Sunday, November 2, 2008

சுப.தமிழ்ச்செல்வனின் நினைவிற்கு...


சுப.தமிழ்ச்செல்வனின் நினைவிற்கு…




அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைப் பலிகொண்டு, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்ற ஈழ விடுதலைப்போரின் ஈகை வரலாற்றில் இன்னும் எத்தனை மாமணிகளை தாரை வார்க்க நாம் சித்தமாய் இருக்கிறோம் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே – நம் குலை பதறுகிறது. திலீபன், கிட்டு, தாணு... இன்று சுப.தமிழ்ச்செல்வன்.


புலிகளின் மீது மாற்றுக்கருத்துக் கொண்டவர்களையும் ஈழப்போராட்டம் குறித்து பாராமுகம் கொள்பவர்களையும் கூட தமது வசீகரப் புன்னகையால் கவர்ந்து, ‘தமிழீழ தாயகம் ஈழ மக்களின் தாகம்’ என்பதை மொழி கடந்து சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் சென்றவர் சுபதமிழ்ச்செல்வன். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உலகத்தின் கவனம் பெற்ற ஒரு கெரில்லா இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் தோழர்.தமிழ்ச்செல்வன் என்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.


எமது ஆற்றொணாத் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள எமக்கு வார்த்தைகள் இல்லை. இலங்கை இனவெறி அரசின் வான்வழித் தாக்குதலுக்குப் பலியான போராளிகளுக்கு ஏகலைவன் தோழமையின் வீரவணக்கங்கள்.


ஈழ (தமிழின்) செல்வனே

எம் கண்களின் முன்னே
உமிழ்கிறது...
உன் புன்னகையின் வசீகரம்
ஒற்றைக்கால் தாங்கி
நீ பயணித்த திசைகளில்
சமாதானத்தின் தூது செல்ல
உன் விரல் படர்ந்த
ஊன்று கோல் மட்டுமே இனி...

விடுதலையின் நீண்ட பாதையில்
துவண்டு வீழாமல்
தோழர்கள் நடைபயில
உடன்வரும் உன் நினைவுகள்

செவ்வணக்கம் தோழனே

- கா।இளம்பரிதி

(இக்கவிதை சென்ற வருடம் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவின் போது எழுதியது)