Saturday, January 5, 2008

‘தலித்முரசு முடிவை நோக்கி...’

‘தலித்முரசு முடிவை நோக்கி...’
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக – ஆவணப்படுத்தப்படும் அச்சு வடிவமாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘தலித் முரசு’ இதழின் முக்கியத்துவம் குறித்து சமகால வாசகர்கள் யாவரும் அறிவர்। கடந்த நவம்பர்2007 இதழில் ‘தலித்முரசு முடிவை நோக்கி...’என்ற வேதனைமிகு அறிவிப்பு ஒன்றை அவ்விதழின் ஆசிரியர் எழுதியிருந்தார். பெரிதும் வணிகமயமாகி வரும் நமது சமூக சூழலில் தார்மீக நெறிகளுக்கு மாறாக, தம் அடிப்படைக் கொள்கைகளை சமரசம் செய்து கொள்ளாமல் எந்த ஒரு தனிமனிதனும் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தனி மனிதர்களையும் தாண்டி நிறுவனங்கள், துறைகள், சமூக குழுமங்கள், அரசியல் அமைப்புகள், அறநெறிகள் என நேரிய பாதையில் பயணிக்க விழையும் அரிதான சிலவற்றையும் விட்டுவைக்கவில்லை. வேரடி மண்ணோடு வீழ்த்திவிட துடிக்கிறது வணிக மோகமும் நுகர்வு வெறியும் கொண்டலையும் சமகால சமூகம்.

ஆனாலும் ‘நல்லோர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை’ என்ற வார்த்தைகளில் அறநெறிகளை, மதிப்புமிகு விழுமியங்களை, அழிவுறாத உண்மைகளைப் பேசியும் எழுதியும் காத்தும் வரும் தலைமுறை முற்றாக அழிந்துவிடுவதில்லை. 90 விழுக்காட்டு சமூகக் கழிவுகளை சுத்தம் செய்து, தன் வலிபொறுக்கும் 10 விழுக்காட்டு சமூக ஆற்றல்களை புசிக்க அலையும் பெருந்தீனி சமூகத்தின் முகத்தில் காறி உமிழ வேண்டாமா? சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்ட ஒவ்வொருவரின் கடமையாக 10 விழுக்காடேயான உண்மைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் நேர்ந்துள்ளது. அவ்வகையான செயல்களில் ஒன்றே ‘தலித் முரசு’ போன்ற இதழ்களைத் தாங்கிப் பிடிப்பதும்.

தலித் முரசு என்று பெயர் தாங்கி இருப்பதாலேயே இவ்விதழ் தலித் மக்களின் உணர்வுகளை – நியாயங்களை மட்டும் பேசி வந்ததில்லை என்பதை தொடர்ந்து இவ்விதழின் வாசிப்பாளர்களாக இருப்பவர்கள் அறிவர்। சாதி, மதம், வர்க்கம், இனம், பால் என அனைத்து தளங்களிலும் நிலவும் ஆதிக்க – அதிகார வன்முறைகளை எதிர்த்தும், மறுதலிக்கப்படும் குரல்களை உயர்த்திப் பிடித்தும் வந்திருக்கிறது தலித் முரசு। நமது சமகாலத்தின் குரலாக, ஒடுக்கப்பட்ட மனங்களின் பதிவாக இது போன்ற இதழ்களை உயிர்த்திருக்கச் செய்ய வேண்டியது நம் கடமையென உணர்வோம்.ஒவ்வொருவரும் ஆண்டுக்கட்டணம் (சந்தா) செலுத்தி உறுப்பினராவோம். நம் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துவோம். ‘சத்தியவான் பலவான்’ என நிலைநிறுத்துவோம்.


ஆண்டுக் கட்டணம்: ரூ.100
வாழ்நாள் கட்டணம்: ரூ.1000
தொடர்பு முகவரி:
புனித பாண்டியன்
ஆசிரியர் - தலித்முரசு
203, ஜெயம் பிரிவு - சித்ரா அடுக்ககம்
9, சூளைமேடு நெடுஞ்சாலை
சென்னை-600 094
தொலைப்பேசி: 044-2374 5473