Saturday, December 22, 2007

விபத்துகள் தற்செயலானவை படுகொலைகள் திட்டமிட்டவை

- இளம்பரிதி

_
இனியும் எங்களால் தாக்குப் பிடிக்க முடியாது
இரத்தத்தில் வரையப்பட்டிருக்கும் இந்த வார்த்தைகளை
வாசிப்பது பேரரசருக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்குமானால்
இழுக்கற்றதாகக் கிடக்கட்டும் எங்கள் பிணங்கள்

- விக்டர் செகலென்

கருப்பு ஞாயிறுகளின் வரலாறு தமிழகத்தில் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றது. கடந்த ஆண்டின் இறுதியில் ‘சுனாமி’ எனும் கடற்கோள் அழிவு துவக்கி வைத்த மரண ஓலம், இந்த ஆண்டின் இறுதியில் சூழ்ந்து நிற்கும் மழை வெள்ளத்தால் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் பெருமழை தமிழகத்தை வெள்ளக் காடாக மாற்றியதன் விளைவு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்களின் வாழ்க்கை நிலத்தினின்று பெயர்ந்து நீரில் அமைந்தது. தற்காலிகமாகவே எனினும் வெள்ள நீரால் வீடுகள், வயல்வெளிகள், பயிர்கள், சாலைகள் என அனைத்தும் கடும் பாதிப்புக்குள்ளாகி இயல்பு வாழ்க்கை சீர்கெட்டது. மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை முன்னூரைத் தாண்டியது. பட்டுக் கோட்டைக்கு அருகிலும் இராமநாதபுரம் மாவட்டம் சனவேலிக்கு அருகிலும் இரண்டு பேருந்துகள் வெள்ள நீரால் இழுத்துச் செல்லப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த கொடுமை நிகழ்ந்தது. இயற்கையின் பேராற்றலுக்கு முன்னே, மனித எதிர்வினை செயலற்றுப் போனது. இது புரிந்து கொள்ளவும் பொறுத்துக் கொள்ளவும் கூட சாத்தியமுள்ளது.

ஆனால் தமிழகத்தின் தலைநகரில் நாற்பது நாட்கள் இடைவெளியில் நடந்து முடிந்திருக்கும் கொடூர நிகழ்வுகள் இயற்கையின் பேராற்றலையே எள்ளி நகையாடச் செய்து விட்டன. கடந்த அக்டோபர் மாத இறுதியில் 26, 27 தேதிகளில் பெய்த பெரு மழையில் தலைநகர் சென்னை தத்தளித்தது. வடசென்னையின் தாழ்வான பல பகுதிகள் நீரில் மிதந்தன. குறிப்பாக வியாசர்பாடியை உள்ளடிக்கிய பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து இயல்பு வாழ்க்கை திரும்ப ஒரு வாரகாலம் ஆனது. உழைக்கும் மக்களின் ஒண்டுக்குடித்தன வாழ்க்கை, அற்ப-சொற்ப உடைமைகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இழந்த மக்கள் ஏங்கி நின்றனர். குமுறிய மக்கள் வீதிக்கு வந்தனர். சாலை மறியல், உண்ணாவிரதம் என நிவாரணம் வேண்டி ஆங்காங்கே போராட்டங்கள் நிகழ்ந்தன. அரசு எந்திரம் ஆலோசித்தது. அவசர கதியில் நிவாரண நடவடிக்கைகளில் இறங்கியது. அதிகார தலைக்கணம் எச்சில் காவுகளை நிவாரணம் என்ற பெயரில் வீதியில் வீசியெறிந்து தலைப்பட்டது. இதை இப்படியில்லாமல் வேறு எப்படியும் விமர்சனம் செய்ய இயலாது.

சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் அதிகாலை நான்கு மணியளவில் வெள்ள நிவாரணம் பெறக் கூடினர் அப்பகுதி மக்கள். கைக்குக் கிடைத்தது வாய்க்குக் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்ற பரிதவிப்பு தொற்றிக் கொள்ள, நுழைவு வாயிலின் கதவை உடைத்துக் கொண்டு, வெள்ளமென நுழைந்த மக்கள் கூட்டம் நெரிசலுக்கு உள்ளாகி, சிட்டம்மாள்(71), சுப்பம்மாள்(54), குஞ்சரம்மாள்(70), ஜெய்லானி (22), கஸ்தூரி(60) என ஆறு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 ரேசன் கடைகளில் டோக்கன் பெற்ற 25 பகுதிகளைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே இடத்தில் ஒரே கவுண்டரில் நிவாரணம் வழங்க தீர்மானித்ததும் திட்டமிட்டதும் நிர்வாக எந்திரத்தின் பொறுப்பற்ற செயல். நீதி விசாரணைக் கமிஷன் அமைக்கக் கோரி தி.மு.க., மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்தனர். நடந்து முடிந்த கொடுமைக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளாத அரசு, வதந்தியால் வந்த வினை என மக்களின் கோபத்தை திசை திருப்பி அலட்சியம் செய்தது.

அடுத்த பெருமழையில் மீண்டும் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. கடுமையாகப் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்றான எம்.ஜி.ஆர். நகர் பகுதி மக்களுக்கு நிவாரணம் தரப்போவதாக அரசு அறிவித்தது. சென்னை எம்.ஜி.ஆர். மார்க்கெட் அருகில் அமைந்திருக்கும் மாநகராட்சி அறிஞர் அண்ணா முன்மாதிரி உயர்நிலைப் பள்ளியில் எம்.ஜி.ஆர். நகரில் வசிக்கும் 8,566 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம் பெற டோக்கனும், நிவாரண உதவியும் வழங்க முடிவெடுத்த 2,989 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பிறகு, மீதி உள்ள 5,577 குடும்பத்தினருக்குக் கடந்த டிசம்பர் 18 அன்று நிவாரணம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. மீண்டும் ஒரு கறுப்பு ஞாயிறு படுகொலைகளுக்கான நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். நகர் சந்தைக்கும் அண்ணா முன்மாதிரி உயர்நிலைப் பள்ளியின் நுழைவு வாயிலைக் கொண்ட சுற்றுச் சுவருக்கும் இடைப்பட்ட சுமார் 8அடி அகலமுள்ள குறுகிய பாதையில் அந்தக் கறுப்பு ஞாயிறின் அதிகாலை மூன்று மணிக்கு வெள்ள நிவாரணம் பெற, முன்வரிசையில் இடம் பிடிக்க, மக்கள் கூடத் தொடங்கினர். பயங்கரமான படிப்பினை ஒன்று நிகழ்ந்திருந்தும் கூட, அண்ணா, எம்.ஜி.ஆர். வழி வந்ததாகச் சொல்லிக் கொள்ளும் ஜெயலலிதாவின் திராவிட இயக்க அரசுக்கு மக்களின் நலன் குறித்த அக்கரை மேலோங்கவில்லை. பத்துகளில், நூறுகளில் கூடத் தொடங்கிய மக்களைக் கட்டுப்படுத்தி ஒழுங்கு செய்ய வேண்டிய காவல்துறை இரத்த சாட்சியங்களுக்கு நான்கு கடைநிலை காவலர்களை மட்டுமே வேடிக்கை பார்க்க நிறுத்தியிருந்தது. ஒழுங்கமைக்கப் பட்ட மக்கள்திரள், போராட்டங் களுக்கு வீதிக்கு வரும் வேளையில், உட்புகுந்து, மிருகவெறி கொண்டு தாக்கி சிதறடிக்கும் காவல்துறைக்கு ஒழுங்கு என்பதன் பொருள் வேறானதாகத் தான் இருக்க முடியும்.

இறுதியில் அது நடந்தே முடிந்தது. ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் கூட்டம் முண்டியடித்து, பள்ளிக் கூட நுழைவு வாயிலின் கதவுகள் திறக்கப்பட்டோ அல்லது உடைக்கப்பட்டோ உள் நுழைந்த மக்கள் கூட்டம் ஒருவர் மீது ஒருவர் தடுக்கி விழ, மூச்சுத் திணறி படுகொலையானவர்களின் எண்ணிக்கை விடியற்காலையில் 42 ஆக இருந்தது. வழக்கம் போல இறந்து போனவர்களுக்கு மன்னிக்கவும் கொல்லப்பட்டோர்களுக்குக் கருணைத் தொகையாக அம்மாவின் பொற்கரங்கள் ஒரு இலட்சம் ரூபாயும் அழுது அரற்றியவர்களுக்கு ஆறத் தழுவலும் செய்து சரி செய்ய முயற்சித்தன. எம்.ஜி.ஆர். நகரில் அன்று இரவு முழுவதும் வீதி தோறும் பிணங்களைச் சுற்றிக் குழுமிய உறவுகளின் அழுகுரலும், அசம்பாவிதம் எதுவும் நிகழா வண்ணம் அவ்வப்போது காக்கிகளின் அணிவகுப்பும் ஒருசேர கோபமூட்டின. ஆனால் பொதுச்சமூகம் பிரக்ஞையற்று அமைதி காத்தது.

2000 ரூபாய் ரொக்கப் பணம், 10 கிலோ அரிசி, 1லிட்டர் மன்ணெண்ணெய், வேட்டி, சேலை என ஒரு சாமான்ய குடும்பத்தின் அரைமாத வாழ்க்கைக்கு போதுமான இந்த நிவாரணத்திற்காக அலை மோதிய மக்கள் கூட்டத்தைக் கொஞ்சம் கருணையோடும் அதிகம் கேலிகளோடும் நையாண்டியாய் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறது, எவ்விதத்திலும் பாதிக்கப்படாத மேட்டுக்குடி வர்க்கம். ‘இலவசம்’ என்ற சொல்லின் சுயமரியாதையற்ற பொருளைக் கடந்து நாற்பது ஆண்டுகளாக, தமிழக மக்களின் பண்பாட்டு விழுமியங்களுக்குள் திணித்து, மந்தைக் கலாச்சாரத்தை உருவாக்கிய பெருமிதத்தோடும், திமிரோடும் கொக்கரிக்கிறது சுயமரியாதை இயக்க வழிவந்த திராவிட இயக்கப் பரிணாம வளர்ச்சி. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், அது வாங்கினால் இது இலவசம், 50 சதவீத தள்ளுபடி என்ற பொய்யான பிரச்சாரங்களோடு மூர்க்கத்தனமாக ஒரு வணிக சமூகம் இங்கு ‘உழைப்பால்’ முன்னேறிக் கொண்டிருக்கிறது. மந்தைக் கூட்டமென மக்களை நசுக்கிப் பிழிந்து, ஏய்த்து வளரும் வணிகக் கூடாரத்தின் உயர்ந்த பட்ச வடிவமே இந்த சுரண்டுகிற ஊழல் அரசு. திராவிட இயக்கப் பணிகளின் பயனாளிகளாக கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என அவரவர் காலத்திற்கான கடமைகள் செவ்வனே செய்யப்பட்டு வருவதை மக்கள் அறிந்து கொள்ளத்தான் அவகாசமில்லை.
தனியார் மயம், தாரளமயம், உலகமயமாக்கல் சூழலில் எலிக்கறி தின்ன வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் காத்திருக்கிறது. வேலையின்மை, வறுமை, அன்றாட வாழ்வின் போதாமை நெட்டித்தள்ள நிவாரணங்களுக்கும் இலவசங்களுக்கும் முண்டியடிக்கும் மக்கள் கூட்டத்தை மந்தையென உருவாக்கி வரும் ஒரு அதிகார வர்க்கம், கடந்த காலங்களில் நிகழ்ந்து போன அத்தனை துயரங்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இருக்கிறது. பொறுப்பை உணராத அரசுகளுக்கு, அதிகார வர்க்கத்திற்கு, ஆணவத் தலைகளுக்குப் பொறுப்பை காவல்துறை போதிய பாதுகாப்புத் தரவில்லை என குற்றம் சாட்டுகிறது நடுத்தர வர்க்கம். ஒரு குடிமைச் சமூகத்தின் அடையாளம் போலீஸ் ராஜ்ஜியமல்ல.

உணர்த்த வேண்டிய கடமை மக்களைச் சார்ந்தது என சில மேதாவிகள் மக்களிடம் பிரச்சாரம் செய்யக்கூடும். இந்தப் பிரச்சார தறுதலைகளுக்குப் பின் செல்லும் அபாயமுள்ள மக்கள் கூட்டத்திற்கு தன் பொறுப்பை, தார்மீக கடமையை, சுயமரியாதை தலைதூக்கும் போர்க்குணத்தை உணர்த்த வேண்டிய அவசியமான கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம். நாமென்பது நம் ஒவ்வொருவரும் தான்.

நடந்து முடிந்த கொடுமைகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி தீர்மானம் இயற்றியது. வியாசர்பாடி சம்பவத்திற்கு சொல்லப்பட்ட உப்புப்பெறாத ‘வதந்தி’ என்ற அதே காரணத்தையே பிரச்சாரம் செய்கிற அ.தி.மு.க. அரசு, தி.மு.க. பகுதி செயலாளரைக் கைது செய்து பழி தீர்த்தது. மக்களின் திசை திருப்பியது. எதிர்க் கட்சிகளின் தூசு தட்டிப் போன விசாரணைக் கமிசன் கோரிக்கையை நிறைவேற்றியது. ஒப்புக்கு ஒருசில அதிகாரிகளை இடம் மாற்றியது. தற்காலிக வேலை நீக்கம் போன்ற குறைந்தபட்ச தண்டனைகள் கூட அரசு எந்திரத்தின் எந்த மட்டத்திற்கும் வழங்கப்படவில்லை. போலீஸ் உடை தரிக்காத முதல் தர போலீஸ் அதிகாரியாக மக்களை காவல்துறை லத்திகளின் கீழ் அடக்கி ஆளும் ஜெயலலிதாவுக்கு காவல்துறையை மக்களை ஒடுக்கும் கருவியாக மட்டுமே பயன்படுத்த முடியும். காவல்துறை போதிய பாதுகாப்புத் தரவில்லை என குற்றம் சாட்டுகிறது நடுத்தர வர்க்கம். ஒரு குடிமைச் சமூகத்தின் அடையாளம் போலீஸ் ராஜ்ஜியமல்ல. இதை மக்களிடம் எடுத்துச் செல்லும் கடமை ஜனநாயக உணர்வுள்ள அறிவுஜீவிகள் முன் நிற்கிறது. தண்டனைக்குப் பிறகாவது சாட்சி சொல்ல வரவேண்டிய நியாயம் உணர்வோம். ஏனெனில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் நீதி சொல்லும் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார்கள்.

புதியகாற்று - ஜனவரி 2006

0 comments: