இன்றைக்கும் கூட, ஈழத் தமிழ் மக்கள் தாங்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் சாதி, சமய, சடங்குகளைக் கைவிடாத நிலையிலேயே இருப்பதாகப் பல ஆதாரப்பூர்வ செய்திகள் உள்ளன. ஈழ சமூக வாழ்க்கையிலும் சரி, விடுதலைப் போராட்ட அரசியலிலும் சரி, யாழ்ப்பாண வெள்ளாள சாதியினரின் தலைமைத்துவம் – அதிகாரத்துவம் – ஒடுக்குமுறை ஆகியன பற்றி நேர்மையாக உரையாடல் நிகழ்த்தும் எவராலும் இதை மறுதலிக்க முடியாது. ஆனாலும் இந்தியõவைப் போல, தமிழ் நாட்டைப் போல "எங்கட நாட்டில் சாதிப் பிரச்சனை இல்லை' என்பதாகவே இலங்கைத் தமிழர்கள் பலரும் கதைத்து வருகின்றனர்."இலங்கையைப் போலவே, மலாயாவிலும் தமிழர்கள் இன ஒற்றுமையோடுதான் வாழ்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பாகுபாடெல்லாம் எங்கள் நாட்டில் இல்லை' என்பதாகக் கூறும், மலாய இந்திய வம்சாவளியினர் அதாவது, இந்து தமிழர்களுக்கு சிலவற்றை சுட்டிக் காட்ட வேண்டியது நமது கடமையாகிறது.
1920களில் பிழைப்புக்காக பெருமளவில் குடியேறத் தொடங்கிய அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1980களில் மலாயாவில் சாதிச் சங்கங்கள் முளைவிடத் தொடங்கின. தமிழகத்தைப் போலவே, மலாயாவிலும் "மலேசிய முக்குலத்தோர் பேரவை', "மலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கம்', "மலேசிய யாதவர் சங்கம்' என ஆதிக்க சாதி சங்கங்கள் கட்டப்பட்டன. ஆகஸ்ட் 11 மற்றும் 12, 2007 ஆகிய நாட்களில் பினாங்கு நகரில், மலேசிய முக்குலத்தோர் பேரவையின் "பத்தாவது தேசியப் பேராளர் மாநாடு' முன்னாள் இந்திய அமைச்சர் எஸ். திருநாவுக்கரசர் சிறப்பாளராகக் கலந்து கொள்ள நடைபெற்று முடிந்தது. திருநாவுக்கரசர் முக்குலத்தோர் சாதியை சேர்ந்தவர் என்பதால்தான் இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்டார். இது போன்ற ஒரு மாநாட்டில் இதற்கு முன்னர், திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து கலந்து கொண்டிருக்கிறார். 2003 ஆம் ஆண்டில் கெடா மாநில முக்குலத்தோர் சங்கம் "முத்துராமலிங்கத் (தேவர்) தின் 95 ஆம் ஆண்டு ஜெயந்தி சிறப்பு மலர்' வெளியிட்டு, சாதிப் பெருமைகளைக் கொண்டாடியது.
"மலேசிய வன்னியர் நலனபிவிருத்தி சங்கத்தின் புதிய செயலவை தேர்வு' ("மக்கள் ஓசை' 27.4.2007), "சிலாங்கூர் முத்துராஜா வழியினர் சேவை அலுவலகம்' திறக்கப்பட்டது, "உலுதிராமில் மருதுபாண்டியர்கள் குருபூஜை' ("மலேசிய நண்பன்' 27.10.2007), "வன்னியர் கூட்டுறவு கழகத்திற்கு பங்குப் பணம் வழங்குதல்' ("மலேசிய நண்பன்' 15.8.2007), "மலேசிய சம்புகுல சத்திரியர் சங்கத்தின் இரண்டாம் ஆண்டுக் கூட்டம்' ("தமிழ் நேசன்', 23.9.2006), "உலுதிராம் சிறீகருமாரி அம்மன் ஆலயத்தில் முப்பெரும் விழா' "போற்றிப் பாடடி பெண்ணே! தேவர் காலடி மண்ணே!' ("மலேசிய நண்பன்' 31.10.2007) என செய்தித் தாள்களும் சாதி வளர்க்கத் துணை புரிந்து வருகின்றன.
ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியன உத்தரவாதம் செய்யப்பட்டு விட்டால், அவனுக்கு வாழ்வின் அடுத்த நிலையாக லவுகீகங்கள் தேவைப்படுகின்றன. அவ்வகையில் ஒரு சராசரி தமிழனின் லவுகீக வாழ்வு – கோயில் வழிபாடு, திருவிழா, களியாட்டம், தமிழ் சினிமா ஆகியவற்றிலேயே லயித்துக் கிடக்கிறது எனச் சொன்னால், எளிமைப்படுத்துவதாக எவரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். நவீன கால தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையும் செயல்பாடுகளும் குறித்து நாம் சற்றே சிந்திக்க முற்பட்டால், இவ்வகையான எளிமைப்படுத்துதலைக் கடந்து சமூகம் எங்கே வளர்ந்திருக்கிறது எனச் சொல்ல முடியுமா? ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக – "இந்து தமிழர்'களாகவும் "சாதித் தமிழர்'களாகவும்தான், உலகம் முழுவதும் பரவியிருக்கிற தமிழர்களின் பெருமை இருக்கிறது. பெருந் தெய்வக் கோயில்களும் அவற்றில் பூசனை செய்ய குருக்கள் என்ற பெயரில் பார்ப்பனர்களும், வீதிதோறும் சிறு தெய்வக் கோயில்களும் அவற்றில் ஆண்டுதோறும் கொண்டாட்டங்களும் இல்லாமல் – இன்றைய உலகியல் தமிழன் எங்கும் இல்லை.
மலாயாவில் நாகரிகப் பெண்கள் அணியும் மேலாடையில் அனுமன் உள்ளிட்ட சில உருவப்படங்களை (வர்த்தக நோக்கிலும் ஆன்மீகம்) அச்சிட்டு துணிக்கடைகளில் விற்பனை செய்து வந்தனர். இந்து மத தெய்வங்கள் இழிவுபடுத்தப்பட்டுவிட்டதாக, பல திசைகளிலிருந்தும் கொதித்து எழுந்து விட்டனர் தமிழர்கள். "சமயத்தை மதிக்காத வியாபாரிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும்' என "பினாங்கு பயனீட்டாளர் சங்க' கல்வி அதிகாரி என்.வி. சுப்பாராவ்
("மக்கள் ஓசை' 12.7.2007) எச்சரிக்கை விடுத்தார். "இந்துக்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளா? அரசாங்கம் தலையிட வேண்டும்' என மகரம் எண்டர்பிரைசஸ் டத்தோ மு. வரதராஜு ("மக்கள் ஓசை' 10.7.2007) வேண்டுகோள் விடுத்தார். "தெய்வத் திருவுருவப் படங்களோடு திருவிளையாடல்கள் வேண்டாம்' என டத்தோ சுப்ரமணியம் கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்குப் பரிந்துரைத்தார்.
மலேசியாவின் சுதந்திரப் பொன் விழா 50ஆவது ஆண்டை முன்னிட்டு, பத்துமலை திருத்தலத்தில் சிறப்பு பூஜைகளும் ("தமிழ்நேசன்' 6.9.07), பத்துமலை வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகமும் ("மக்கள் முரசு' 23.9.07), "சிப்பாய் சுங்கை பீலேக்'அதிசய விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகமும் ("தமிழ் நேசன்' 9.9.06), சிறீ பத்திர காளியம்மன் ஆலய 27ஆவது வருடாபிஷேகத் திருவிழாவும் ("மலேசிய நண்பன்' 6.9.07), கோலாலம்பூர் சிறீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானம் மற்றும் சிறீ நாகேஸ்வரி அம்மன் ஆலய ஏற்பாட்டில் டத்தின் சிறீ இந்திராணி சாமிவேலு தலைமையில் இரண்டாயிரம் பெண்கள் ஆன்மீக பால்குட ஊர்வலமும் ("த ஸ்டார்' 30.7.07), சிறீ சுருதி மகளிர் நலமன்ற தேசியத் தலைவரும் புனித நடை ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான டத்தின் சிறீ இந்திராணி தொடங்கி வைக்க, சுமார் அய்நூறு பேர் கலந்து கொள்ளும் ஆன்மீகப் பயணமும் ("தமிழ் நேசன்' 29.3.07), ஈப்போ குங்குமாங்கி மகா காளியம்மன் ஆலயத்திற்கு சுமார் பன்னிரண்டு லட்சம் வெள்ளி செலவில் கும்பாபிஷேகமும் ("தமிழ் நேசன்' 7.7.06), ஈப்போ பாராட் தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் தேர்தலில் வெற்றிபெற கூச்சால் சிறீ மகா பத்ரகாளியம்மன் ஆலயத்தில் சிறப்புப் பிரார்த்தனையும், இவ்வாலயத்தில் 48 நாட்கள் மண்டலாபிஷேக பூசை பூர்த்தியுடன் 108 சங்காபிஷேகமும் ("தமிழ் குரல்' 19.3.06) என தமிழகத்தைப் போலவே, மலேசிய மாநிலங்களிலும் தமிழர்களின் ஆன்மீகக் கொண் டாட்டங்கள் சளைத்தவையல்ல.
இந்து சமயத்தின் தொங்கு சதைகளாக வளர்ந்து வரும் யோகா – தியான மய்யங்கள், ஆன்மீகப் பேச்சாளர்கள் மலேசியாவிலும் கால் பதிக்கத் தொடங்கியுள்ளனர். "நான் இந்த உலகின் ஒரு பகுதியல்ல. இந்த உலகம் என்னுடைய ஒரு பகுதியாகும்' என்ற உளறல் பேச்சுக்கெல்லாம் ஆன்மீக மடங்கள் உருவாகிவிட்டன. இப்படிப்பட்ட ஒருவருக்கு எதிராக, "இந்து சமயத்தை இழித்துப் பேசுவதா?' என மகா மாரியம்மன் தேவஸ்தானம் கண்டனம் தெரிவிக்
கிறது. இவருக்கு எதிராக 123 பேர் போலிசில் புகார் தெரிவித்தனர். "போலிஸ் விசாரணை வரை அனைவரும் பொறுமை காப்பீர்' என இந்து சங்கம் கோரிக்கை (12.3.07 "மக்கள் ஓசை') வைக்கிறது. ஆனால் தாய்த் தமிழ் நாடோ, இம்மூடநம்பிக்கை முரண்பாடுகளையெல்லாம் களைந்து இன்னும் முன்னேறிவிட்டது. இங்கே நடமாடும் கடவுள்கள் பலர், அங்கே இப்போதுதான் முளைவிடத் தொடங்கியுள்ளனர். நட்பு முறையில் இம்முரண்பாடுகளை இந்து மதம் (சங்கம்) தீர்த்து வைக்கும். ஏனெனில், மூடத்தனங்களே இந்து மதத்தின் மூலதனம் என்பது அறிவியல் சான்று.
"ஆலயங்களில் பூஜைகள் மட்டுமன்றி, சமயக் கருத்தரங்கம், பாலர் கல்வி, நன்னெறிச் சொற்பொழிவு ஆகியவற்றை நடத்தி மக்களுக்கு சமயத் தெளிவு ஏற்படுத்தினால், இது போன்றவர்களிடம் மக்கள் ஏமாற மாட்டார்கள். இந்து சமயத்தை சிறுமைப்படுத்துவோர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று சிறீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன், ஆலய மண்டபத்தில் கூட்டப்பட்ட கண்டனக் கூட்டத்தில் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் "இந்து சமயத்தைப் பற்றி ஓர் இந்துவே பழிப்பதை சில இந்துக்கள் கேட்டுக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தது வேதனைக்குரியது' என்றார் தொழிலதிபர் டத்தோ முனியாண்டி என்பவர் ("மலேசிய நண்பன்' 16.3.07). மேற்குறிப்பிட்ட கருத்தாளர்களின் வார்த்தைகளைச் சற்று ஆழ்ந்து நோக்கினால், இந்தியாவில் மத வெறி நடவடிக்கைகளில் ஈடுபடும் சங்பரிவார அமைப்புகளின் கருத்தைப் பிரதிபலிப்பனவாகவே இருக்கின்றன. இந்துமத உணர்வை அரசியல் நடவடிக்கைகளாக மாற்ற, இதுபோன்ற சமய சந்தர்ப்பப் பேச்சுக்கள்தான் அவர்களுக்கு உதவுகின்றன. இவர்களைப் போன்றவர்களிடையிலிருந்து தான் "இந்து நடவடிக்கைகள் குழு' போன்றவை உதித்திருக்கும் என சந்தேகிக்க இடமுண்டு. வெளிநாடு வாழ் இந்தியர்களிடத்திலும் புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்களிடத்திலும் மதரீதியான பிளவை ஏற்படுத்தி, இந்து உணர்வின் மேல் பார்ப்பனிய – சாதிய மேலாண்மையை நிறுவ, ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் அதன் உறுப்பு அமைப்புகளும் செயல்பட்டு வருவதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல, ஒரு சரா சரித் தமிழனின் லவுகீக வாழ்க்கை – கோயில் வழிபாடு, திருவிழாக் களியாட்டங்கள் ஆகியவற்றைப் போலவே பொதிந்திருக்கும் இன்னொரு அம்சம் தமிழ்த் திரைப்படங்கள். வளர்ச்சி பெற்றிருக்கும் தகவல் தொடர்பு சாதனங்களோடு, திரைப்படத்திற்கு இருக்கும் முதன்மையான தொடர்பு, உலகம் முழுவதும் இன்றைக்கு ஒரே நாளில் திரைப்படங்களை வெளியிடும் அளவுக்கு மேம்பட்டிருக்கிறது. அவ்வகையில் கடந்த ஆண்டு வெளியாகி மிகுந்த லாபம் ஈட்டிய ஒரு திரைப்படமாக, ரஜினி நடித்த "சிவாஜி' படத்தை எடுத்துக் கொள்வோம். "குறித்த நேரத்தில் இப்படம் காட்டப்படவில்லை என்பதற்காக திரையரங்க உடைப்பு, எரிப்பு, நச்சு மாவு வீச்சு, அடிதடி முதலானவையும் நடந்துள்ளன' என ("மக்கள் ஓசை' 20.6.2007) திருமாவளவன் என்பவர் எழுதுகிறார். மலாயாவை விடுங்கள். ஒவ்வொரு நாளும் யுத்தத்தில் எரிந்து கொண்டிருந்த யாழ்ப்பாணத்தில் இப்படத் தைக் காண, பத்து நாட்களுக்குப் பின்னரும் திரையரங்க வாயில்களில் நீண்ட வரிசையில் தமிழர்கள் காத்துக் கிடந்தனர் என்ற செய்தி, தமிழர்களின் மன உணர்வைப் படம் பிடித்துக் காட்டுவதாக இல்லையா? "வீழ்ச்சியுற்ற காலத்திலிருந்து கலையுரைத்த கற்பனைகளை நிலையெனக் கொண்டாடும் மன இயல்பினராக, தமிழர்கள் வாழ்வதே இதற்குக் காரணம்' என்கிறார் திருமாவளவன்.ஆனால் "சிவாஜி' திரைப்படத்திற்கு வரவேற்பும் கொண்டாட்டமும் இப்படி இருக்க, தமிழக அரசு தயாரித்த "பெரியார்' திரைப்படமோ மலேசியாவில் படாதபாடுபட்டு விட்டது. திரைப்படம் தயாரிப்பில் இருந்த காலகட்டத்திலிருந்தே "பெரியார்' படத்திற்கு எழுந்த கண்டனங்களும் எதிர்ப்பும் தமிழர்களைப் புரிந்து கொள்ளப் போதுமானவையாயிருந்தன. "இந்துக்கள் மனம் புண்படும்படி பாடல் எழுத வேண்டாம்' என வைரமுத்துவிடம் இந்து அமைப்பினர் வேண்டுகோள் ("மலேசிய நண்பன்' 3.4.07) விடுத்தனர்.
""தந்தை பெரியார் அவர்கள் 1929ஆம்ஆண்டு மலாயாவிற்கு வந்த போது, "அவர் இந்நாட்டிற்குள் நுழையக் கூடாது' என்று இந்து மத அமைப்பினர் தீர்மானம் போட்டு, அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மனு கொடுத்தனர். அந்த எதிர்ப்பை உடைத்தெறிந்து தந்தை பெரியார் அவர்கள், பல ஊர்களில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களில் உறையாற்றிவிட்டு வெற்றியுடன் திரும்பினார். மலேசியாவில் மட்டுமல்ல, தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களும் கூட பெரியாரை அவர்தம் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்டு புரிந்து கொள்ளாமல், ஒரு மரியாதைக்காக அவர் மீது மதிப்பு வைக்கின்றனர். பெரியார் கொள்கைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாததும், பகுத்தறிவு உணர்வை வளர்த்துக் கொள்ளாததுமே, தமிழர்களின் குழப்பமான சிந்தனைக்கு வழிகோலுகின்றன.
மலேசிய இந்திய காங்கிரஸ் இன்றைக்கு பலவாகப் பிளவுபட்டிருப்பது சாதிப் பிரச்சனைகளை முன்வைத்துதான். "ம.இ.கா. தேர்தலைச் சந்தித்த போதெல்லாம் சாதி அரசியல் நடத்துபவர் டத்தோ சிறீ சாமிவேலுதான்' என பதினாறு ஆண்டுகளுக்கு முன்பே ம.இ.கா.விலிருந்து பிரிந்து அய்.பி.எப். என தனிக்கட்சி தொடங்கிய டத்தோ எம்.ஜி. பண்டிதனின் ("மக்கள் ஓசை' 2.2.06) அறிக்கை கூறுகிறது. ம.இ.கா.விலிருந்து நீக்கப்பட்ட அம்பாங் முனியாண்டி என்பவரும், "ம.இ.கா.வில் அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் வலம் வருபவர்கள் சாமிவேலுவின் உறவுக்காரர்கள்தான். ம.இ.கா.வில் ஒரு ஜாதிக்காரர்களுக்கு மட்டுமே பட்டம், பதவி' என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார்.
"சாதிப் பித்து பிடித்தவர்களுக்கு ம.இ.கா.வில் இனி இடமில்லை' என சாமிவேலு ("தமிழ் குரல்' 28.1.06) இவர்களுக்கு பதில் சொல்லியிருந்தாலும், ம.இ.கா.வின் பிளவுகளுக்கும், இறுதியாக நடைபெற்ற மலேசிய தேர்தலில் ம.இ.கா. குறிப்பாக, சாமிவேலு பெற்ற தோல்விக்கும் முதன்மைக் காரணம், இவர்களிடம் குடிகொண்டிருக்கும் சாதி உணர்வுதான் என்பதை ஆராயத் தேவையில்லை.
தமிழர்களின் பண்பாட்டுச் செயல்பாடுகளில் இந்து மத மூட நம்பிக்கைகள் மேலாதிக்கம் செலுத்துவதால்தான், தமிழர்கள் இன்றைக்கு சாதி சங்கங்களாகப் பிளவுபட்டு நிற்கின்றனர். இத்தகைய சாதி சங்கங்களை வளர்த்துக் கொண்டே தான், மறுபுறம் இந்துத்துவ ஒருமைப்பாடு பற்றியும் இந்து சங்கங்கள் போதித்து வருகின்றன. ஒரு தமிழனோ, இந்தியனோ சாதியாகப் பிளவுபடாமல் இந்துவாக மட்டும் இங்கு இருக்கலாகாது. நாளுக்கு நாள் சாதி சங்கங்கள் பலம் பெற்று வருவதால்தான், மலேசியாவில் இன்று கல்விக் கூடங்களில் கூட சாதி சங்கங்கள் பண்பாட்டு நடவடிக்கைகள் என்ற போர்வையில் நுழையும் அவலம் நேர்ந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், பண்பாட்டு நிகழ்வுகள் என சாதி சங்கங்கள் தங்களது சங்கங்களின் முகவரியிலேயே மாணவர்களுக்கு "சான்றிதழ்கள்' வழங்குவதும், பரிசுப் பொருட்கள் தருவதும் இன்றைய மலேசிய கல்விக் கூடங்களில் இயல்பாகி வருகின்றன.
""இன்று பள்ளிகளில் அரசியலோடு சாதியும் உள்ளே நுழைந்து ஆதிக்கம் செலுத்துகிறது. ஒரு சில பள்ளிகளில் தலைமை ஆசிரியரும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும் ஒத்துப் போகாததற்கு, சாதிப் பிரச்சனையும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. ஆசிரியர்கள் சிலர் தாங்கள் படித்துக் கொடுக்கின்ற பிள்ளைகள் கீழ் சாதிக்காரர்கள் என்பதால், தன் பிள்ளைகளைத் தேசியப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். சில பிள்ளைகளை ஏசும் பொழுது, சாதிப் பெயரை குறிப்பிட்டுக் கொள்வதில் சில ஆசிரியர்களுக்கு கரும்பு கடிக்கிற மாதிரி. இன்றோ பல பிள்ளைகள் படிப்பை சுமையாகவும் ஆசிரியரை எதிரியாகவுமே நினைக்கின்றனர்'' என ("செம்பருத்தி', சூன் 07) இதழில் எழுதுகிறார் கா. கலைமணி.
புதிய தலைமுறை மாணவர்களிடம் கல்வி பயிலும் பிஞ்சுப் பருவத்திலேயே சாதி உணர்வை, நஞ்சாய் வளர்த்தெடுக்கத் தொடங்கியுள்ளன மலேசியாவின் சாதி சங்கங்கள். அடுத்த தலைமுறையில் மலேசியத் தமிழர்களிடையே சாதிச் சண்டைகள் பெருமளவில் நடக்க இப்போதே விதை தூவப்பட்டு வருகின்றன.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதை என அங்கலாய்ப்பதில் எவ்விதப் பயனுமில்லை.பெரியார் சொல்வது போல, இந்து மதம் ஒழியாத வரை சாதியம் ஒழியப் போவதில்லை. "மதம் ஒரு அபின்' என்று கார்ல் மார்க்ஸ் விமர்சித்தது, சாமானிய மனிதனுக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் சாதியின் பெயரால் பிளவுக்கும், சண்டை சச்சரவுக்கும், இந்திய / தமிழ்ச் சமூகத்தின் பின்னடைவுக்கும், வீழ்ச்சிக்கும் வழிகோலுவது இந்து மதம் அன்றி வேறொன்றுமில்லை! சாதிக்கொரு கோயில், வீதிக்கொரு தேரோட்டம் என தமிழ்ச் சமூகத்தில் உட்பூசல்கள் பெருகி வளர, சாதி சங்கங்களை அரவணைத்து அழியாது காப்பதையே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவைதான்,உலகம் முழுவதும் இந்து மத சங்கங்களும் இயக்கங்களும். இதைப் புரிந்து கொள்ளாதவரை, உலகின் எந்த மூலையில் வாழும் தமிழர்களும் இன – பண்பாட்டு – மொழி அடிப்படையில் ஓர்மை கொள்வது கடினமே.
(அடுத்த இதழிலும்)