- இளம்பரிதி
எந்தவொரு பொருளின் இருத்தலும் தனித்த ஒன்றல்ல; அதன் இயக்கமும் கூட. ஒரு பொருளின் இருத்தல் மற்றும் இயக்கத்தின் புலனுணர்வே சிந்தனை கருத்து உருக்கொள்ள ஆதாரமாகின்றது. ஒன்று பிறிதொன்றைத் தழுவியதாக மற்றதைச் சார்ந்ததாகவே பொருட்களின் இருத்தலும் அவற்றின் அசைவியக்கங்களும். இங்கு பொருள் என்பதன் உயர்திணை வடிவமாக மனித உயிர் உடல் கவனம் கொள்ளப்படுகிறது. எல்லா மனித உயிர்களும் ஒரே மதிப்புடையன என்பது, பொது அறங்களுக்கான அளவுகோல். ஆனால் பொது அறங்கள் என்பவை அவை எழுதப்பட்ட காலங்களிலிருந்து இன்று வரையும் பொது நிலையில் இவ்வுலகில் எங்குமே நடைமுறைப்படுத்தப்பட்டதில்லை.
பொருட்களின் இருத்தலும் இயக்கமும் மனித சிந்தனைக்கு வித்தூன்ற, கருத்துகள் தத்துவங்களாகத் தொகுக்கப்பட்டன. தத்துவங்கள் மதங்களைத் தோற்றுவித்தன. மதங்கள் அரசியல் வகையினங்களாக உருப்பெற்றன. மனித இனங்களின் உயிர் வாழ்தலுக்கான தொடர் போராட்டங்களுக்கிடையே அறங்களின் மனித மதிப்புகள் அளவிடற்கரிய தூர இடைவெளிகளைக் கொண்டிருந்தன- கொண்டிருக்கின்றன. இத்தகைய இடைவெளிகளுக்கிடையில் தான் மனித வரலாறு கட்டியெழுப்பப்பட்டது. அறங்களின் பொது மதிப்பீடுகளின் பொய்த் தோற்றங்களைத் தழுவியே, மனித இன வரலாற்றில் எழுதப்பட்ட பிரதிகளின் மீதான அவ நம்பிக்கைகளும் மெல்ல தோற்றம் கொண்டு வருகின்றன.
வரலாறு என்பது அதனளவில் தேர்வு செய்யப்பட்ட குறிப்பான செய்யுட்பகுதி என்ற போதிலும், வரலாற்று உண்மைகள் என்பன அக்குறிப்பிட்ட செய்யுட்பகுதிக்குள் மட்டுமே காணக்கிடைப்பன அல்ல. புராணங்கள், காவியங்கள், பழங்கதைகள், வாய்மொழி வழக்காறுகள், கல்வெட்டுகள், நாட்குறிப்புகள், ரகசிய ஆவணங்கள், இன்னும் அகழ்ந்தெடுக்கப்படாத இடங்கள் மற்றும் பொருட்கள் என வரலாற்றின் உண்மைகள் எங்கெங்கும் விரவிக் கிடக்கின்றன. தேடிக் கண்டடையும் உண்மைகளின் வழியில் ‘வரலாற்றை எழுதுதல்’ நிகழ்ந்த வண்ணமிருக்கிறது.
பிரபஞ்ச வரலாறு, உலக வரலாறு, மனித இனங்களின் வரலாறு என யாவற்றிலும் ‘வரலாற்றை எழுதுதல்’ என்பது அறிவியல் வளர்ச்சி நிலைகளுக்கேற்ப நாள்தோறும் மாற்றங்களை - மறுப்புகளை - மாற்று முன்மொழிவுகளை உள்ளடக்கியே தீர வேண்டிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. மார்க்சிய வார்த்தைகளில் சொல்வதானால் இத்தகைய நெருக்கடி, கருத்து முதல்வாதக் கண்ணோட்டத்தில் ஒரு வரலாற்று முரண். பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் ஒரு வரலாற்றுத் தேவை. வரலாற்று முரணும் வரலாற்றுத் தேவையும் ஒன்றையொன்று நேர்கோட்டில் சந்திக்கும் இரு அணிகளாகக் களமிறங்க, மனித இன வரலாறு இரு எதிர்வுகளின் வரலாறாகவே, தன் வரலாற்றை எக்காலமும் எழுதி வந்து கொண்டிருக்கிறது.
உலக வரலாறு ஒருபுறமிருக்க, நாம் கவனம் குவிக்க வேண்டிய இந்திய வரலாறு அதன் வரலாற்றுக் காலம் தொட்டு எங்கிருந்து, யாருக்காக, யாரால் எழுதப்பட்டது? பாஹியான், யுவான் சுவாங் முதல் அராபிய வணிகர்கள், கிறித்துவ துறவிகள், போர்ச்சுக்கல், டச்சு, ஆங்கிலேய காலனிய அறிஞர்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மேற்கத்திய சிந்தனைகள் வரை, இந்திய வரலாற்றின் மீதான உண்மைகளின் குறுக்கீடுகளால் இந்திய வரலாறு தன்னை மீளாய்வு செய்து கொண்டே வந்திருக்கிறது என்பதை உரத்துச் சொல்ல இயலாவிடினும் மறுப்பதற்கில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலகின் பல திசைகளிலும் பரவிய மார்க்சிய வெளிச்சத்தில் இந்திய இடதுசாரி அறிஞர்களால் கவனம் கொள்ளப்பட்ட இந்திய வரலாறு, இருபதாம் நூற்றாண்டில் வடிவ ஒழுங்கு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதே. இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் இடதுசாரி அறிஞர்களின் மீளாய்வுகள் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன.
மேலைச் சிந்தனை மயக்கங்களில் மூழ்கி விடாமலும், இந்திய வைதீக மரபை முற்றாகப் புறந்தள்ளியும் இந்திய வரலாற்றின் தொல் மரபை மீட்டு, வரலாற்றை எழுதுவதற்கான உண்மையான வழிகளைக் கண்டடைந்தவர் பேரறிஞர் அம்பேத்கர். வரலாற்றுக் காலம் தொட்டு, உலக வரலாறு மதங்களின் வரலாறு என்று அளவிடப்பட்டது போல, இந்திய வரலாறு ‘சாதிய வரலாறு’ என வரையறுத்தவர் அம்பேத்கர். ஆரிய-திராவிட போர்களுக்கு முன் நாகர்களின் மூதாதையரைத் தேடிப் பயணித்தவர். நேருவைப் போன்றவர்கள் பருந்துப் பார்வையில் வரலாற்றை நோக்கியவர்கள் எனில், அம்பேத்கர் தம் வரலாற்றைத் தேடி சொந்த நிலத்தில் பயணித்தவர்.
‘வரலாற்றை எழுதுதல்’ என்பதும் அறிஞர்களாக வாழ்வது என்பதும் இங்கு பலருக்கும் காற்றடைத்த பலூன்களில் நிலத்தின் மீது பறந்து திரியும் உல்லாசமும் சாகசமும் ஒருங்கே அமையும் செயல்பாடு. வரலாற்றை மீளாய்வு செய்வதென்பது நிலத்தை உழுது, தோண்டி, செப்பனிட்டு தன் வாழ்க்கைக்கான அலகாகப் புனரமைப்பது. இத்தகைய நோக்குநிலைச் செயல்பாட்டில் அம்பேத்கர் தனித்ததொருவர் எனினும், தனியொருவர் அல்ல. கடந்த இரு நூற்றாண்டுகளில் ஜோதிபா புலே, நாராயணகுரு, தந்தை பெரியார் என அவருக்கு இணக்கமான ஓர் இயக்கமே உண்டு. இந்து மத மரபினால் கடும் எதிர்ப்புக்குள்ளான இவர்களை இடதுசாரி அறிஞர் மரபும் புறந்தள்ளியே வைத்ததற்கான உடனடிக் காரணம் ஆராய்ச்சிக்குரிய தொன்றும் அல்ல. ஆம், அது இவர்கள் அனைவரின் செயல்பாடுகளிலும் நீரோட்டமாக அமைந்திருந்த ‘பார்ப்பனிய எதிர் மரபு’ அதாவது பவுத்த மரபு.
மொழி, பண்பாடு, அரசியல் கோட்பாடு ஆகிய அறிவியக்கச் செயற்தளங்களில் இந்துமத எதிர் மரபை உள்வாங்கி, பவுத்த மரபின் அடியொற்றி தமிழகத்தில் இயங்கியவர் அயோத்திதாசப் பண்டிதர். காலத்தால் அம்பேத்கருக்கு முன்னவராக இருந்தும், எல்லா தொல்குடி மரபினருக்கும் வாய்க்கப்பெற்ற அடையாள மறுப்பே அயோத்திதாசருக்கும் நிகழ்ந்தது. சாதி இந்துக்களாக சிந்திக்கப் பழகிய அறிஞர்களாலும் இந்திய பகுத்தறிவாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட ஆரிய-திராவிட போர்க் குரல்களுக்கிடையில் அம்பேத்கரும் அயோத்திதாசரும் கவனம் கொள்ளப்படாமல் இருந்ததொன்றும் வியப்புக்குரியதல்ல. நிலப்பிரபுத்துவத்தால் ‘அரிசனங்கள்’ என்றும் காலனியவாதிகளால் ‘தாழ்த்தப்பட்டவர்கள்’ என்றும் குட்டி முதலாளிய வர்க்கத்தினரால் ‘பட்டியல் இனத்தவரெ’ன்றும் அழைக்கப்பட்ட இந்திய தொல்குடி மக்களின் அரசியல் பங்கேற்பும் அதிகார மீட்பும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதில் பார்ப்பன - சூத்திர அதிகார வர்க்கத்தினருக்கு இருந்த ஓர்மையுணர்வே அன்றி வேறு காரணமல்ல.
தீண்டாமை, வன்கொடுமைகள், சாதியின் பெயராலான சுரண்டல்கள் ஆகியவற்றிற்கெதிராக தமிழக ஒடுக்கப்பட்ட மக்களின் இரு நூற்றாண்டுகள் அளவிலான போராட்டங்களின் வரலாறு, ஆவணப்படுத்தப்படாமலும் அறிஞர் குழுமங்களுக்குள் விவாதிக்கப்படாமலும் அம்மக்களின் மீதான புறந்தள்ளலைப் போலவே கவனம் கொள்ளப்படாமலும் இருந்தது. 1991இல் அம்பேத்கரின் நூற்றாண்டை ஒட்டி இந்திய தொல்குடி மக்களிடையே எழுந்த அரசியல் புத்தெழுச்சியே, அம்பேத்கரின் எழுத்துகள் தொகுக்கப்படவும் பொதுத் தளத்தில் விவாதிக்கப்படவும் காரணமாக அமைந்தது. இப்புத்தெழுச்சிக்குப் பிறகே, புலே, நாராயணகுரு முதல் அயோத்திதாசப் பண்டிதர் வரை பதிப்பிக்கப்படவும் வாசிக்கப்படவும் வாய்ப்புகள் உருவாகின.
அயோத்திதாசரின் ‘தமிழன்’ பத்திரிகையின் நூற்றாண்டை ஒட்டி, எழுத்தாளர் ரவிக்குமார் போன்றவர்களால் முன்மொழியப்பட்ட ‘தலித் வரலாற்று மாதம்’ - வேனிற்கால வெப்பம் போல கடந்த இரு ஆண்டுகளில் ஆங்காங்கே நிகழ்வுகளைக் கட்டமைத்து வருகிறது. ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டும். மதுரையில் இளம்பரிதி (இக்கட்டுரையாளர்), ஸ்டாலின் ராஜாங்கம், அசோக், ஜெகநாதன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ‘அம்பேத்கர் படிப்பு வட்டம்’ என்ற அமைப்பே ‘தலித் வரலாற்று மாதம்’ தொடர் நிகழ்வாகியிருப்பதற்கான தொடக்கம் எனலாம். அம்பேத்கர் படிப்பு வட்டம், அயோத்திதாசர் சிந்தனைகளின் மீதான நான்கு நிகழ்வுகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது. சென்னை பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியில் ‘அயோத்திதாசர்-அம்பேத்கர் ஆய்வு மாணவர் வட்டம்’ என்ற அமைப்பின் கீழ் 19.4.2008 அன்று ‘தலித் வரலாற்று மாதம்’ சென்னை ‘அய்க்கப்’ அரங்கில் ஒரு நிகழ்வானது.
இந்நிகழ்வில் விரிவுரையாளர் பாலமுருகன் தமது ஆய்வுரையில், “சோழர் கால கல்வெட்டுகளை அதிலும் குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் காணக் கிடைத்த கல்வெட்டுகளை முன் வைத்து பேரா. ஆ. சிவசுப்பிரமணியம் தமது ஆய்வு நூலில் முன் வைக்கும் விவாதங்களுக்கு மாற்றாக, நான் வாசித்த வரையில் இக்கல்வெட்டுகளின் தன்மை பார்ப்பனிய எதிர்ப்பு மரபை உள்ளடக்கியதாக பவுத்த மரபைக் கொண்டதாக இருக்கிறது. முற்காலப் பாண்டியர் காலத்தில் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்றில், பாண்டிய மன்னன் தன் உறவினருக்கு பவுத்த அறவியலைக் கற்றுத் தந்ததற்காக, ஓர் பவுத்த துறவிக்கு விகார் கட்டிக் கொடுத்ததாகக் காணக் கிடைக்கிறது. இது பவுத்தம் அன்றைக்கே நிறுவனமாகி இருந்தது என்பதையே சுட்டுகிறது” என்றார்.
இடங்கை வலங்கைப் பிரிவு சோழர்கால ஆட்சியியல் வகையினம் என்றும் இடங்கைப் பிரிவில் பள்ளர், அருந்ததியர், கம்மாளர் மற்றும் சேவைச் சாதியினர் உள்ளடங்கியிருந்தனர் என்றும் வலங்கைப் பிரிவில் பார்ப்பனர், வெள்ளாளர், கள்ளர் இவர்களோடு பறையர்களும் இருந்தனர் என்றும் இப்பிரிவினருக்கு இடையேயான மோதல்களே இடங்கை வலங்கை சண்டைகளாகக் குறிப்பிடப்படுகின்றன எனவும் இதுவரையான வாசிப்புகள் (கல்வெட்டுகள்) தெரிவித்து வந்தன. பாலமுருகன் இக்கூற்றுக்கு வலுசேர்க்கும் விதமாக, சோழர் காலத்திய நிலவுடைமைச் சமூகத்தில், குடிப்படையாக ‘நாடு’’ எனும் அமைப்பின் காவலர்களாகவும் அதற்காக ‘தேவதான’ நிலம் பெற்றவர்களாகவும் ஆளும் வர்க்க விசுவாசிகளாகவும் பறையர்கள் இருந்தனர் என மெய்ப்பிக்கின்றார்.
சமூக அணிசேர்க்கையின் இயல்பில் இடங்கைப் பிரிவினர் ஒடுக்கப்படுகிற சுரண்டப்படுகிற குடிமக்கள் பிரிவினராகவும் வலங்கைப் பிரிவினர் ஒடுக்கும் அரசதிகார ஆளும் வர்க்கமாகவும் நிலைப்பெற்றிருந்தனர். சோழர் கால ஒடுக்குமுறைக்கு எதிராக அணியமாகிய உழைக்கும் மக்கள் பிரிவினராக இடங்கைப் பிரிவினரைக் கொள்ள முடிகிறது. சுரண்டிப் பிழைத்த ஆளும் வர்க்க ஆதிக்க சாதி பிரிவினருக்கு ஊழியம் செய்யவே பறையர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ‘பறையர் அடிமைப்பட்டு இருக்கவில்லை’’ என நிறுவ முயற்சிக்கும் பாலமுருகன், நிலவுடைமை பிற்போக்குச் சமூகத்தின் வரலாற்று இருப்பை எங்ஙனம் வகைப்படுத்த முனைகிறார்? இது தலித் வரலாற்றியல் நோக்காக இருக்க முடியுமா?
அடுத்துப் பேச வந்த ஆய்வாளர் ரகுபதி, “1950க்கு முன்பு வரை சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளான எம்.சி.ராஜா, ரெட்டமலை சீனிவாசன், வீரையன், சகஜானந்தா ஆகியோரிடம் இருந்த கூட்டுணர்வும் நேர்மையான அரசியல் செயல்பாடும், தற்பொழுது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் இல்லாமல் போய்விட்டது. சுதந்திரத்திற்குப் பின் தேர்தல் அரசியலில் இடஒதுக்கீடும் பிரதிநிதித்துவமும் கட்சி நலனை சார்ந்ததாக மாறிவிட்டது. தலித் இயக்கங்கள் வளர்நிலை அடைந்து விடுதலைக்கான போராட்டங்கள் விரிவடைவதற்குப் பதிலாக சுருங்கிக் கொண்டே வருகின்றன. தேர்தல் கூட்டணி என்ற பெயரில் அரசியல் கட்சிகளோடு தலித் இயக்கங்கள் சமரசம் செய்து கொள்கின்றன” என விமர்சனங்களை முன் வைத்தார்.
சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் ஆய்வு மாணவரான பாலசுப்பிரமணியன், திருநெல்வேலி மாவட்ட கிராமமான திருப்பணி கரிசல்குளத்தை முன்னிறுத்தி, தன் ஆய்வுகளை முன்வைத்தார். திருப்பணி கரிசல்குளம் தமிழகத்தின் ஒரு சோற்றுப் பதம். ஒடுக்கப்பட்ட மக்களே மண்ணின் மைந்தர்கள் என்றும், ஆதிக்க சாதியினராலும் வந்தேறிகளாலும் மய்யத்திலிருந்து விரட்டப்பட்டு விளிம்பு நிலைக்கு வந்தவர்கள் என்றும், கடின உழைப்பு ஒன்றையே வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு, தமது இருத்தலுக்காகப் போராடிக் கொண்டிருப்பவர்கள் என்றும் மய்ய நீரோட்ட வாழ்வில் அரசியலில் தம்மை இணைத்துக் கொள்ள முனைபவர்கள் என்றும் நாம் அறிந்த வரலாற்றுச் சித்திரம் ஒன்றையே மீண்டும் மீள்வாசிப்பு
செய்தார் பாலசுப்பிரமணியன்.
நாடார்கள் சாதி இந்துக்களின் அணிக்குச் சென்று விட்டனர். ஓர் அரசியல் கட்சிக்குத் தேவையான உழைப்பு எதுவுமின்றி அவர்களின் பொருளியல் பின்புலமே அவர்களின் அடித்தளம் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும்,தி.மு.க.விலும் லகுவாகப் பதவிகளைப் பெற்றுத் (சரத்குமார், ராதிகா செல்வி, பூங்கோதை) தரும். பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் இடையிலான அரசியல் ரீதியான இணக்கம், இன்றைக்கும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. இவர்கள் இருவரிடமிருந்தும் அருந்ததியர்கள் வெகுதூரத்தில் விலகி இருக்கின்றனர்.
ஆனால் விட்டு விலகிப் போன நாடார்களையும், நீண்ட கால எதிர் அணியிலிருக்கும் முக்குலத்தோரையும் ‘தமிழர்’’ எனும் அடையாளத்தில் இருத்தி, மய்ய நீரோட்ட அரசியலில் அதிகார மீட்சி பெறலாம் எனும் விடுதலைச் சிறுத்தைகளின் கனவு பலனளிக்குமா? நம்மால் அவர்களுக்கு ஆகப்போவது எதுவுமில்லை. அதிகாரப் பங்கீடு என்பது ஏற்கனவே அவர்களிடம் நடைமுறையில் இருக்கிறது. மய்ய நீரோட்ட சமூக வாழ்வுக்கான (சமூக சமத்துவத்திற்கான) வழி, மய்ய நீரோட்ட அரசியலில் நீக்கமற நிறைவது அல்லது சரணடைவது என்பது, தலித் வரலாற்று மீட்புவாதமாக வரும் காலங்களில் முன்வைக்கப்படும் எனும் ஆபத்தை முன்னறிவிக்கக் கடமைப்பட்டவனாகிறேன்.
அடுத்துப் பேச வந்த பல்கலைக்கழக மாணவி ரத்னமாலா, தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித்துக் கொன்ற அரச பயங்கரவாதம் குறித்து ஊடகங்களின் பார்வையைப் பதிவு செய்தார். இப்படுகொலை நிகழ்த்தப்பட்ட பிறகான ஒரு மாத கால பத்திரிகைகளை தன் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். இப்படுகொலை விசாரணைக்காக நியமிக்கப்பட்ட மோகன் ஆணையக் குழு அறிக்கையிலும், இறந்து போனவர்களின் முதல் தகவல் அறிக்கையிலும் சொல்லப்பட்டிருந்த ‘நீரில் மூழ்கி இறந்தனர்’ என்ற ‘முன் முடிவை’ ‘தினத்தந்தி’ முன்கூட்டியே செய்தி எனும் போர்வையில் வெளியிட்டிருந்தது. மொத்தத்தில் தாமிரபரணி படுகொலைகள் குறித்த உண்மைகள் எதுவும் வெளிவரவில்லை” என ஊடகங்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் அவர்களின் போராட்டங்கள் குறித்தும் கொண்டிருக்கும் ஒவ்வாமையை (கருத்தியல் தீண்டாமை) அம்பலப்படுத்தினார். ஆனால், ஊடகங்களின் உணர்ச்சியற்ற செய்தி அறிக்கையைப் போலவே ரத்னமாலா, தன் ஆய்வுக் குறிப்புகளையும் தயாரித்து வழங்கியதாகவே இருந்தது.
அடுத்துப் பேசிய ஸ்டாலின் ராஜாங்கம் தனது உரையில், “புராணங்களே இந்தியாவின் வரலாறாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பார் அம்பேத்கர். முன் தீர்மானிக்கப்பட்ட நமது மனநிலை நம்முடைய வரலாற்றையே வேறொரு கோணத்தில் பார்க்கத் தவறி விடுகிறது. அயோத்திதாசர் நந்தனை ஒரு மன்னனாக சித்தரிப்பதை நாம் ஏற்றுக் கொள்ள நமக்கு மனத்தடைகள் இருக்கலாம். நந்தனை சாமானிய மனிதனாக தெய்வத்தோடு கலந்து விட்டதாகக் கதையளந்தார்கள். ஆனால் மதுரை மேலூர் அருகிலுள்ள வஞ்சி நகரில் 21 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளர் சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட கந்தன், இன்று அம்மக்கள் நடுவே நடுகல் தெய்வமாகி இருக்கிறார். இன்றைய சூழலில் இவரைப் போன்றவர்களைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது” என தலித் வரலாறு எங்ஙனம் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறு இத்தகையதாக ஆவணப்படுத்தப்பட, அம்மக்களின் விடுதலைப் போராட்டப் பாதையின் திசை வழியைத் தீர்மானிக்க வேண்டியவர்களாக நாமிருக்கிறோம்.
இறுதியாகப் பேச வந்த அயோத்திதாசர் சிந்தனைகளின் தொகுப்பாசிரியர் ஜி. அலாய்சியஸ், “பல்கலைக் கழகத்திற்கு வெளியே தன்முனைப்புடன் சில மாணவர்கள் கூடி இப்படியொரு நிகழ்வை சாதிப்பது, வேறு எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லை. நம் மாணவர்களின் திறன் அயோத்திதாசர் குறிப்பிடுவது போல, ‘கண்டுபடிப்பது தான் படிப்பு, மீதமெல்லாம் தெண்டப்படிப்பு.’ தலித் இயக்கங்களின் இருப்பைக் கடந்து, தலித் மக்களின் அரசியல் அடித்தளமும் சமூக உணர்வும் விரிவடைந்து சரியாகவே இருக்கிறது. இச்சூழலை நாம் சரியாக மதிப்பிட வேண்டும்” எனக் கூறி மாணவர்களின் இந்த அறிவியக்கத்தை ஊக்கப்படுத்தினார். பல்கலைக்கழக மாணவர் பொன்னுசாமி நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
சமரசமற்ற போராட்டங்களும், அளப்பரிய தியாகங்களுமே பேரறிஞர் அம்பேத்கர் நமக்குக் கையளித்துச் சென்ற அரசியல் திசை வழி என்பதை, தலித் வரலாற்று மாதத்தை முன்னெடுக்கும் இச்சூழலில் உணர்வோம். ‘வரலாற்றை எழுதுதல்’’ எனும் நிறுவன இருப்பின் மீதான மறு வாசிப்பையும் தொல்குடி மக்களின் வரலாற்று மீட்பையும் நிகழ்த்துவோம்.
- தலித்முரசு - ஏப்ரல் 2008