Wednesday, December 26, 2007

ஜாதி வெறி கொண்டாட்டங்கள்

- கா.இளம்பரிதி
(தலித் முரசு நவம்பர் 2007)

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியரின் படுகொலை, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீதான தாக்குதல், கடந்த அக்டோபர் இறுதி வாரத்திலிருந்து நவம்பர் முதல் வாரம் வரை, தென்மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1200 பேர் மீது வழக்குகள் புனைவு என்பதாக, முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்கி வைத்த வன்முறைகள், ஜாதி/கோஷ்டி மோதல்களாக வழக்கம் போல் கவனிப்பாரின்றி கிடப்பில் போடப்பட்டுவிட்டன। தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் ஒருவர் தவறாமல் ஒட்டுமொத்தமாகக் கலந்து கொண்ட இவ்விழாவின் மூலம், தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன.



செப்டம்பர் மாதத் தொடக்கத்திலிருந்தே தேவர் சாதியினராலும், தமிழக அரசாலும் முத்துராமலிங்கத்தின் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டன। அரசு சார்பில் அக்டோபர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் ‘தேவர் ஜெயந்தி விழா' கொண்டாடப்பட இருப்பதாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘கமுதி தாலுகாவில் விழா நாட்களில் கல்லூரிகள், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும்' என்றும் ‘தலைவர்களின் சிலைகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும்' என்றும் ‘ஒவ்வொரு 30 கி.மீ. தூரத்திற்கும் ஓர் அவசர சிகிச்சை வண்டி நிறுத்தப்படும்' என்றும் "போக்குவரத்து வழித்தடங்களில் ஒவ்வொரு இடத்திலும் வட்டாட்சியர், காவல் துறை ஆய்வாளர், துணை மாஜிஸ்ட்ரேட் ஆகிய அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்' என்றும் தெரிவித்திருந்தார். முத்துராமலிங்கம் நூற்றாண்டு விழா மூன்று நாட்களும், மதுரையில் மருதுபாண்டியர் சிலை திறப்பு விழா ஒரு நாளும் மேலும் இவ்விழாப் பணிகளுக்காக அரசு ஊழியர்கள் பல்வேறு துறைகளில் பொறுப்பேற்றல், விடுபடல் என ஏறத்தாழ ஒரு வார காலத்திற்கு தென் தமிழகத்தின் 8 மாவட்டங்களின் அரசு எந்திரம், அன்றாட மக்களின் பணிகளை விடுத்து இவ்விழாவில் முடக்கப்பட்டன. அனைத்து உழைக்கும் மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்பட்டன.



முத்துராமலிங்கம் நூற்றாண்டுக்கு 2 கோடி ஒதுக்கியது யார்? 3 கோடி ஒதுக்கியது யார்? என கருணாநிதியும் ஜெயலலிதாவும் பட்டிமன்றம் நடத்தினர்। ஆனால், அரசுத் துறைகளின் மேற்சொன்ன ஒருவார கால ‘திட்டத்தில் வராத' (மக்கள் நலத் திட்டங்களில்) செலவினங்கள் எத்தனை கோடி எனக் கேட்கத்தான் இங்கு எவருமில்லை. அரசு செலவில் நூற்றாண்டு விழாவையொட்டி முத்துராமலிங்கத்தின் நினைவு இல்லம் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு, ஏறத்தாழ 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாக தமிழக முதல்வரே பசும்பொன் விழாவில் கூறியிருந்தார்.

இவ்விழாவின் பக்க விளைவாக, பசும்பொன் கிராமத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த 75 தலித் குடும்பங்கள் அவ்வூரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்। அவர்களுக்கு மாற்றிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரி வித்தாலும், தலித் மக்களின் வாழ்க்கை ஆதாரம் ‘நிரந்தரமற்றது' என்பதையே இது உறுதிப்படுத்துகிறது. மேலும், முத்துராமலிங்கம் இறந்து போன மதுரை பசுமலையில் அவரது நினைவு மண்டபத்தைக் கட்ட அரசு முடிவு செய்து, அதற்கும் நிதி ஒதுக்கியுள்ளது.

இந்நினைவு மண்டபம் கட்டத் தேவைப்படும் இடத்திற்காகப் பசுமலையில் நீண்டகாலமாக நடைபெற்று வரும் ஒரு மேல்நிலைப் பள்ளியின் இடத்தையும் அரசு கேட்டுள்ளது। இதை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் அப்பள்ளியின் நிர்வாகம் தொடுத்த வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு அரசிற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளார். ‘முத்துராமலிங்கத்தை ஒரு தேசியத் தலைவராகவும் தலித் மக்களை அழைத்துக் கொண்டு அவர் ஆலயப் பிரவேசம் செய்ததாகவும், அப்படிப்பட்டவருக்கு இடம் தர பள்ளி நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும்' எனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதியரசர்.

ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம், ஒரு பள்ளிக்கூடம் உருவாக்கத் தேவையான இடம்-நிலம் அமைவிடம், கட்டுமான உருவாக்கம், அப்பள்ளிக் கூடத்தை மய்யப்படுத்தி அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் என பாதிப்பிற்கு உள்ளாகும் பல்வேறு அம்சங்களைக் கணக்கில் எடுக்கத் தவறியுள்ளது உயர் நீதிமன்றம்। பொதுமக்களின் அடிப்படை உரிமைகள், வாழ்க்கை ஆதாரம் என்ற அக்கறை, ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் அக்கறை வேண்டாமா?

பசும்பொன் முத்துராமலிங்கத்திற்கு நூற்றாண்டு விழா எடுப்பதைப் போலவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகயிருந்த ஜீவா, ஏகாதிபத்திய எதிர்ப்பு மாவீரன் பகத்சிங் ஆகியோரின் நூற்றாண்டு விழாக்களும் இவ்வாண்டில் கொண்டாடப்படுகின்றன। ஆனால், இவ்விழாக்கள் ஒரு நாள் மட்டுமே அரசால் நடத்தப்பட்டன. அதிலும் சென்னை கலைவாணர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட பகத்சிங் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் பங்கேற்பதாக இருந்தும், அவ்விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. மிக வலிமையான அரசியல் கட்சியாகவும் அக்கட்சியின் தலைவராகவும் இருக்கும் தமிழக முதல்வர் கலந்து கொள்வதாக இருந்தும், சுமார் நூறு பேர்கள் அளவிலே வந்திருந்ததால்தான்-அவ்விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. பகத்சிங்கை வழிபாட்டு உருவாக மட்டுமே உயர்த்திப் பிடித்து, போர்க்குணத்துடன் அரசியல் அரங்குகளுக்கு வரும் இளைஞர்களை தமது நாடாளுமன்றப் பன்றித் தொழுவத்தில் அணியமாக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்கூட, இவ்விழாவிற்கு தமது இளைஞர் பட்டாளத்தை அனுப்பி வைக்கவில்லை!

ஜீவா, பகத்சிங் ஆகியோருக்கு இருக்கும் ‘பொது அடையாளம்' அடிப்படையில் முத்துராமலிங்கத்திற்கு இல்லை। அவர் ‘தேசியத் தலைவர்' என்றும் "அனைத்து சமூகங்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தவர்' என்றும் ‘சுதந்திரப் போராட்டத் தியாகி' என்றும் ‘தலித் மக்களை அழைத்துக் கொண்டு ஆலயப் பிரவேசம் செய்தவர்; தனது நிலங்களை தலித் மக்களுக்குப் பிரித்து வழங்கியவர்' என்றும் பல்வேறு அடையாளங்களை அவருக்கு ஆதரவானவர்கள் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றனர்.

ஆனால், சுதந்திரப் போராட்டத்தில் ஒரு குடிமகனாகப் பங்கெடுத்தவர் என்பதைத் தவிர, பிற அடையாளங்கள் இட்டுக்கட்டப்பட்டவை। சுதந்திரப் போராட்டத்தில் தனது முழு சொத்தையும் இழந்து நீண்ட காலம் சிறையில் வாடி தன் உடல், பொருள், காலம் அனைத்தையும் அர்ப்பணித்து, காலனி ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடி, கடும் இன்னல்களை சந்தித்து மறைந்தவர் வ.உ. சிதம்பரனார் அவர்கள். அவருக்கு ‘தேசியத் தலைவர்' அடையாளம் வழங்கப்படவில்லை. ஆனால் ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட்டு- சொந்த சாதி மக்களைத் தன் சுயநல அரசியலுக்குப் பயன்படுத்தி, சாதி வெறியூட்டி, தமிழகத்தில் ‘சாதிக் கலவரம்' என்ற தொடர் மோதல்கள் நிகழக் காரணமான ஒருவருக்கு (முத்துராமலிங்கத்திற்கு) இப்பட்டம் சூட்டப்படுகிறது. இதைத் தேவர் சாதியினர் உருவாக்கி மகிழலாம். ஆனால் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய அரசு அதை அங்கீகரிக்கலாமா?

முத்துராமலிங்கம் தலித் மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றதாகவோ, அதற்கு உதவியதாகவோ வரலாற்று ஆவணங்கள் எதுவுமில்லை। நில உச்சவரம்புச் சட்டத்திற்குப் பயந்து தனது சொத்துகளை அவர் பதினாறு பங்காகப் பிரித்து, தன் விசுவாசிகளின் பெயரில் பினாமி சொத்துகளாக மாற்றினார். இதில் பதினைந்து பினாமிகள் அவரது சொந்த சாதியினர். ஒருவர் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். தனது ஏவலுக்கு சேவகம் புரிந்த சோலைக் குடும்பன் போன்ற ஒரு விசுவாசியை பினாமியாக்கி-தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதை அவர்தம் துதிபாடிகள், தலித் மக்களுக்கு அவர் தன் நிலங்களைப் பிரித்துக் கொடுத்ததாகக் காலந்தோறும் கதையளந்து வருகின்றனர். சொத்துத் தகராறுக்காகத் தனது நெருங்கிய உறவினரைத் தாக்கியவர் என்பதும் குடும்ப வழி சொத்துகளுக்காக தன் தந்தையின் மீதே வழக்குத் தொடுத்தவர் என்பதும், முத்துராமலிங்கம் என்னும் பிற்போக்கு நிலவுடைமையாளரின் மறைக்கப்படும் பக்கங்கள்.

1957இல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதாகக் கருதிக் கொண்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட முத்துராமலிங்கத்தைத் தான் – தலித் மக்களின் நலனில் அக்கறை கொண்டிருந்தவர் என்றும், சாதி வேற்றுமைகளைச் சாடியவர் என்றும் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உட்படப் பலரும் வாய்கூசாமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்। காமராஜரை பொதுமேடைகளில் ‘சாணான்' என இழிவுபடுத்திப் பேசியவர் என்பதும், சீனிவாசய்யங்கார், ராஜகோபாலாச்சாரி போன்ற பார்ப்பனர்களையே தனது வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டிருந்தவர் என்பதும் அவரது இந்துத்துவ-சாதிய சார்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.

‘தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்' என்று முழங்கிய முத்துராமலிங்கம், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் ஒருசேர வழிபடும் தலைவராக இருக்கும் முரண் பகை முரண் அல்ல। சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் போகிற போக்கில் "நாலு நல்ல வார்த்தைகள்' பேசிவிட்டால் போதும், எவரொருவரையும் துதி பாடி கொண்டாடக் காத்திருக்கிறது பிழைப்புவாத அரசியல் நடத்தும் சாதி இந்துக்களின் கூட்டம். காங்கிரஸ் கட்சியில் தான் விரும்பிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதால் தான் முத்துராமலிங்கம் நேதாஜி அணியில் இணைந்து கொண்டாரே ஒழிய, சுபாஷின் அரசியல் கோட்பாடுகளைப் பின்பற்றியவராக அல்ல.

மேற்கு வங்கத்தில் பார்வர்டு பிளாக் கட்சி, இடதுசாரி கூட்டணியிலுள்ள ஒரு சோஷலிஸ்டு கட்சியாம் (!) தமிழகத்திலோ ஒரு சாதிச் சங்கம் என்ற அளவிற்கு அக்கட்சியைத் தரம் தாழ்த்தியதும், அதிலும் சாதி வெறியர்கள் ‘குரங்குகள் அப்பம் பிட்ட கதை' யாக அதை எட்டுக் குழுக்களாகப் பிரித்து, கட்டைப் பஞ்சாயத்து கும்பல்களாகப் பங்கிட்டுக் கொள்ளும் வகையில் உருவாக்கிய ‘பெருமை'யும் முத்துராமலிங்கத்தையே சாரும்। தற்பொழுது, கழிசடை சினிமாக்காரன் கார்த்திக் ஒரு கும்பலுக்குத் தலைவனாம்!

பிற்போக்குத்தனமான நிலவுடைமை அதிகாரங்களுக்கு முட்டுக்கட்டை போடுபவர்களாகவும், பொது சமூகத்தின் நலன் கருதி மறவர் மற்றும் பிரன்மலைக் கள்ளர் ஆகிய 16 சாதியினர் மீது ‘கை ரேகைச் சட்டத்தைப் பிரயோகிப்பவர்களாகவும் ஆங்கிலேய ஆட்சியினர் இருந்த காரணத்தால்தான் முத்துராமலிங்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டிய அவசியத்திற்குள்ளானார்। தனது காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலுக்கு, நேதாஜியின் பெயரைப் பயன்படுத்திக் கொண்ட முத்துராமலிங்கத்திற்கு வீர சாவர்க்கர், கோல்வால்கர், திலகர், நாதுராம் கோட்சே போன்ற இந்துத்துவ பாசிஸ்டுகள்தான் ஆதர்ச தலைவர்கள். இதற்கு நேர்மாறாக, காங்கிரசின் மிதவாத அரசியலை உள்வாங்கிக் கொண்டாலும், காமராஜரின் அடித்தட்டு வர்க்க உணர்வோட்டத்தைப் புரிந்து கொண்டவராக, தீண்டாமை சாதி ஒழிப்புப் போராட்ட வரலாற்றில் சமரசமற்ற போர்க்குணத்துடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தலைமை தாங்கியவராக விளங்கியவர் இம்மானுவேல் சேகரன்.

‘முதுகுளத்தூர் கலவரம்' தொடர்பாக கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கூட்டிய முத்தரப்பு சமாதானக் கூட்டத்தில் தனக்கு இணையாக, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இருக்கையில் அமர வைக்கப்பட்டவர் என்ற ஒரே காரணத்திற்காக, தனது அடியாட்களை ஏவி, இம்மானுவேலைக் கொலை செய்தவர் முத்துராமலிங்கம்। இக்கொலை வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு, வழக்கின் முடிவில் விடுதலை செய்யப்பட்டாலும் இம்மானுவேல் கொலைக்குக் காரணமானவர் என்ற வடு, ஒடுக்கப்பட்ட மக்களின் மனங்களில் தீராத வலியாய் தேங்கிப் போயுள்ளது.

தலித் மக்கள் மீதான தீண்டாமை ஒதுக்கலையும் சாதிப் பாகுபாடுகளையும் வெளிப்படுத்துவதில் சாதி இந்துக்களில் எந்தவொரு தனித்த சாதியினரும் குறைவானவர்கள் அல்ல। ஆனால், எண்ணிக்கையில் அதிகமான குறிப்பிட்ட சில சாதியினர் மட்டுமே, தலித் மக்கள் மீதான நிரந்தர வன்முறையாளர்களாகத் தங்களை நிறுவிக் கொண்டுள்ளனர்। தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ‘முக்குலத்தோர்' என்று அழைக்கப்படும் மூன்று சாதியினரும், வடமாவட்டங்களில் வன்னிய சாதிக் குழுமமும், மேற்கு மாவட்டங்களில் பரவலாக கொங்கு வேளாளக் கவுண்டர்களும், பரவலாக நாயுடு சாதியினரும் தான் பெரும்பான்மையான இடங்களில் வன்முறையை கட்டவிழ்த்து விடுகின்றனர்.

இதற்கான காரணங்கள் ஆய்வுக்குரியவை அல்ல। மேற்குறிப்பிட்ட இச்சாதியினர் பெரும்பாலும் நிலவுடைமையாளர்களாக இருப்பதும், தத்தம் பகுதிகளில் சாதிய அரசியல் அதிகார மய்யங்களில் செல்வாக்கு மிக்கவர்களாகத் தங்களை நிரந்தரப்படுத்திக் கொள்ள எத்தனிப்பதுமே, இத்தகைய வன்முறைகளை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதிலுள்ள அடிப்படை நோக்கம். தனக்குக் கீழேயுள்ள பலவீனமான பிரிவினரை ஒடுக்கி, பொது சமூக வெளியில் அச்சத்தையும் பிற சமூகத்தினருக்கு எச்சரிக்கையையும் ஊட்டுவதன் மூலம் தங்கள் ஆதிக்கம் வலுப்படும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

தலித் மக்கள் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி, மய்ய நீரோட்ட அரசியலில் தமக்கென வலுவான இடத்தை நிறுவிக் கொண்டவர்கள் வன்னியர்கள்। ராமசாமி படையாச்சி முதல் மருத்துவர் ராமதாஸ் வரை, இதற்கான உந்துவிசையாகப் பயன்பட்டவர் முத்துராமலிங்கத் (தேவர்) என்றால், அது மிகையல்ல. தென்மாவட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தொடர் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு, அதன் வழியே மய்ய நீரோட்ட அரசியலில் மற்றெந்த சாதியினரை விடவும் தங்களை உச்சபட்ச அதிகாரத்தில் இருத்திக் கொண்டிருப்பவர்கள், முக்குலத்தோர் எனப்படும் மூன்று சாதிக் கூட்டணியினர்தான். தென் மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியில் கூட முக்கியப் பொறுப்புகளில் இவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். வலுவான சாதிக் கூட்டணி உருவாகியுள்ளது. இதை மூடி மறைக்க, அவ்வப்போது தமிழ்ப் பாதுகாப்பு இயக்க முகமூடிகளை அணிந்து கொள்ளும் ஆதிக்க சாதிக் கூட்டணிக்கு, தொல் தமிழர்களே சாமரம் வீசிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்ல?

இத்தகைய பேராபத்தான ஆதிக்க சாதி அரசியல் கூட்டணி உருவாகியுள்ள சூழலில் தான், எச்சரிக்கை செய்யும் முகமாக, முத்துராமலிங்கம் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு நடத்த எதிர்ப்பு தெரிவித்து – ‘ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி'யின் மாநில அமைப்பாளர் அ। சிம்சன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு (w.p.No. 33699/2007) ஒன்றை கடந்த அக்டோபர் 23 அன்று தொடுத்தார். தமிழ் நாடு அரசு, ஒரு குறிப்பிட்ட சாதித் தலைவருக்கு அரசு சார்பில் விழா எடுப்பது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் ஆகிய கூறுகளுக்கு எதிரானது என்றும், விதி 17க்கு எதிரானது என்றும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளாகக் கூறப்பட்டுள்ள விதி 51 A(c&e)க்கு எதிரானது என்றும், எனவே அந்த விழாவை இல்லா நிலையது மற்றும் சட்டப் புறம்பானது (Null and void and illegal) என அறிவிக்கக் கோரியும், எதிர்காலத்தில் எந்த தனிப்பட்ட சாதியத் தலைவருக்கும் மக்கள் நல அரசு விழாக்கள் நடத்தக் கூடாது என்றும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த அன்று, தலைமை நீதிபதி வழக்கை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்। தமிழக முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த எம். பக்தவச்சலம் 26.10.1957 அன்று தமிழக சட்டப் பேரவையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தின் மீது குற்றம் சாட்டி தாக்கல் செய்திருந்த அறிக்கையின் சில பகுதிகளை வாதியின் வழக்குரைஞர் படித்துக் காட்டிய பிறகே, தலைமை நீதிபதி வழக்கை அனுமதித்தார். அப்போது அவர் அரசு வழக்குரைஞரிடம், "21 ஆம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், தீண்டாமை போன்ற கொடிய குற்றங்களை ஒழிக்க வேண்டும். அரசே இவ்வாறு நடந்து கொள்வதால்தான் இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வருகின்றன'' என்று கூறினார். வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, பதில் தர வேண்டுமென அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.

மேலும், இந்த விழா எடுப்பதால் ஒடுக்கப்பட்ட மக்கள் அரசுக்கு எதிரான மனநிலைக்கு வருவதற்கும், தென் மாவட்டங்களில் சமூகப் பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது। முத்துராமலிங்கம் காலத்திலிருந்தே தென் மாவட்ட தலித் மக்கள் மீது தொடர்ச்சியாக ஆதிக்க சாதியினர் மேற்கொண்டு வரும் வன்முறைகள் (மேலவளவு முருகேசன் படுகொலை உட்பட) பலவும் குறிப்பிட்டுக் காட்டப்பட்டிருந்தன. தற்பொழுது வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், அரசு திட்டமிட்டவாறு அக்டோபர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் விழாவை நடத்தி முடித்துள்ளது. அதன் விளைவாக, வழக்கில் சுட்டிக் காட்டியவாறு இன்றுவரையும் தென்மாவட்டப் பகுதிகளில் சமூகப் பதற்றமும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசின் மீதான நம்பிக்கையின்மையும் உருவாகியுள்ளது. இதற்கான சூழலை அரசே உருவாக்கியதன் தொடக்கப் புள்ளியாக,

முதுகுளத்தூர் வட்டத்திலுள்ள தலித் மக்கள் வாழும் வீரம்பலுக்கும் மறவர் சமூகத்தினர் வாழும் இளஞ்செம்பூருக்கும் இடையே மோதல் கருக்கொண்டது। முதுகுளத்தூருக்குப் படிக்கச் செல்லும் வீரம்பல் பள்ளி மாணவர்கள் சிலரை அடித்தும், மாணவிகளைக் கேலி பேசியும் இளஞ்செம்பூர் மறவர்கள் அச்சுறுத்தி யுள்ளனர். முதுகுளத்தூர் பகுதியில் பதற்றம் தொற்றிக் கொண்ட பிறகும், ‘சேதுநாடு தெய்வீகப் பேரவை' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த முப்பெரும் விழாவிற்கு காவல் துறை அனுமதி வழங்கியது. இவ்விழாவை முன்னின்று ஏற்பாடு செய்தவர்கள், திராவிட விழிப்புணர்ச்சிக் கழகத்தின் தலைவரான பி.டி. குமாரும், ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவரான பூவலிங்கம் என்பவருமே.


இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தவர் தான், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி। 1993 முதல் பரமக்குடியிலிருந்து பொன்னையாபுரம்-கீழத்தூவல்-கீழக்கன்னிச்சேரி வழியாகப் பசும்பொன் கிராமத்திற்குச் செல்லும் இவ்வழியில் வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு பதற்றமான நேரங்களில் தடை நடைமுறையில் இருந்திருக்கிறது. ஆனாலும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரான பூவலிங்கம், பரமக்குடி அய்ந்து முனை சாலையில் கிருஷ்ணசாமிக்கு பி.டி. குமார் மாலை அணிவித்து சந்திக்க வைத்த ("நக்கீரன்' 7.11.2007) பிறகு, அனைவரும் ஏறத்தாழ 20 கார்களில் இவ்வழியிலேயே பயணம் செய்துள்ளனர். கீழத்தூவலுக்கும் கீழக்கன்னிச்சேரிக்கும் இடையில் கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட நாளிலிருந்து, அனைத்து தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் "மர்மக் கும்பல்' ஒன்று தாக்கியதாகவே செய்தி வெளியிட்டு வந்தன.

ஆனால், காவல் துறையோ ஊகத்தின் அடிப்படையிலேயே கீழக்கன்னிச் சேரியைச் சேர்ந்த 59 தலித்துகள் மீது வழக்குப் பதிவு செய்து, இதுவரை 13 நபர்களைக் கைது செய்துள்ளது. கிருஷ்ணசாமி தாக்கப்படும்போது, அடுத்த காரில் இருந்த பி.டி. குமார் தப்பித்து வேறு காரில் ஓடிவிட்டதாக, அவர் தந்த வாக்குமூலத்தையே ஊடகங்கள் எழுதி வருகின்றன. ஆனால், தலித் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட பி.டி. குமார்-பூவலிங்கம் சாதிவெறிக் கும்பல் முன்னேற்பாடாக இச்சதிச் செயலை செய்திருக்கக் கூடாதா என்ற சந்தேகம் காங்கிரஸ் கட்சியிலேயே பலருக்கும் எழுந்துள்ளது.

வீரம்பல், கீழக்கன்னிச்சேரி போன்ற பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, முதுகுளத்தூர் பகுதியின் சமூக சூழலை விசாரணை செய்யும் முகமாக, ‘வன்கொடுமைக்கு எதிரான வழக்கறிஞர் மற்றும் ஆர்வலர் மய்யம்' என்ற அமைப்பின் கீழ் வழக்குரைஞர்கள் இன்குலாப், பகத்சிங், வையவன், முருகன் மற்றும் சமூக ஆர்வலர்கள் அசோக், சுரேஷ், இருளாண்டி உள்ளிட்ட பதினாறு பேர் கொண்ட குழு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது।

அதில், "கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவத்தில் பி।டி. குமார் மற்றும் பூவலிங்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் கொள்வதற்கு, போதுமான நியாயம் உள்ளது. கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாக இரவு 8.30 மணியளவில் பி.டி. குமார் தாக்கப்பட்டதாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வதந்தியால், முதுகுளத்தூரில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தவரும், அப்பகுதி மக்களால் நன்கு அறியப்பட்டவருமான வின்சென்ட் சாம்சனை, 25க்கும் மேற்பட்ட மறவர் சமூகத்தைச் சேர்ந்த அடையாளம் காணப்பட்ட நபர்கள் பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இக்கொலை வெறித்தாக்குதல் பி.டி. குமாரின் திட்டமிட்ட சதியால் நடந்துள்ளது என்பதற்குப் போதிய காரணங்கள் உள்ளன'' என்று கூறியுள்ளனர். கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவத்தை விசாரித்து அரசுக்கு அறிக்கை தர நியமிக்கப்பட்டுள்ள அய்.ஏ.எஸ். அதிகாரியான பரூக்கி, நாம் எழுப்பும் சந்தேகங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

நிறைமாத கர்ப்பிணியான வின்சென்ட்டின் மனைவி கெர்சியாள் சகுந்தலா, கொலையில் தொடர்புடையவர்களின் பெயர்களை நேரடியாகவே குற்றம் சாட்டியிருந்தும் இவர்களைக் கைது செய்வதில் காவல் துறை, மெத்தனம் காட்டுகிறது। முதுகுளத்தூர் வட்டம் மட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதுமுள்ள தலித் கிராமங்களில் விசாரணை என்ற பெயரிலும் தேடுதல் நடவடிக்கை என்ற பெயரிலும் நள்ளிரவிலும் அத்துமீறி பெண்கள், குழந்தைகள் என அனைவரையும் அச்சுறுத்தி வருகின்றனர். 30.10.2007 அன்று இரவு 8 மணியளவில் நுழைந்து பெண்களை மிரட்டியுள்ளனர். 31.10.07 அதிகாலை 5 மணியளவிலும் கீழக்கன்னிச்சேரி கிராமத்திற்கு விசாரணைக்கு வந்த காவல் துறையினர், தலித் பெண்களிடம் மிகவும் கேவலமாகப் பேசியுள்ளனர். சில வீடுகளையும் அங்கிருந்த உடைமைகளை யும் அடித்து நொறுக்கி, காவல் துறை அராஜகத்திற்கு நிரந்தர சாட்சியமான ‘கொடியங்குள'த்தை நினைவுபடுத்திச் சென்றுள்ளனர். முதுகுளத்தூர், கமுதி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவும் நடைமுறைப்படுத்தப்பட்டு, தலித் மக்கள் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

இன்றுவரை இப்பகுதியில் நிகழ்ந்து வரும் காவல் துறை அத்துமீறல்களையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வியல் நெருக்கடிகளையும் துளியளவும் கண்டு கொள்ளாத தமிழக அரசுக்குத் துணை போவதாகவே, ஊடகங்களின் மவுனத்தைக் கருத முடிகிறது। "ஏற்கனவே தேவர் சிலைக்கு செருப்பு மாலை போட்டவரான ஒரு ஆசிரியரை வெட்டிக் கொன்றனர்'' என ‘நக்கீரன்' 7.11.07 இதழில் அதன் இணையாசிரியரே எழுதுகிறார். வின்சென்ட் வெட்டிக் கொல்லப்பட்டதற்கான தேவர் சாதி மன உணர்வை நியாயப்படுத்தும் விதமாகவே, போகிற போக்கில் எவ்வித ஆதாரங்களுமின்றி அழுத்தம் திருத்தமாக ‘நக்கீரன்' காமராஜ் எழுதிச் செல்கிறார். ஆனால், ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியராகவும், முதுகுளத்தூரில் வசித்து வந்த மறவர் சாதியினரோடு நட்புறவோடும் பழகி வந்தவரான வின்சென்ட் மீது இப்படியொரு குற்றச்சாட்டோ, அது குறித்த வழக்குகளோ இல்லை. "நக்கீரன்' 10.11.07 இதழில் வின்சென்ட் மனைவியும் இதை உறுதி செய்திருக்கிறார். ‘நக்கீரன்' வருத்தம் தெரிவிப்பதே அதன் பத்திரிகை தர்மமாக இருக்கும்.

கலவர ஈரம் காயக்கூடாது என ஆளும் வர்க்கம் கருதுகிறதா என சந்தேகிக்கும் வகையில், பசும்பொன் கிராமத்தில் பேசும் போது, ‘மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் சூட்ட ஆவன செய்வேன்' என்றும், மதுரையில் மருதுபாண்டியர் சிலை திறப்பு விழாவில் ‘முக்குலத்தோர் ஒரு மனதாக விரும்பினால் "தேவரினம்' என ஒரே பெயரில் அழைக்கப்பட அரசு ஆணை வெளியிடப்படும்' என்று இரு முக்கிய அறிவிப்புகளைச் செய்திருக்கிறார் தமிழக முதல்வர்। தளபதி சுந்தரலிங்கம் பெயரை போக்குவரத்துக் கழகம் ஒன்றிற்கு சூட்டிய காரணத்தினால் அதை ஏற்றுக் கொள்ள முன்வராத ஆதிக்கச் சாதியினர் வன்முறையில் இறங்கியதன் விளைவாக மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் சூட்டப்பட்டிருந்த (டாக்டர் அம்பேத்கர் பெயர் உட்பட) அனைத்துத் தலைவர்களின் பெயர்களும் அரசால் நீக்கப்பட்டன.

இயல்பாகவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இருக்கும் பெருந்தன்மை, பிற சமூகத்தினருக்கு இருப்பதில்லை என்பதையே சுந்தரலிங்கம் பெயர் நீக்க நிகழ்வுகள் உணர்த்தின। ஆனால், காலப்போக்கில் மக்களுக்கு நேரும் மறதியை வசதியாகப் பயன்படுத்திக் கொண்டு, மீண்டும் இதே வகையான சமூகச் சூழலை ஆளும் அரசே ஏற்படுத்துவது என்ன நியாயம்? (30 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தந்தை பெரியாருக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைக்க இவர்கள் முயலவில்லை என்பது வெட்கக்கேடு.) மேலும், நாடாளுமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு இணையாக முத்துராமலிங்கம் உருவச்சிலை நிறுவவும், அவருக்கு ‘பாரதரத்னா' விருது தர அரசியல் ரீதியாக வலு சேர்க்கவும் அக்குறிப்பிட்ட சாதியினர் முயன்று வருவதையும் நாம் அறிகிறோம்.

இவற்றிற்கு இணையாக, மதுரையில் அவருக்கு நூறு அடி உயர சிலை நிறுவவும், ‘இரண்டாம் படை வீடு' என்ற பெயரில் கோயில் கட்டி ஏற்கனவே நிலவிக் கொண்டிருக்கும் வழிபாட்டு உணர்வை ஆதிக்க சாதி வெறியூட்டி வளர்க்கவும் ஜெயலலிதா-சசிகலா-சேதுராமன் கூட்டணியினர் அடிக்கல் நாட்டியுள்ளனர்। இந்நேரத்தில் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுக்கு சிலை நிறுவ வேண்டுமென, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஜான்பாண்டியன் தலைமையில் மறியல் நடந்தபோது, காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு நான்கு தலித் உயிர்கள் பலியான சம்பவம் நம் நினைவிற்கு வரவேண்டும். பெயர் அடையாளமோ, சிலை மரியாதையோ, துளியளவு சமூக அங்கீகாரமோ ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்து விடக் கூடாது என்பதில் ஆதிக்கச் சாதியினரோடு, ஆட்சி அதிகாரத்திற்கு வரும் அனைத்து அரசியல் சக்திகளும் ஒத்த கருத்தில் இருக்கின்றனர்.

ஆனால் ‘தேவர்' பெயர் சூட்டலும், மணி மண்டபம் கட்டும் வேலைகளும், பொதுப் பெயர் சூட்டி குறிப்பிட்ட சாதியினரை வலிமைப் படுத்துதலும் தி।மு.க. அரசால் முன்மொழியப்படும் இச்சூழலில்தான், தலித் மக்கள் ஆங்காங்கே தன்னியல்பாக அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன், தளபதி சுந்தரலிங்கம் சிலைகளை நிறுவ முயல்வதும் அவற்றை அப்புறப்படுத்த காவல் துறை ஓடிக் கொண்டிருப்பதும் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போராட்டங்கள் ஒரு வகையில் ஆதிக்க சாதியினருக்கு எதிரான பண்பை தன்னியல்பில் கொண்டுள்ள தலித் மக்களின் சுயமரியாதை உணர்வையும், அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக இயக்கம் உருவாக்கி தன் இன்னுயிரைத் தியாகம் செய்த இம்மானுவேல் சேகரனின் வீரமரபையும் உயர்த்திப் பிடிக்கும் சமரசமற்ற கலகச் செயல்பாடுகளாகவே இருக்கின்றன. இவ்வகையான கலகங்களின் வாயிலாகத்தான் சாதி ஒழிப்பை மய்யப்படுத்தும் சமூக விடுதலைப் போராட்டங்கள் உயிர்ப்புடன் இருப்பதை நாம் உணர முடிகிறது.

பார்ப்பன எதிர்ப்பு, திராவிட இயக்க அரசியல், பிற்படுத்தப்பட்டவர்கள் நலன் என்ற அடிப்படையில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு, தமிழகத்தில் கடந்த அறுபது ஆண்டு காலமாக அரசியல் நடந்து வருகிறது। 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தமது சுயமரியாதைக்கும் அரசியல் உரிமைகளுக்கும் போராடி வரும் ஒடுக்கப்பட்ட மக்கள் இன்றைக்கும் தனிச் சேரிக் குடிகளாகவும், மனித மலத்தை மனிதனே சுமக்கும் கொடுமைகளை ‘தொழில்' என்ற பெயரில் சுமப்பவர்களாகவும், சாதி இந்துக்கள் என அறியப்படுகிற பிற்படுத்தப்பட்ட அனைத்து சாதியினராலும் ஒடுக்கப்படுகிறவர்களாகவும் ஒவ்வொரு நாளும் தீராத துன்பத்தில் உழன்று வருகின்றனர். தென்மாவட்டங்களில் முத்துராமலிங்கத்திற்குப் பிறகு இத்தகைய ஒடுக்குமுறைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டு, அமைப்பாக்கப்பட்ட வன்முறைகளாக நாள்தோறும் ஏதேனும் ஓர் ஊரில் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. இத்தகைய வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த, கடுமையாக ஒடுக்க, சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூட இதுவரையில் எந்த அரசுகளும் முன்வரவில்லை.

நடுநிலையாளர்கள், ஜனநாயகவாதிகள், முற்போக்காளர்கள் என சொல்லிக் கொள்பவர்கள்கூட, சாதி தீண்டாமை எதிர்ப்பில் நேர்மையாக நடந்து கொள்வதில்லை। அனைவரும் போலிகள் எனத் தோலுரிந்து போன நிலையில் தான் ஒடுக்கப்பட்ட மக்களே நேரடியாகக் களமிறங்கி, தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், சமூகக் கொடுமை களுக்கெதிராக அமைப்பாகவும் தொடர்ந்து முயன்று வருகின்றனர். 1990களில் அம்பேத்கர் நூற்றாண்டைத் தழுவி தலித் மக்களிடம் கிளர்ந்த எழுச்சி, ஒரு தேக்க நிலையை- பின்னடைவை- சரிவை சந்தித்து விட்டதாக அறிவுஜீவிகள் விவாதித்து வரும் நிலையில், புதிய அணுகுமுறையுடனும், மாற்று செயல்திட்டங்களுடனும் தலித் மக்கள் எழுச்சி பெற்றுப் போராட வேண்டிய அவசியத்தையும் நெருக்கடியை யும் ‘தேவர் நூற்றாண்டு' வன்முறைகள் ஏற்படுத்தியுள்ளன.

இச்சூழலில், ‘சூத்திரன் பட்டம்' நீங்கப் போராடும் பிற்படுத்தப் பட்ட சாதியினர், ‘பஞ்சமன்' என ஆயிரம் ஆண்டு காலமாக ஒதுக்கப்பட்டு வரும் பெரும் சமூகக் குழுமத்தின் வலிகளுக்கும் காயங்களுக்கும் காரணமானவர்களாக இருந்து வருவதைத்தான் ‘தேவர் ஜெயந்தி' போன்ற சாதிவெறிக் கொண்டாட்டங்கள் உணர்த்துகின்றன।

3 comments:

stalin said...

அருமையான கட்டுரை.......வாழ்த்துக்கள் இளம்பரிதி... உங்களை இங்கு கண்டதில் மகிழ்ச்சி.....

உங்களின் பழைய பதிப்புகளை நான் புதியகாற்று, தலித் முரசு இதழ்களில் கண்டதுண்டு.

நன்றி.
ஸ்டாலின் பிரபு

Anonymous said...

intha porombokku muthramalinga pathi nachnu nalu vari....

ivan yarukku peranthan yarukkum theriyadha porombokku thevidiya makan ivan oru 9 . ivanikku yen arasu vila eduikkranga? ithla c.m vera kalanthukiranga kodumai nadu entha nilamailla irukku parungada c.t act olichan solrangale yedukku vellalkaran yella jathi irukkum podhu kallapayalkal marapayalkal ikku mattum intha kutra parambarai sattam yen kondu vantharkal innu konjam sindhikanum evanuga ullaithu sapiduvathillai thirudi sapittavarkal oru inamae thiruttu tholilil edupattathai kandu

idai adakka(odukka) ore vali ivarkal inathai(jathi) kutra parambarai endru arivithu sattam iyatra pattathu ithu theriyama mukkulathor than intha nattuikku viduthalai vangi kudtha mathiri pesuranuga ...muta pasanga

நாய் சேகர் said...

அருமையான கட்டுரை