- இளம்பரிதி
மனமுவந்து ஏற்கிறேன். . .
உலகின் இரட்சகன் நானென
நல் மேய்ப்பன் நானென
பிரகடனம் செய்த கொடுங் குற்றத்தின் பொருட்டு
இப் பெருந் தண்டனையை -
நீதி பரிபாலனம் வழுவாத
உங்கள் சட்டப் புத்தக நெறிவழி
முன்னரே தீர்மானிக்கப்பட்ட
முறைமைகள்
பல உண்டெனினும்
எனக்கான தண்டனை முறைமையை
தெரிவு செய்யும் உரிமையைக் கூட
நான்
இழக்கப் போவதில்லை உங்களிடம் -
மின்சார நாற்காலியைப் புறக்கணிக்கிறேன்
நீங்கள் பரிகசித்த போதும் -
தண்டனைக்காகும் மின் அளவைப் பெருக்கி
நான் இரட்சிக்க நினைத்த
விளக்கு நெய்தூர்ந்து இருண்டுறங்கும்
எண்ணிறந்த பாவக்குடிகளின்
ஓலைக் குடில்களுக்கு அளியுங்கள் -
ஒளியும்
ஜீவனுமாயிருப்பவன் நானே;
தூக்குக் கயிற்றைப் புறக்கணிக்கிறேன்
நீங்கள் ஏளனம் செய்தாலும் -
மாற்றுடுப்பும் உறையுளுமில்லாத
நான் கற்பிக்க விழைந்த
பாவ நிழல் படியாத
கருப்பு
வெள்ளை மஞ்சள் பழுப்பு இளஞ்சிவப்புக்
குழந்தைகள் துயில
தூளிக் கயிறும் தொட்டில் துணிக்கு
அவிழ்ந்த என் அங்கியும் தாருங்கள் -
மேய்ப்பனின் மடி உறங்கும்
நல்லாடுகள் குழந்தைகளே;
கில்லட்டினைப் புறக்கணிக்கிறேன்
நீங்கள் எள்ளி நகையாடினாலும் -
யெருசலேம் வீதியெங்கும் அரற்றி நிற்கும்
அடிமை விலங்கு உடைபடா
யூதப் பெண்டிரின் அரசனுக்கு
மடிய மனமொப்பவில்லை
தலை துண்டித்த உடலமாய்;
இது கிறித்துவின் குருதி
யாவரும் பருகக் கையளியுங்கள்
இது பரிசுத்த உடலம்
யாவரும் புசிக்கப் பரிமாறுங்கள்
நானே சுமந்துவருவேன்
எனக்கான கொலைக்கருவியை -
எம் குலத்தொழிற் பட்டறையில்
எஞ்சிய மரத் தூணிலிருந்து
நானே செதுக்கிய
சிலுவை;
அளவும் எடையும் உறுதிசெய்யப்பட்ட
குற்றங்களுக்கொப்ப உள்ளதாவென
நேர்செய்து கொள்ளும்
உங்கள் உரிமையில்
தலையிடப் போவதில்லை நான் -
என் இறுதி விருப்பம்
அறிந்து கொள்வீர்க ளெனில்
. . . .
குழந்தைகள் உறங்க அங்கியை இழந்த
என் அம்மணம் மறைக்க
இடுப்பளவு துணியைத் தருவீர்க
ளென்பதுவே -
ஆயினும் அது எளிதல்ல
என் அன்புக்குரியவள் முக்காடிட்டு அணிந்திருக்கும்
படைப்பின் உண்மைகள் பொதிந்த
நிறமற்ற அத்துணி
உங்களிடம் கிட்டும் வரை
என் தண்டனையின் நிகழ்வுக்குக்
காத்திருக்கட்டும் காலம் -
அதுவரை
எனக்கான முள்முடி பின்ன
உங்களுக்குத் தடை யேதுமில்லை
புதியகாற்று - ஜனவரி 2007