Tuesday, October 5, 2010

தமிழரைப் பிணைக்கும் முள்வேலி 3

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் மலாயா இருந்தபோது, ரப்பர் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்ட தமிழர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும்; தங்களது தோட்டத் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படாமல் இருக்கவும்; தொழிலாளர்களின் கேõரிக்கைகள் போராட்டங்களாக வளர்ந்து விடாமல் தடுக்கவும் – 1923ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டனர். இச்சட்டத்தின்படியே, தொழிலாளர் குழந்தைகளின் கல்வித் திட்டத்திற்கும் வழிவகை செய்யப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியாளர்களின் இந்நடவடிக்கைக்கு, கிறித்துவ மத நிறுவனங்களின் முன்முயற்சிகளே தூண்டுகோலாக இருந்தன. தமிழகத்தின் கிராமப்புறங்களில் கல்வி நிலையங்களை உருவாக்கியதைப் போலவே, மலாய தோட்டத் தொழிலாளர் நடுவில் ஊழியம் செய்ய விழைந்த கிறித்துவ மத நிறுவனங்கள், இத்தகைய கல்விக் கூடங்களை ஆங்காங்கே உருவாக்கியிருந்தனர். 1850 இல் மலாக்காவில் ஒரு தமிழ்ப் பள்ளியும் 1859, 1862, 1895 என கால இடைவெளிகளில் சில தமிழ்ப் பள்ளிகளும் இந்நிறுவனங்களால் தொடங்கப்பட்டிருந்தன. 1816 இல் பினாங்கில், மழலையர் பள்ளி என்ற பெயரில் ‘ஹட்கிங்ஸ்' என்ற வெள்ளைப் பாதிரியாரால் தொடங்கப்பட்ட இலவசப் பள்ளிக்கூடமே, முதல் தமிழ்ப் பள்ளிக்கூடமென அறியப்படுகிறது.

அடிப்படையில் கல்விப்பணி, மருத்துவப்பணி, சமூகப் பணி என்ற பெயர்களில் கிறித்துவ நிறுவனங்களும், தனிப்பட்ட வகையில் சில பாதிரியார்களும் மேற்கொண்டிருந்த இத்தகைய தொண்டூழியம், ஆங்கிலேய தோட்ட முதலாளிகளின் சுரண்டலுக்கும் ஒடுக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டு, பாதிக்கப்பட்டிருந்த தோட்டத் தொழிலாளர்களின் மனப் புண்ணுக்கு புனுகு பூசும் செயலன்றி வேறொன்றுமில்லை.

இன்றைக்கும் ஏகாதிபத்திய அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மேற்கொள்ளும் உலகளாவிய சுரண்டலுக்கும் அதி கார அத்துமீறலுக்கும், கிறித்துவ மத நிறுவனங்களின் ‘கருணை வழியும்' தொண்டூழியத்திற்கும் இடையில் அறமற்ற வகையிலான அந்தரங்க அரசியல் உறவு பின்னப்படுகிறது என்ற உண்மை அம்பலத்திற்கு வந்தபோதும், அரசின் நேரடித் திட்டமாக, செயல்பாடாக எந்தவொரு சமூக நலப் பணியும் உருப்பெற – இத்தகைய தன்னார்வ நிறுவனங்களே பரிசோதனைக் களங்களாக, பயிற்சிக் கூடங்களாக அன்றைக்கும் இன்றைக்கும் செயல்பட்டு வருகின்றன.

அவ்வகையில் தோட்டத் தொழிலாளர் சட்டங்கள் முறைப்படுத்துதலுக்குப் பிறகு, 1930 இல் 330 பள்ளிக்கூடங்கள் தோட்டத் தொழிலாளர் குழந்தைகளுக்கென இயங்கத் தொடங்கின. 1938 இல் 547 ஆகவும், 1947 இல் 741 ஆகவும், மலாயா காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட 1957இல் 888 ஆகவும், 1970களில் ஆயிரத்தைக் கடந்தும் வளர்ந்து வந்த தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை – இன்றைக்கு 523 பள்ளிகள் என்பதாகச் சுருங்கிப் போனது. இப்பள்ளிகளில் 1 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். பெரும்பாலான தமிழ்ப் பள்ளிகள் போதிய மாணவர் எண்ணிக்கையின்றியே மூடப்படுவதாக மலாயா அரசு கூறி வந்தாலும், இயங்கி வந்த பள்ளிகளுக்குத் தேவையான அளவில் கட்டடங்கள், பிற வசதிகள், நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்படாததே காரணமென, தோட்டத் தொழிலாளர் குடும்பங்களின் நலனுக்காகப் போராடி வருபவர்கள் கூறுகின்றனர். மய்ய அரசின் கல்வி நிதியில் 95 சதவிகிதம் மலாய் மொழிவழிக் கல்வி கற்பிக்கும் பள்ளிகளுக்கும், 1.5 சதவிகிதம் மட்டுமே தமிழ்ப் பள்ளிகளுக்கும் ஒதுக்கப்படுவதாக இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். எஞ்சியிருக்கும் 523 தமிழ்ப் பள்ளிகளும்கூட, தேவையான அளவு வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கும் போதிய ஆதாரங்கள் உள்ளன.

கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக, மலாயா அரசாங்கத்தில் பங்கு பெற்றிருந்த ம.இ.கா.வும், அதன் தலைவர்களும் குறிப்பாக டத்தோ சாமிவேலுவும் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவாதது மட்டுமல்ல, சரிபாதியாக மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து போவதை வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்தனர். இவர்கள் மீது குற்றம் சுமத்த கீழ்வரும் எடுத்துக்காட்டு ஒன்றே போதுமானது. முன்னாள் மலாயா பிரதமர் மகாதீர் முகமது, அனைத்துப் பள்ளிகளிலும் கணிதம், அறிவியல் ஆகிய இரண்டு பாடங்களையும் ஆங்கிலத்திலேயே கற்பிக்க வேண்டுமென கல்வித் துறைக்கு ஆணையிட்ட போது, சீன சமூகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள் தங்கள் தாய்மொழியில்தான் இப்பாடங்களைக் கற்றுத்தர வேண்டுமெனப் பல்வேறு தளங்களில் இருந்து கோரிக்கை விடுத்து, அதில் வெற்றியும் பெற்றனர்.

ஆனால் ம.இ.கா. தலைவர்கள், அனைத்து தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களையும் அழைத்துக் கூட்டம் நடத்தி, இப்பாடங்களை ஆங்கில வழியிலேயே பயிற்றுவிப்பதை வரவேற்பதாகத் தீர்மானம் இயற்றி, பிரதமருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை அனுப்பினர். ஆக, தாய்மொழி வழிக் கல்வியை ம.இ.கா. தலைவர்களும், மலாயா வாழ் படித்த நடுத்தர வர்க்கத்தினரும் புறக்கணிப்பதன் விளைவாகவே – தமிழ்ப் பள்ளிகள் மூடப்படுவதும் தமிழரின் குடியேற்ற உரிமைகள் நாளுக்கு நாள் கேள்விக்குள்ளாக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாகியுள்ளன.

தமிழர்களில் செல்வந்தர்களும் போதிய வாய்ப்புகள் பெற்ற நடுத்தர வர்க்கத்தினரும் மலாயா தேசியப் பள்ளிகளில் தம் குழந்தைகளுக்கு இடம் தேடிக் கொள்வதால், வசதி வாய்ப்பற்ற பிற தமிழர்கள் குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் மட்டுமே தமிழ்ப் பள்ளிகளை நாடிச் செல்கின்றனர். மேல்தட்டு வர்க்கத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழரின் அரசியல் கட்சிகள் இந்தியாவைப் போலவே, தேர்தல் காலங்களில் மட்டும் ஓட்டு வேட்டையாடிவிட்டு, உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை நடுத்தெருவில் வீசிவிடுகின்றன.

1983 ஆம் ஆண்டில் மலாயா, பொருளாதார நெருக்கடியில் வீழ்ந்த போது, அரசு அதிலிருந்து மீள பல்வேறு திட்டங்களைத் தீட்டியது. இச்சூழலைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த டத்தோ சாமிவேலு, தமிழர்களின் பொருளாதார தற்சார்பை உறுதிப்படுத்துவோம் என்ற முழக்கத்தோடு, ‘மைக்கா ஹோல்டிங்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனத்திற்கான பங்குத் தொகையாக தமிழர்களிடமிருந்து 10 கோடி வெள்ளி (மலாயா பணம்) திரட்டப்பட்டது. தொடக்கக் காலத்தில் லாபத் தொகையில் பங்குதாரர்களுக்கு உரிய தொகையை அளித்த இந்நிறுவனம், காலப்போக்கில் ஏமாற்றத் தொடங்கியது. கையிலிருந்த சொற்பப் பணத்திலும், வீடு மற்றும் நகைகளை விற்றும் இந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய சாமானிய தமிழர்களுக்குக் கிடைத்ததோ அடி உதைதான். ம.இ.கா. விலுள்ள குண்டர்களின் பாதுகாப்பில் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநராக செயல்படுபவர் சாமிவேலுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, சுரங்கத் தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் முன்னாள் மலாயா பிரதமர் துன் அப்துல் ரசாக், 1974ஆம் ஆண்டில் ‘தோட்டத் தொழிலாளர் வீட்டுடைமைத் திட்டம்' ஒன்றைத் தொடங்கி, அரசின் பங்காக 1 கோடி வெள்ளிப் பணத்தையும் இத்திட்டத்திற்கென ஒதுக்கினார். ஆனால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ம.இ.கா.வும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாததால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மேலும், காலனிய ஆட்சிக்குப் பிறகு ஆங்கிலேய முதலாளிகளிடமிருந்து பெருந் தோட்டங்களை வாங்கிய மலாய – சீன – இந்திய முதலாளிகள் காலப்போக்கில் இத்தோட்டங்களை பலநூறு துண்டு நிலங்களாக்கியதன் விளைவாக, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

‘சிவப்பு அடையாள அட்டை' எனும் வேலை அனுமதிச் சான்று வாங்கி, அன்றாடக் கூலிகளாகத் தோட்டங்களில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தமிழர்கள் தள்ளப்பட்டனர். அடையாள அட்டை பெற இயலாத தொழிலாளர்கள் பலருக்கு, இந்தியாவிற்கே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, ம.இ.கா.வின் தேசியத் தலைவராக இருந்த துன் சம்பந்தன் முன் முயற்சியில், ‘தேசிய நலநிதிக் கூட்டுறவுச் சங்கம்' தொடங்கப்பட்டது.இச்சங்கத்திற்கென திரட்டப்பட்ட பல லட்சம் வெள்ளிப் பணத்தில் சில தோட்டங்கள் விலைக்கு வாங்கப்பட்டன. ஆனால், தேசியநலநிதிக் கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகத்தைக் கையில் வைத்திருக்கும் ம.இ.கா. அரசியல்வாதிகள், தொழிலாளர்களின் வாழ்வுரிமைக்கு இச்சங்கம் வழிகோலுவதை சீரழித்து விட்டனர்.

இது மட்டுமல்ல, நீண்ட காலமாக தோட்டங்களில் கொத்தடிமைகளாக உழன்று உடல் நலிவுற்றவர்கள், வயோதிக நிலையிலும் பணியின்போது ஊனமுற்றும் வேலை செய்ய இயலாதவர்கள் என, உழைப்பில் ஈடுபடுத்த ‘தகுதியற்ற'வர்களை இந்தியாவிற்கே திருப்பி அனுப்ப எண்ணிய பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகள், 1907ஆம் ஆண்டு இவர்களுக்கென ‘தமிழர் குடியேற்ற நிதியம்' என்ற திட்டத்தைத் தொடங்கினர். 1958இல் இது ‘தென்னிந்திய தொழிலாளர் நிதி வாரியம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் 1999இல் இவ்வாரியத்தைக் கலைத்துவிட அரசு முடிவெடுத்தது. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த போதும், அதே ஆண்டு சூலை 13இல் பெரும்பான்மையினர் ஆதரவோடு இவ்வாரியத்திற்கு மூடுவிழா நடத்தப்பட்டது.

மலாயா அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு ம.இ.காவும் சாமிவேலுவும் துணை போயினர் என்பதும் வரலாறு. இவ்வாரியத்தின் சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டன. மலாயாவின் தோட்டத் தொழிலாளர்களாக மட்டுமல்ல, இன்றைக்கு வானுயர்ந்த கட்டடங்களோடும், விரிவடைந்த கட்டமைப்புகளோடும் செழித்து வளர்ந்து நிற்கும், மலாயாவின் வளர்ச்சிப் பணிகள் அனைத்திலும் கடும் உடல் உழைப்பாளர்களாகத் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு, வாழ்வாதாரங்கள் நசுக்கப்பட்டு, எதிர்காலம் இழந்து நிற்பவர்கள் தமிழர்களில் அடித்தள, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரே. இவர்களின் வாழ்வாதாரங்கள், தொழிற்சங்க உரிமைகள், குடியேற்ற நலன்கள் ஆகியவற்றைப் புதைகுழிக்கு அனுப்ப, மலாய அரசாங்கத்திற்குத் துணை நிற்பவர்கள் மலாய் மண்ணின் மக்களோ, சீனர்களோ அல்ல – பிழைப்பு வாதத் தமிழர்களே! மலேசியாவிலோ, சிங்கப்பூரிலோ, பிற தெற்காசிய நாடுகளிலோ குடியேறியிருக்கும் சீன மக்கள், எந்தவொரு நாட்டிலும் தம் இனத்தின் அடிப்படை நலன்களைக் காவு கொடுக்கும் விதத்தில் சிந்திப்பதும் செயல்படுவதும் இல்லை. சீன சமூகத்தின் இன ஓர்மையும் போர்க் குணமும்தான், இன்றைக்கு ஆசியக் கண்டத்தின் ஏகாதிபத்தியமாகவும், அமெரிக்காவின் உலகளாவிய அத்துமீறலுக்கு அச்சுறுத்தலாகவும் சீன நாட்டை வளர்த்தெடுத்துள்ளது. 21ஆம் நூற்றாண்டின் அரசியல் பலமாக ‘செஞ்சீனம்' பாதை வகுத்திருந்தாலும், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியப் பண்புகளில் சீன இனத்தின் ஓர்மை பொதிந்துள்ளது. செம்படையணி உருவாக்கப்பட்டதும், மக்கள் சீனம் மலர்ந்ததும் இப்பாரம்பரியப் பண்புகளின் விழுமியங்களிலிருந்துதான். மா சே துங் ஒரு தனிநபரோ அல்லது ஒரு பெயர்ச் சொல்லோ அல்ல. மாறாக, மரபார்ந்த சீன சமூகத்தின் பண்பாட்டு அடையாளம்; வரலாற்றுச் செழுமையில் முகிழ்த்த அச்சமூகத்தின் அரசியல் குறியீடு; வரலாற்றைக் கடக்க விழைந்த ஓர் இனத்தின் தலைமைத்துவம் அவர் என்பது மிகையல்ல.

உலகெங்கிலும் வாழும் 130 கோடி சீன மக்களின் ஒரு குறியீட்டு அடையாளமாக மாவோவைக் குறிப்பிட இயலுமெனில், ஏறத்தாழ 10 கோடி அளவேயான உலகத் தமிழினத்தின் குறியீட்டு அடையாளம் யார்? என்ன? எது? ராவணன், திருவள்ளுவர், ராஜராஜ சோழன், கலைஞர் கருணாநிதி, கற்பு, பனைமரம், எட்டுமுழ வேட்டி, நெல்லுச்சோறு, துரோகம், நக்கித் தின்னும் பிழைப்புவாதம் என யாதாகிலுமொன்றா?

நூறு கோடிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான மக்களினம் உலகில் முக்கியத்துவம் பெறுவது, வியப்புக்குரிய ஒன்றல்ல என எளிமைப்படுத்திவிட முடியாது. எண்ணிக்கை என்பது வரலாற்றைத் தீர்மானிப்பது அன்று. உலகில் எந்த மூலையில் வாழ நேர்ந்தாலும் நூறு கோடி சீனர்களும் தங்கள் தாய்மொழியிலேயே சிந்திக்கவும், பயிலவும், பரிமாறிக் கொள்ளவும், செயல்படவும் விழைகிறார்கள். பவுத்தம், கிறித்துவம், இஸ்லாம் என சீனர்கள் தழுவியிருக்கும் மார்க்கங்கள் அவர்களின் அரசியல் பாதைகளில் தடையணிகளாக நிற்பதில்லை. ஆனால் சீனர்களின் எண்ணிக்கையில் பத்து சதவிகிதம் கூட இல்லாத தமிழ்ச் சமூகம், வாழ நேர்ந்த இடங்களிலெல்லாம் வதைபட்டுச் சாகிறதே என நாம் புலம்பிக் கொண்டிருக்கிறோம்.

இன ஓர்மைக்கான முன் நிபந்தனைகளை, இன வீழ்ச்சிக்கான காரணிகளை ஆய்வதிலிருந்தே உருவாக்கிக் கொள்ள வேண்டும். இக்கட்டுரையிலேயே ஓரிடத்தில் குறிப்பிடுவது போல, தமிழர்கள் தம் முதன்மையான அடையாளமாக மதங்களையே உயர்த்திப் பிடிக்கிறார்கள். அதிலும் பவுத்தம் உட்பட பார்ப்பனியச் சாரம் பிழியப்படாத தனித் தன்மையுடன் எந்தவொரு மார்க்கமும் இங்கு இல்லை. இந்து மதம் கற்பிக்கும் ஏற்றத் தாழ்வுகளை, சாதிய மன உணர்வை இஸ்லாமியர்கள் கூட, அறிந்தும் அறியாமலும் உள்வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதே நடைமுறை உண்மை. தாய்த் தமிழகத்திலோ, இலங்கையிலோ, முஸிலிம்கள் ‘தமிழர்' எனும் அடையாளத்துள் இணைய மறுக்கிறார்கள் என குற்றம் சாட்டுபவர்கள், பெரும்பான்மைத் தமிழர்கள் இன அடையாளத்தை விட, ‘இந்து' மத அடையாளத்தின் வழியாகவே அறியப்படுகிறார்கள் என்பதை மறுக்க இயலுமா? மலாயாவில் கூட ‘இந்துத் தமிழர்கள்' என்றே தமிழர்கள் தம்மை அறியப்படுத்துகிறார்கள்.

மொழி வழியிலான இன அடையாளம் கூர்மையடையாமலிருக்க, முனை முறிக்கும் வேலையை இந்து மதமும் பார்ப்பனியமும் சூழ்ச்சி செய்து வருகின்றன. இவையே தமிழர்களை நெறிப்படுத்தும் ஆன்மீகமாகவும், வழிநடத்தும் அரசியலாகவும் இருக்கின்றன. பன்னெடுங்காலமாக தமிழர்களின் வாழ்வியல் பண்புக் கூறாக பிழைப்புவாதத்தை ஊட்டி வளர்த்து வருவதையே பார்ப்பனியம் செய்து வருகிறது. சங்ககாலப் புறநானூற்று வீரம் பிற்காலச் சோழர்களின் அந்தப்புரங்களில் நிர்மூலமாக்கப்பட்டதற்கும், கடையேழு வள்ளல்களின் அகநானூற்று எச்சங்கள் ஆயிரமாண்டுக்கால சூழ்ச்சிகளில் திரிந்து நச்சாக்கப்பட்டதற்கும் – தமிழரின் உதிரத்துள் ஊறித் ததும்பும் பார்ப்பனியக் கூறுகளே காரணமென்பதை யாவரும் அறிவர்.


Anna
இலங்கையிலோ, மலாயாவிலோ அல்லது குடியேறிய பிற தேசங்களிலோ மாறுபட்ட இட – காலச் சூழல்களில் வாழ்வதனாலேயே, பன்முகப்பட்ட பண்புக் கூறுகளைத் தாங்கி நிற்கும் தமிழினம் என தற்பெருமை கொள்வதற்கு ஏதேனும் மிச்சமிருக்கிறதா? தாய்த் தமிழகத்தின் மிச்ச சொச்சங்களாகத் தான் உலகத் தமிழினத்தின் பன்முகங்களையும் காண முடியும். அனைத்து முகங்களிலும் அதனதற்கே உரித்தான நயவஞ்சகமும் துரோகமும் ஒளிந்து கொண்டிருக்கின்றன. உலகத் தமிழினத்தை இணைக்கும் உறவுப் பாலம் பிழைப்புவாதமெனும் பார்ப்பனியக் கண்ணிகளால் கட்டியெழுப்பப்பட்டதே. ஈழத் தமிழரின் அறுபதாண்டுகாலப் போராட்டங்களில் பிடுங்கிய வரை தனக்கான லாபமென்ன என கணக்குப் பார்ப்பவர்களே இங்கு ஏராளம். ஒரு மகத்தான விடுதலைப் போராட்டம் இப்படிப்பட்டவர்களின் ஊழலிலும் காட்டித் தருதலிலும்தான் ரத்தச் சேற்றில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

உ.வே.சாமிநாதய்யரில் தொடங்கி ‘மைக்ரோசாப்ட்' அல்லது ‘நாசா'வில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் நபர்கள் வரை, தமிழர்களின் உச்ச அடையாளம் என அறியப்படுபவர்களில் சரிபாதிப்பேர் பார்ப்பனராகவே இருக்கின்றனர். தமிழர்களாக மட்டுமல்ல, எந்தவொரு மொழிவழி இன அடையாளத்துள்ளும் பார்ப்பனர்கள் தம்மைக் குறுக்கிக் கொள்வதில்லை. ஆக, பார்ப்பனர்கள் தவிர்த்த ஏனைய தமிழர்களின் உச்ச அடையாளங்கள் யாவரும் பார்ப்பனர்கள் வகுத்துத் தந்த பாதைகளில் பயணித்தவர்களே. பார்ப்பனியக் கறைபடியாத தனித்தவொரு தமிழின அடையாளமாக இருப்பவர்கள் மிகச் சிலரே. அவர்களையும் தமிழர்கள் புறந்தள்ளியே வைத்திருக்கின்றனர். உயர்திணையோ அக்றிணையோ, ஒட்டுமொத்தத் தமிழினமும் இவ்விடயத்தில் ஒருமுகப்பட்டிருக்கின்றனர்.

ராமன் வழிபடப்படுகிறான்; ராவணன் தூற்றப்படுகிறான். கம்பன் கொண்டாடப்படுகிறான்; வள்ளுவன் பிழைத்தால் போதும் என்றிருக்கிறான். மரபார்ந்த அறநெறிகள் வீழ்த்தப்படுகின்றன; மநுதர்மப் போதனைகள் நடைமுறையிலிருக்கின்றன. உழவு தரிசாக்கப்படுகிறது; சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அரண்கள் எழுப்பப்படுகின்றன. உடல் உழைப்புக்கு பட்டினியே மீந்தது; மூளை தந்திரங்களுக்கோ இம்மை – மறுமை பித்தலாட்டங்களின் வழியே முழு நிறைவான வாழ்வு கொழுத்தது. சென்னை, நவநாகரிக மனிதர்களுக்காகப் புனரமைக்கப்படுகிறது; சேரிகள் நண்பகலில்கூட தீக்கிரையாக்கப்படுகின்றன. மலாயாவில் தமிழ்ப் பள்ளிகள் இழுத்து மூடப்பட்டு வருகின்றன எனில், இங்கு மட்டும் என்ன வாழ்கிறது? இந்தியாவில் ஆங்கில வழியில் கல்வி பயில்பவர்களில் மும்பை (மகாராட்டிரம்), டெல்லி, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களே 60 சதவிகிதம் என்ற அளவைக் கடந்து முன்னணியில் இருக்கின்றன. அதிலும் தமிழகம் 2010 ஆம் ஆண்டில் முதலிடம் பெறப் போவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கிராமப்புற பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் தலித் மாணவர்களும் மட்டுமே, இன்றைக்கு அரசுப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

சாதி இந்துக்களில் பெரும்பான்மையினர், ஆங்கில மோகத்திலும் இறக்குமதியாக்கப்பட்ட பண்பாட்டு நுகர்வுகளிலும் வெறி கொண்டு அலைகின்றனர். பார்ப்பனர்களைப் பின்தொடர்ந்து அதிகார மய்யங்களையும் ஆளும் வர்க்க லாபங்களையும் தமக்குள் பங்கிட்டுக் கொள்கின்றனர். தேவைப்படின், பார்ப்பனர்களிடம் ஆலோசனைகளும் பெற்றுக் கொண்டு எதிர் வரும் தலைமுறைகளுக்கும் செல்வம் சேர்க்க, ஏய்த்துப் பிழைக்கும் புதிய உத்திகளை உருவாக்கி வருகின்றனர். டக்ளஸ் தேவானந்தா, டத்தோ சாமிவேலு, கலைஞர் கருணாநிதி இவர்களைப் போன்றவர்கள் சாதி இந்துக்களின் குறியீட்டு அடையாளமாக உயர்ந்து நிற்கிறார்கள். அதனாலேயே இப்போதெல்லாம் ‘தாழ்ந்த தமிழகமே!' என விசனப்படுவதும் பொருளற்றதாகிப் போனது.

கும்பகோணம் கூரைக் கொட்டகையில் பள்ளிக் குழந்தைகள் எரிந்து சாம்பலானது, தமிழனைப் பொருத்தவரையில் ஒரு விபத்து மட்டுமே. திட்டமிடப்படும் படுகொலை களை, எதிர்பாராத விபத்துகளாக தமிழர்கள் கடந்து செல்வதால்தான், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகளும், தன்னாட்சி பல்கலைக் கழகங்களும், மென்பொருள் பூங்காக்களும் தமிழ்த் திருநாட்டின் பெருமைகளாக வளர்ந்து நிற்கின்றன. சுரண்டிக் கொழுப்பவனும் ஏமாற்றிப் பிழைப்பவனும் சொந்த சாதிக்காரனாக இருந்தால் போதும், அவனவன் சாதிக்கூட்டம் அணி திரண்டு பின்னால் நிற்கும். ஏமாற்றப்பட்டவன் இன்னொரு சாதிக்காரனாக இருக்க வேண்டுமென்பது கூட அவசியமல்ல; வலுத்தவன் பிழைத்து விட்டான். சாதிக் கொடி பறக்கிறதா? அது போதும்.

தமிழ்ச் சமூகம் கடைந்தெடுத்த கழிசடைத்தனத்தை உயர்தொழில் நுட்பமாக வளர்த்தெடுத்துள்ளது. படிநிலை அடுக்குகளில் எவன் சாதிக்கு எந்த இடம் என்பதில்தான் சாதி இந்துக்களுக்குள் போட்டியே நிலவுகிறது. ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்ற பூச்சாண்டிக்கெல்லாம் சாதித் தமிழன் அச்சம் கொள்வதாக இல்லை. ‘எவன் செத்தால் எனக்கென்ன?' என்பதே ஒவ்வொரு தமிழனின் தன்னல தம்பட்டமாக ஒலிக்கிறது. ரத்தமும் சதையுமாகக் கண்முன் நிகழ்ந்து முடிந்த இந்நூற்றாண்டின் மாபெரும் துயரமாக, தம் இனத்தின் அழிவுப்படலம் இருந்தது என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இன்றி, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரூபாய் அய்நூறுக்கும் ஆயிரத்திற்கும் தம் அடிப்படை உரிமைகளை, அவமானகரமான முறையில் விற்றுக் கொண்டிருந்தது தாய்த் தமிழினம்.

இன வீழ்ச்சிக்கான, அவலங்களுக்கான, இழிவுகளுக்கான மூல காரணிகளைத் தேடிப் புறப்பட்டால், அது ஆயிரமாண்டுக் கால நெடும்பயணமாக நீள்கிறது. பொன் (பெண்ணாகவும் இருக்கலாம்)னுக்கும் பொருளுக்கும் காட்டித் தந்த முதல் காலம் எதுவென்று அறுதியிட முடியாதுதான். ஒருவனையொருவன் அடிமை கொள்ள எத்தனித்து, சூழ்ச்சி செய்து, போர் தொடுத்து, இன்ன பிறவற்றிற்குப் பின், அடிமை வாழ்வின் சுக துக்கங்களில் தோய்ந்து தேர்ந்து, அதுவே வரலாற்றின் ஓர் நாள் அற்புதமான கோட்பாடென்று தமிழன் கண்டடைந்திருப்பானோ? பார்ப்பனனுக்கு சாதித் தமிழனும், சாதித் தமிழனுக்கு ஆதித் தமிழனும் என்று ‘எழுதப்பட்ட' ஒப்பந்தமாக இந்த அதியற்புதக் கோட்பாடு உயிரோடிருக்க, ‘உணர்ச்சி கெட்ட தமிழனே' என உசுப்பேற்றும் மேடைக் கச்சேரி இன்னும் முடிந்த பாடில்லை.

கச்சேரி என்றவுடன் பார்ப்பன இசைக் கச்சேரியா, தமிழின தலைவரிசைகளின் லாவணிக் கச்சேரியா? என்ற குழப்பத்தின் நடுவில் ஒளிவீசும் கீற்றென ‘பேரறிஞர்' அண்ணா நம் ஞாபகங்களில் எழுகிறார். தமிழ்த் தேசிய உணர்ச்சிக் காவியத்தின் தலைமகன் இவரன்றோ எனும் விழிப்பில் காலம் நம்மை நிலைநிறுத்துகிறது. சொற்கள் எனும் லாவகம் பேச்சாகப் பரிணமித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நவதமிழர் காலத்தில் ‘வாய்ச் சொல் வீர'மென கதிர் முற்றி சாய்ந்து கிடக்கிறது. களத்தில் அடித்துப் பார்த்தால், விதை நெல்லுக்கும் தேறாத விளைச்சலாகத்தான் இருக்குமென உறுதிபடக் கூறலாம்.

பெரியாருக்கு துரோகமிழைத்து கருஞ்சட்டை இயக்கத்திலிருந்து அண்ணா வெளியேறிய போது, தமிழர்களுக்கு அதிர்ச்சி ஏதுமில்லை. தம் ஆடைக்கு ஏற்ற அணிகலன் என சூடிக் கொண்டனர். வாராது வந்த மாமணியென, தாம் தேடிக் கொண்டிருந்த தலைவனாக முடிசூட்டி மகிழ்ந்தனர். தமிழர்தம் பார்ப்பனிய சமரசங்களின் மேதாவிலாசம் அறிஞர் அண்ணா என நாம் குற்றம் சாட்டுவதை, சாதித் தமிழர்கள் ஒருவேளை பெருமிதமாகவும் கொள்ளக்கூடும்! ஏனெனில், அண்ணா வகுத்துத் தந்த பாதையில் பயணித்துதான் ஆதிக்க சாதித் தமிழர்கள் ஊழலிலும் லஞ்ச லாவண்யத்திலும் ஊறித் திளைக்கிறார்கள்.

‘அண்ணாயிசம்' வெற்றிகரமான சூத்திரமாக திராவிடக் கட்சிகளுக்கு இருப்பதை, ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கும் விரிவுபடுத்தி, கோட்டையில் கொடி நாட்டலாம் என்ற நப்பாசையை – சாதி ஒழிப்பிற்கும் சமூக விடுதலைக்கும் அணி திரண்ட ஆதித் தமிழர்களிடம் விதைத்து வருகிறார் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர். இது போக முடியாத மட்டுமல்ல, போகக் கூடாத ஊருக்கும் வழிகாட்டும் பரப்புரை என்பதை – ஆதிக்க சாதித் தமிழர்களால் ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் உழலும் மூத்தகுடித் தமிழர்கள் உணர வேண்டும். மேடையிலிருந்து நாற்சந்தி வரை வாய்ச்சவடாலுக்கு சீழ்கையடித்தும் போக்கிரித்தனத்திற்குப் புறமுதுகு காட்டியும் பிழைத்துக் கிடக்கிறது கனகவிஜயனைக் கல் சுமக்க வைத்த வீரப்பரம்பரை (!) கல்வியில் சிறந்தோங்கும் தமிழினம், அறிவை காலனிய காலத்திற்கு முன்பே வந்தேறிகளிடம் அடகு வைத்து விட்டு, அடிமைத் தனத்தை புத்திசாலித்தனம் என தன்னைத்தானே உச்சிமோந்து கொள்கிறது. கல்லாதவனின் முரட்டுத்தனத்தைவிட, கற்றவனின் கயமைத்தனமும் ஒதுங்கிப் போதலும் ஆபத்தானவை. அய்யோவென்று போகிறானோ? இல்லையோ? சூதும் வாதும் செய்வது, படித்தவனின் முதல் தகுதியாகிவிட்டது. படித்த தமிழனுக்கோ இதுவே முதன்மைத் தகுதியாகவுமிருக்கிறது.

மக்களைக் குற்றம் கூறுவதாக முற்போக்காளர் கருதுவர். இனத்தைப் பழிப்பதாக இனவாதிகள் குமுறுவர். பக்கச் சாய்வென சார்புநிலை கொண்டோர் தூற்றுவர். ஆனால் வலியையும் வேதனையையும் அடிபட்டவனே உணர முடியும் என்பதே யாவருக்குமான நம் பதிலாக இருக்கும். பன்னெடுங்கால தலைமுறை வரலாற்றில், ஒரே இனத்துள் ஆதிக்குடி மக்களை ஆதிக்க சாதிக் குடிகள் என்றென்றைக்கும் தம்மை அண்டிப் பிழைக்க வேண்டுமென்ற, மனப்பிரயாசைதானே இத்தனை அவலத்திற்கும் வழி கோலுகிறது. இலங்கையிலாயிலும், மலாயாவிலாயிலும், தாய்த் தமிழகத்திலும் கூட அடிப்பøடக் கல்வி பெற அடித்தள மக்கள் இன்னும் போராடிக் கொண்டிருப்பதற்கும், ஆரிய – திராவிட இனப்பகையே காரணமெனும் அரதப் பழசான பரப்புரையில் தப்பித்துக் கொள்கிறது சாதித் தமிழினம்.

ஒடுக்கப்பட்டவனிடம் மிச்சம் மீதியிருக்கும் குடியிருப்புகளையும் விளைநிலங்களையும் ‘சந்தை விலை' ஒன்றை தானே நிர்ணயித்து வாங்கி, ‘ரியல் எஸ்டேட்' வணிகம் செய்கிறது, இனத்திற்குள் ஓர் உளுத்தர் கூட்டம். நிலம் இழந்த அல்லது நிலமற்ற ஏழைத் தமிழனுக்கு, அபகரித்த சாதிகளின் ஆட்சி அதிகாரம் தரிசுக் காடுகளைக்கூட தாரை வார்க்கப் போவதில்லை. ஏனெனில் ஊழலில் திரட்டிய பணத்திற்கு நிலம் வாங்க, ஊரெல்லாம் – தமிழ் நாடெல்லாம் அலைகிறது இனத்துள் ஓர் வர்க்கம். மண்ணெல்லாம் இன்றைக்குப் பொன். சென்னை மட்டுமல்ல, அழகுபடுத்த முடிவெடுத்தால் எல்லா நகரங்களுமே அழுக்குகளைக் கழுவ வேண்டும்; அழுக்கானவர்களைக் களைய வேண்டும். இந்திய நகரங்களின் அழுக்குகள் சேரிகள். இந்து நாட்டின் – சமயத்தின் – பண்பாட்டின் அழுக்குகள் ஒடுக்கப்பட்ட மக்கள். இது தானே வழமை.

தமிழர்கள் இந்துக்கள் எனில், அம்பேத்கர் அறிவுறுத்தியவாறு ஒடுக்கப்பட்ட மக்கள் இந்துக்கள் அல்லர். இந்துக்களாக தமிழர்கள் சீரும் சிறப்புமாகப் பிழைக்கும் வரை, ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதித் தமிழர்களாக அறியப்படினும் ‘தமிழினம்' என உறவு கொள்வது எங்ஙனம்? ஊருக்கு இளைத்தவன் எந்தக் கோயிலிலும் ஆண்டியாகத்தான் இருக்க முடியும்; எந்த இனத்திலும் ஒடுக்கப்பட்டவனாகத்தான் இருக்க நேரிடும்; எந்த நாட்டிலும் வாழத் ‘தகுதி'யற்றவனாகத்தான் உழலக்கூடும் என்பது பார்ப்பனிய – முதலாளித்துவ நீதி. எனில், இந்துவாகப் பிறக்க நேர்ந்த ஒடுக்கப்பட்ட சாதி மனிதன் தன்னை இழிவுபடுத்தும் மதத்திற்கும், சாதிப் பிணக்குகளிலும் வர்க்கச் சுரண்டலிலும் தன்னைக் கீழ்மைப்படுத்தும் இனத்திற்கும், அதன் மூலதனக் குவிமய்யத்திற்கும் எதிராகப் போராடுவதென்பது வரலாற்றின் இயங்கியல் விதி.

இலங்கையின் வவுனியா நிலப்பரப்பில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்களப் பேரினவாத ராணுவ பயங்கரவாதத்தின் கீழ் முள்வேலிக்குள் அகதிகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இத்தளை ஓர்மைப்படாத தமிழினத்தின் மீதான புறநிலைக் குறியீடு. அகநிலையில் தமிழரைப் பிணைக்கும் முள்வேலியாக, சாதியம் கால எல்லைகளைக் கடந்து நிறுவனப்பட்டுள்ளது. உலகத் தமிழினத்தை இணைக்கும் இக்குறியீட்டின் தத்துவப் பின்புலமாக உரமிடப்பட்டிருப்பது பார்ப்பனியம். தமிழினத்தின் பிழைப்புவாதத்திற்கு, சோரம் போதலுக்கு, ஆதிக்கசாதி அதிகாரத்திற்கு அரணாகியிருக்கும் சாதியம் அடிமைத் தளையே என உணர வேண்டிய கடப்பாடு சாதித் தமிழர்களுக்கானது.

இந்த முள்வேலியை தங்கக்கூண்டு என பார்ப்பனியம் பசப்பும். ஈழத்தின் அகதி முகாம்கள் நாம் கவலை கொள்வதற்கு ஏதுமின்றி சிறப்பாகவே இருக்கின்றன என ‘இந்து' ராம் சாட்சியம் தரவில்லையா? விடுதலை என்பது, ஒருவன் இன்னொரு மனிதனை ஒடுக்காமல் இருப்பதே. ஒடுக்குகிறவனுக்கு இந்த உண்மையை ‘உணர்த்தும்' கடமை, சாதி – இன – வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு ஆளான ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. செயற்கரிய செய்யப்படும் இக்கடமையின் வழியேதான் பார்ப்பனிய ‘தங்கக் கூண்டு' உடைபடும். தமிழகத் தாயகத்திலோ, இலங்கையிலோ, மலாயாவிலோ, இன்ன பிற தேசங்களிலோ பரவி வாழும் தமிழின மக்களைப் பிணைக்கக் கூடாத, இம்முள்வேலி அறுபடும்போது தான், வன்னியில் மட்டுமல்ல, ஈழ நிலத்தையே தளைப்படுத்தியிருக்கும் பருண்மையான முள்வேலியும் வெடித்துச் சிதறும்.

- கா.இளம்பரிதி

Tuesday, September 22, 2009

தமிழரைப் பிணைக்கும் முள்வேலி 2

பகுதி - 2

மலாயா தீபகற்பத்தில் குடியேறிய இந்திய வம்சாவளியினரின் குடியேற்றப் பின்புலத்தில் மறைக்கப்பட முடியாத வரலாற்றுச் சுவடுகளாக, வறுமைக் கொடுமைகளும் சாதிய ஒடுக்குமுறைகளும் சம விகிதத்தில் பதிந்துள்ளன என்பதே, இக்கட்டுரையின் இதுவரையான செய்திகளின் சாரமாகும். மலாய பல்கலைக் கழகத்தில் இந்திய ஆய்வுத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றிய ஆர். ராமசாமி, "இந்தியத் தமிழர்களின் மலாயக் குடியேற்றத்தில் சாதியின் பங்கு' என்ற தலைப்பில் விரிவான ஆய்வுக் கட்டுரையொன்றை எழுதி உள்ளார். இலங்கையில் ஈழ மக்களின் விடுதலைக் கான ஆயுதப் போராட்டம் தலை தூக்காத கால கட்டத்தில், அம்மண்ணில் நிலவிய சாதிக் கொடுமைகளையும், அதை எதிர்த்து நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களைப் பற்றியும் – இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை நன்கு அறிந்தவர்கள் எவரும் மறுக்க முடியாது. Dalit lady in Malaysia

இன்றைக்கும் கூட, ஈழத் தமிழ் மக்கள் தாங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் சாதி, சமய, சடங்குகளைக் கைவிடாத நிலையிலேயே இருப்பதாகப் பல ஆதாரப்பூர்வ செய்திகள் உள்ளன. ஈழ சமூக வாழ்க்கையிலும் சரி, விடுதலைப் போராட்ட அரசியலிலும் சரி, யாழ்ப்பாண வெள்ளாள சாதியினரின் தலைமைத்துவம் – அதிகாரத்துவம் – ஒடுக்குமுறை ஆகியன பற்றி நேர்மையாக உரையாடல் நிகழ்த்தும் எவராலும் இதை மறுதலிக்க முடியாது. ஆனாலும் இந்தியõவைப் போல, தமிழ் நாட்டைப் போல "எங்கட நாட்டில் சாதிப் பிரச்சனை இல்லை' என்பதாகவே இலங்கைத் தமிழர்கள் பலரும் கதைத்து வருகின்றனர்."இலங்கையைப் போலவே, மலாயாவிலும் தமிழர்கள் இன ஒற்றுமையோடுதான் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பாகுபாடெல்லாம் எங்கள் நாட்டில் இல்லை' என்பதாகக் கூறும், மலாய இந்திய வம்சாவளியினர் அதாவது, இந்து தமிழர்களுக்கு சிலவற்றை சுட்டிக் காட்ட வேண்டியது நமது கடமையாகிறது.

1920களில் பிழைப்புக்காக பெருமளவில் குடியேறத் தொடங்கிய அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1980களில் மலாயாவில் சாதிச் சங்கங்கள் முளைவிடத் தொடங்கின. தமிழகத்தைப் போலவே, மலாயாவிலும் "மலேசிய முக்குலத்தோர் பேரவை', "மலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கம்', "மலேசிய யாதவர் சங்கம்' என ஆதிக்க சாதி சங்கங்கள் கட்டப்பட்டன. ஆகஸ்ட் 11 மற்றும் 12, 2007 ஆகிய நாட்களில் பினாங்கு நகரில், மலேசிய முக்குலத்தோர் பேரவையின் "பத்தாவது தேசியப் பேராளர் மாநாடு' முன்னாள் இந்திய அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர் சிறப்பாளராகக் கலந்து கொள்ள நடைபெற்று முடிந்தது. திருநாவுக்கரசர் முக்குலத்தோர் சாதியை சேர்ந்தவர் என்பதால்தான் இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டார். இது போன்ற ஒரு மாநாட்டில் இதற்கு முன்னர், திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து கலந்து கொண்டிருக்கிறார். 2003 ஆம் ஆண்டில் கெடா மாநில முக்குலத்தோர் சங்கம் "முத்துராமலிங்கத் (தேவர்) தின் 95 ஆம் ஆண்டு ஜெயந்தி சிறப்பு மலர்' வெளியிட்டு, சாதிப் பெருமைகளைக் கொண்டாடியது.

"மலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கத்தின் புதிய செயலவை தேர்வு' ("மக்கள் ஓசை' 27.4.2007), "சிலாங்கூர் முத்துராஜா வழியினர் சேவை அலுவலகம்' திறக்கப்பட்டது, "உலுதிராமில் மருதுபாண்டியர்கள் குருபூஜை' ("மலேசிய நண்பன்' 27.10.2007), "வன்னியர் கூட்டுறவு கழகத்திற்கு பங்குப் பணம் வழங்குதல்' ("மலேசிய நண்பன்' 15.8.2007), "மலேசிய சம்புகுல சத்திரியர் சங்கத்தின் இரண்டாம் ஆண்டுக் கூட்டம்' ("தமிழ் நேசன்', 23.9.2006), "உலுதிராம் சிறீகருமாரி அம்மன் ஆலயத்தில் முப்பெரும் விழா' "போற்றிப் பாடடி பெண்ணே! தேவர் காலடி மண்ணே!' ("மலேசிய நண்பன்' 31.10.2007) என செய்தித் தாள்களும் சாதி வளர்க்கத் துணை புரிந்து வருகின்றன.

ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியன உத்தரவாதம் செய்யப்பட்டு விட்டால், அவனுக்கு வாழ்வின் அடுத்த நிலையாக லவுகீகங்கள் தேவைப்படுகின்றன. அவ்வகையில் ஒரு சராசரி தமிழனின் லவுகீக வாழ்வு – கோயில் வழிபாடு, திருவிழா, களியாட்டம், தமிழ் சினிமா ஆகியவற்றிலேயே லயித்துக் கிடக்கிறது எனச் சொன்னால், எளிமைப்படுத்துவதாக எவரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். நவீன கால தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையும் செயல்பாடுகளும் குறித்து நாம் சற்றே சிந்திக்க முற்பட்டால், இவ்வகையான எளிமைப்படுத்துதலைக் கடந்து சமூகம் எங்கே வளர்ந்திருக்கிறது எனச் சொல்ல முடியுமா? ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக – "இந்து தமிழர்'களாகவும் "சாதித் தமிழர்'களாகவும்தான், உலகம் முழுவதும் பரவியிருக்கிற தமிழர்களின் பெருமை இருக்கிறது. பெருந் தெய்வக் கோயில்களும் அவற்றில் பூசனை செய்ய குருக்கள் என்ற பெயரில் பார்ப்பனர்களும், வீதிதோறும் சிறு தெய்வக் கோயில்களும் அவற்றில் ஆண்டுதோறும் கொண்டாட்டங்களும் இல்லாமல் – இன்றைய உலகியல் தமிழன் எங்கும் இல்லை.

மலாயாவில் நாகரிகப் பெண்கள் அணியும் மேலாடையில் அனுமன் உள்ளிட்ட சில உருவப்படங்களை (வர்த்தக நோக்கிலும் ஆன்மீகம்) அச்சிட்டு துணிக்கடைகளில் விற்பனை செய்து வந்தனர். இந்து மத தெய்வங்கள் இழிவுபடுத்தப்பட்டுவிட்டதாக, பல திசைகளிலிருந்தும் கொதித்து எழுந்து விட்டனர் தமிழர்கள். "சமயத்தை மதிக்காத வியாபாரிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும்' என "பினாங்கு பயனீட்டாளர் சங்க' கல்வி அதிகாரி என்.வி. சுப்பாராவ்

("மக்கள் ஓசை' 12.7.2007) எச்சரிக்கை விடுத்தார். "இந்துக்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளா? அரசாங்கம் தலையிட வேண்டும்' என மகரம் எண்டர்பிரைசஸ் டத்தோ மு. வரதராஜு ("மக்கள் ஓசை' 10.7.2007) வேண்டுகோள் விடுத்தார். "தெய்வத் திருவுருவப் படங்களோடு திருவிளையாடல்கள் வேண்டாம்' என டத்தோ சுப்ரமணியம் கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரைத்தார்.

மலேசியாவின் சுதந்திரப் பொன் விழா 50ஆவது ஆண்டை முன்னிட்டு, பத்துமலை திருத்தலத்தில் சிறப்பு பூஜைகளும் ("தமிழ்நேசன்' 6.9.07), பத்துமலை வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகமும் ("மக்கள் முரசு' 23.9.07), "சிப்பாய் சுங்கை பீலேக்'அதிசய விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகமும் ("தமிழ் நேசன்' 9.9.06), சிறீ பத்திர காளியம்மன் ஆலய 27ஆவது வருடாபிஷேகத் திருவிழாவும் ("மலேசிய நண்பன்' 6.9.07), கோலாலம்பூர் சிறீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் மற்றும் சிறீ நாகேஸ்வரி அம்மன் ஆலய ஏற்பாட்டில் டத்தின் சிறீ இந்திராணி சாமிவேலு தலைமையில் இரண்டாயிரம் பெண்கள் ஆன்மீக பால்குட ஊர்வலமும் ("த ஸ்டார்' 30.7.07), சிறீ சுருதி மகளிர் நலமன்ற தேசியத் தலைவரும் புனித நடை ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான டத்தின் சிறீ இந்திராணி தொடங்கி வைக்க, சுமார் அய்நூறு பேர் கலந்து கொள்ளும் ஆன்மீகப் பயணமும் ("தமிழ் நேசன்' 29.3.07), ஈப்போ குங்குமாங்கி மகா காளியம்மன் ஆலயத்திற்கு சுமார் பன்னிரண்டு லட்சம் வெள்ளி செலவில் கும்பாபிஷேகமும் ("தமிழ் நேசன்' 7.7.06), ஈப்போ பாராட் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் தேர்தலில் வெற்றிபெற கூச்சால் சிறீ மகா பத்ரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்புப் பிரார்த்தனையும், இவ்வாலயத்தில் 48 நாட்கள் மண்டலாபிஷேக பூசை பூர்த்தியுடன் 108 சங்காபிஷேகமும் ("தமிழ் குரல்' 19.3.06) என தமிழகத்தைப் போலவே, மலேசிய மாநிலங்களிலும் தமிழர்களின் ஆன்மீகக் கொண் டாட்டங்கள் சளைத்தவையல்ல.

இந்து சமயத்தின் தொங்கு சதைகளாக வளர்ந்து வரும் யோகா – தியான மய்யங்கள், ஆன்மீகப் பேச்சாளர்கள் மலேசியாவிலும் கால் பதிக்கத் தொடங்கியுள்ளனர். "நான் இந்த உலகின் ஒரு பகுதியல்ல. இந்த உலகம் என்னுடைய ஒரு பகுதியாகும்' என்ற உளறல் பேச்சுக்கெல்லாம் ஆன்மீக மடங்கள் உருவாகிவிட்டன. இப்படிப்பட்ட ஒருவருக்கு எதிராக, "இந்து சமயத்தை இழித்துப் பேசுவதா?' என மகா மாரியம்மன் தேவஸ்தானம் கண்டனம் தெரிவிக்

கிறது. இவருக்கு எதிராக 123 பேர் போலிசில் புகார் தெரிவித்தனர். "போலிஸ் விசாரணை வரை அனைவரும் பொறுமை காப்பீர்' என இந்து சங்கம் கோரிக்கை (12.3.07 "மக்கள் ஓசை') வைக்கிறது. ஆனால் தாய்த் தமிழ் நாடோ, இம்மூடநம்பிக்கை முரண்பாடுகளையெல்லாம் களைந்து இன்னும் முன்னேறிவிட்டது. இங்கே நடமாடும் கடவுள்கள் பலர், அங்கே இப்போதுதான் முளைவிடத் தொடங்கியுள்ளனர். நட்பு முறையில் இம்முரண்பாடுகளை இந்து மதம் (சங்கம்) தீர்த்து வைக்கும். ஏனெனில், மூடத்தனங்களே இந்து மதத்தின் மூலதனம் என்பது அறிவியல் சான்று.

"ஆலயங்களில் பூஜைகள் மட்டுமன்றி, சமயக் கருத்தரங்கம், பாலர் கல்வி, நன்னெறிச் சொற்பொழிவு ஆகியவற்றை நடத்தி மக்களுக்கு சமயத் தெளிவு ஏற்படுத்தினால், இது போன்றவர்களிடம் மக்கள் ஏமாற மாட்டார்கள். இந்து சமயத்தை சிறுமைப்படுத்துவோர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று சிறீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன், ஆலய மண்டபத்தில் கூட்டப்பட்ட கண்டனக் கூட்டத்தில் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் "இந்து சமயத்தைப் பற்றி ஓர் இந்துவே பழிப்பதை சில இந்துக்கள் கேட்டுக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தது வேதனைக்குரியது' என்றார் தொழிலதிபர் டத்தோ முனியாண்டி என்பவர் ("மலேசிய நண்பன்' 16.3.07). மேற்குறிப்பிட்ட கருத்தாளர்களின் வார்த்தைகளைச் சற்று ஆழ்ந்து நோக்கினால், இந்தியாவில் மத வெறி நடவடிக்கைகளில் ஈடுபடும் சங்பரிவார அமைப்புகளின் கருத்தைப் பிரதிபலிப்பனவாகவே இருக்கின்றன. இந்துமத உணர்வை அரசியல் நடவடிக்கைகளாக மாற்ற, இதுபோன்ற சமய சந்தர்ப்பப் பேச்சுக்கள்தான் அவர்களுக்கு உதவுகின்றன. இவர்களைப் போன்றவர்களிடையிலிருந்து தான் "இந்து நடவடிக்கைகள் குழு' போன்றவை உதித்திருக்கும் என சந்தேகிக்க இடமுண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்களிடத்திலும் புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்களிடத்திலும் மதரீதியான பிளவை ஏற்படுத்தி, இந்து உணர்வின் மேல் பார்ப்பனிய – சாதிய மேலாண்மையை நிறுவ, ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அதன் உறுப்பு அமைப்புகளும் செயல்பட்டு வருவதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

Malaysia's tamils

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஒரு சரா சரித் தமிழனின் லவுகீக வாழ்க்கை – கோயில் வழிபாடு, திருவிழாக் களியாட்டங்கள் ஆகியவற்றைப் போலவே பொதிந்திருக்கும் இன்னொரு அம்சம் தமிழ்த் திரைப்படங்கள். வளர்ச்சி பெற்றிருக்கும் தகவல் தொடர்பு சாதனங்களோடு, திரைப்படத்திற்கு இருக்கும் முதன்மையான தொடர்பு, உலகம் முழுவதும் இன்றைக்கு ஒரே நாளில் திரைப்படங்களை வெளியிடும் அளவுக்கு மேம்பட்டிருக்கிறது. அவ்வகையில் கடந்த ஆண்டு வெளியாகி மிகுந்த லாபம் ஈட்டிய ஒரு திரைப்படமாக, ரஜினி நடித்த "சிவாஜி' படத்தை எடுத்துக் கொள்வோம். "குறித்த நேரத்தில் இப்படம் காட்டப்படவில்லை என்பதற்காக திரையரங்க உடைப்பு, எரிப்பு, நச்சு மாவு வீச்சு, அடிதடி முதலானவையும் நடந்துள்ளன' என ("மக்கள் ஓசை' 20.6.2007) திருமாவளவன் என்பவர் எழுதுகிறார். மலாயாவை விடுங்கள். ஒவ்வொரு நாளும் யுத்தத்தில் எரிந்து கொண்டிருந்த யாழ்ப்பாணத்தில் இப்படத் தைக் காண, பத்து நாட்களுக்குப் பின்னரும் திரையரங்க வாயில்களில் நீண்ட வரிசையில் தமிழர்கள் காத்துக் கிடந்தனர் என்ற செய்தி, தமிழர்களின் மன உணர்வைப் படம் பிடித்துக் காட்டுவதாக இல்லையா? "வீழ்ச்சியுற்ற காலத்திலிருந்து கலையுரைத்த கற்பனைகளை நிலையெனக் கொண்டாடும் மன இயல்பினராக, தமிழர்கள் வாழ்வதே இதற்குக் காரணம்' என்கிறார் திருமாவளவன்.

ஆனால் "சிவாஜி' திரைப்படத்திற்கு வரவேற்பும் கொண்டாட்டமும் இப்படி இருக்க, தமிழக அரசு தயாரித்த "பெரியார்' திரைப்படமோ மலேசியாவில் படாதபாடுபட்டு விட்டது. திரைப்படம் தயாரிப்பில் இருந்த காலகட்டத்திலிருந்தே "பெரியார்' படத்திற்கு எழுந்த கண்டனங்களும் எதிர்ப்பும் தமிழர்களைப் புரிந்து கொள்ளப் போதுமானவையாயிருந்தன. "இந்துக்கள் மனம் புண்படும்படி பாடல் எழுத வேண்டாம்' என வைரமுத்துவிடம் இந்து அமைப்பினர் வேண்டுகோள் ("மலேசிய நண்பன்' 3.4.07) விடுத்தனர்.

""தந்தை பெரியார் அவர்கள் 1929ஆம்ஆண்டு மலாயாவிற்கு வந்த போது, "அவர் இந்நாட்டிற்குள் நுழையக் கூடாது' என்று இந்து மத அமைப்பினர் தீர்மானம் போட்டு, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மனு கொடுத்தனர். அந்த எதிர்ப்பை உடைத்தெறிந்து தந்தை பெரியார் அவர்கள், பல ஊர்களில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் உறையாற்றிவிட்டு வெற்றியுடன் திரும்பினார். மலேசியாவில் மட்டுமல்ல, தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களும் கூட பெரியாரை அவர்தம் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு புரிந்து கொள்ளாமல், ஒரு மரியாதைக்காக அவர் மீது மதிப்பு வைக்கின்றனர். பெரியார் கொள்கைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாததும், பகுத்தறிவு உணர்வை வளர்த்துக் கொள்ளாததுமே, தமிழர்களின் குழப்பமான சிந்தனைக்கு வழிகோலுகின்றன.

மலேசிய இந்திய காங்கிரஸ் இன்றைக்கு பலவாகப் பிளவுபட்டிருப்பது சாதிப் பிரச்சனைகளை முன்வைத்துதான். "ம.இ.கா. தேர்தலைச் சந்தித்த போதெல்லாம் சாதி அரசியல் நடத்துபவர் டத்தோ சிறீ சாமிவேலுதான்' என பதினாறு ஆண்டுகளுக்கு முன்பே ம.இ.கா.விலிருந்து பிரிந்து அய்.பி.எப். என தனிக்கட்சி தொடங்கிய டத்தோ எம்.ஜி. பண்டிதனின் ("மக்கள் ஓசை' 2.2.06) அறிக்கை கூறுகிறது. ம.இ.கா.விலிருந்து நீக்கப்பட்ட அம்பாங் முனியாண்டி என்பவரும், "ம.இ.கா.வில் அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் வலம் வருபவர்கள் சாமிவேலுவின் உறவுக்காரர்கள்தான். ம.இ.கா.வில் ஒரு ஜாதிக்காரர்களுக்கு மட்டுமே பட்டம், பதவி' என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார்.

"சாதிப் பித்து பிடித்தவர்களுக்கு ம.இ.கா.வில் இனி இடமில்லை' என சாமிவேலு ("தமிழ் குரல்' 28.1.06) இவர்களுக்கு பதில் சொல்லியிருந்தாலும், ம.இ.கா.வின் பிளவுகளுக்கும், இறுதியாக நடைபெற்ற மலேசிய தேர்தலில் ம.இ.கா. குறிப்பாக, சாமிவேலு பெற்ற தோல்விக்கும் முதன்மைக் காரணம், இவர்களிடம் குடிகொண்டிருக்கும் சாதி உணர்வுதான் என்பதை ஆராயத் தேவையில்லை.

தமிழர்களின் பண்பாட்டுச் செயல்பாடுகளில் இந்து மத மூட நம்பிக்கைகள் மேலாதிக்கம் செலுத்துவதால்தான், தமிழர்கள் இன்றைக்கு சாதி சங்கங்களாகப் பிளவுபட்டு நிற்கின்றனர். இத்தகைய சாதி சங்கங்களை வளர்த்துக் கொண்டே தான், மறுபுறம் இந்துத்துவ ஒருமைப்பாடு பற்றியும் இந்து சங்கங்கள் போதித்து வருகின்றன. ஒரு தமிழனோ, இந்தியனோ சாதியாகப் பிளவுபடாமல் இந்துவாக மட்டும் இங்கு இருக்கலாகாது. நாளுக்கு நாள் சாதி சங்கங்கள் பலம் பெற்று வருவதால்தான், மலேசியாவில் இன்று கல்விக் கூடங்களில் கூட சாதி சங்கங்கள் பண்பாட்டு நடவடிக்கைகள் என்ற போர்வையில் நுழையும் அவலம் நேர்ந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், பண்பாட்டு நிகழ்வுகள் என சாதி சங்கங்கள் தங்களது சங்கங்களின் முகவரியிலேயே மாணவர்களுக்கு "சான்றிதழ்கள்' வழங்குவதும், பரிசுப் பொருட்கள் தருவதும் இன்றைய மலேசிய கல்விக் கூடங்களில் இயல்பாகி வருகின்றன.

""இன்று பள்ளிகளில் அரசியலோடு சாதியும் உள்ளே நுழைந்து ஆதிக்கம் செலுத்துகிறது. ஒரு சில பள்ளிகளில் தலைமை ஆசிரியரும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் ஒத்துப் போகாததற்கு, சாதிப் பிரச்சனையும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. ஆசிரியர்கள் சிலர் தாங்கள் படித்துக் கொடுக்கின்ற பிள்ளைகள் கீழ் சாதிக்காரர்கள் என்பதால், தன் பிள்ளைகளைத் தேசியப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். சில பிள்ளைகளை ஏசும் பொழுது, சாதிப் பெயரை குறிப்பிட்டுக் கொள்வதில் சில ஆசிரியர்களுக்கு கரும்பு கடிக்கிற மாதிரி. இன்றோ பல பிள்ளைகள் படிப்பை சுமையாகவும் ஆசிரியரை எதிரியாகவுமே நினைக்கின்றனர்'' என ("செம்பருத்தி', சூன் 07) இதழில் எழுதுகிறார் கா. கலைமணி.

புதிய தலைமுறை மாணவர்களிடம் கல்வி பயிலும் பிஞ்சுப் பருவத்திலேயே சாதி உணர்வை, நஞ்சாய் வளர்த்தெடுக்கத் தொடங்கியுள்ளன மலேசியாவின் சாதி சங்கங்கள். அடுத்த தலைமுறையில் மலேசியத் தமிழர்களிடையே சாதிச் சண்டைகள் பெருமளவில் நடக்க இப்போதே விதை தூவப்பட்டு வருகின்றன.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதை என அங்கலாய்ப்பதில் எவ்விதப் பயனுமில்லை.பெரியார் சொல்வது போல, இந்து மதம் ஒழியாத வரை சாதியம் ஒழியப் போவதில்லை. "மதம் ஒரு அபின்' என்று கார்ல் மார்க்ஸ் விமர்சித்தது, சாமானிய மனிதனுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் சாதியின் பெயரால் பிளவுக்கும், சண்டை சச்சரவுக்கும், இந்திய / தமிழ்ச் சமூகத்தின் பின்னடைவுக்கும், வீழ்ச்சிக்கும் வழிகோலுவது இந்து மதம் அன்றி வேறொன்றுமில்லை! சாதிக்கொரு கோயில், வீதிக்கொரு தேரோட்டம் என தமிழ்ச் சமூகத்தில் உட்பூசல்கள் பெருகி வளர, சாதி சங்கங்களை அரவணைத்து அழியாது காப்பதையே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவைதான்,உலகம் முழுவதும் இந்து மத சங்கங்களும் இயக்கங்களும். இதைப் புரிந்து கொள்ளாதவரை, உலகின் எந்த மூலையில் வாழும் தமிழர்களும் இன – பண்பாட்டு – மொழி அடிப்படையில் ஓர்மை கொள்வது கடினமே.

(அடுத்த இதழிலும்)

- கா.இளம்பரிதி