்ல இது, எனக்கூறி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது.

இங்கே சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் சில வழக்குகளின் வழியே உயர்நீதி மன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரையான நீதித்துறையின் நுட்பமான தீண்டாமை மனோபாவத்தை நாம் புரிந்து கொள்ளலாம்। இம் மனோபாவத்தை 'உள்நோக்கம்' என நாம் எளிதாக வரையறுத்துவிட முடியும். ஆனால் நீதிமன்ற அவமதிப்பாகக் குற்றம் சாட்டி இந்த உள்நோக்கத்தை மென்மேலும் மூடி மறைக்க நீதிமன்றங்கள் முயல்வதை விடுத்து, தங்களின் சாதிய உள்நோக்கத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வதே நல்லது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இயக்கங்களும் சனநாயக அறிவுஜீவிகளும் இதற்கான நெருக்கடியை உருவாக்கலாம்.

Courtesy : Rakesh Sukla, EPW , A.Marx

0 comments: